You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு அரசின் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை திருநங்கைகளுக்கும் கிடைக்குமா?
- எழுதியவர், தங்கதுரை
- பதவி, பிபிசி நியூஸ்
- பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுத் தகுதி அடிப்படையில் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதி உடையவர்கள் எனக் கண்டறியப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் முதல் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், குடும்ப அட்டை வைத்திருக்கும் திருநங்கைகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என திருநங்கைகள் கோரிக்கை வைக்கின்றனர். திருநங்கைகள் மகளிர் உரிமைத் தொகை கேட்பதற்கான காரணம் என்ன? திருநங்கைகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்குவது குறித்து அமைச்சர் சொல்லும் விளக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு அறிவித்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைக் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் 1.63 கோடி குடும்பத் தலைவிகள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற வேண்டி விண்ணப்பித்து இருந்தனர். அதில் தேர்வான 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு நேரடியாக 1000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் மாதம் தோறும் செலுத்தப்படுகிறது. 56 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்யலாம் எனத் தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் செப்டம்பர் 18-ம் தேதி முதல் 30 நாட்களுக்குள் தாலுகா, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இ- சேவை மையம் உள்ளிட்ட இடங்களுக்குச் நேரில் சென்று உரிமைத் தொகை பெற மேல் முறையீடு செய்து வருகின்றனர். இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் திருநங்கைகளை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருநங்கைகளுக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறார் திருநங்கைகளுக்கான சமூக செயல்பாட்டாளர் பிரியா பாபு.
பிபிசி தமிழிடம் அவர் பேசியபோது, "திருநங்கைகளான எங்களில் பலரும் இன்றளவும் விளிம்பு நிலைச் சமூகமாக இருந்து வருகிறோம். கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான தேசியப் புள்ளி விவரத்தின்படி தமிழ்நாட்டில் 25,000- க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வந்ததாக கூறியது. தற்போது மூன்று மடங்கிற்கும் அதிகமான திருநங்கைகள் தமிழ்நாட்டில் இருக்கலாம்," என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாடு அரசு தற்போது குடும்பம் அட்டை வைத்திருக்கும் பெண்களுக்கு தகுதி அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தில் குடும்ப அட்டை வைத்திருக்கும் திருநங்கைகளுக்கும் அதனை வழங்கிட அரசு முன்வர வேண்டும்.
இது தொடர்பான கோரிக்கையை மனுவாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் வழங்கினோம். இந்தக் கோரிக்கை மனு முதல்வரின் பார்வைக்கு எடுத்துச் சென்று தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி வழங்கினார்," என்றார்.
"அனைத்து திருநங்கைகளுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும்"
"தமிழ்நாடு அரசின் சமூக நலத் துறையின் கீழ் 40 வயதை பூர்த்தி செய்த திருநங்கைகளுக்கு மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. எங்களது சமூகத்தில் அனைவரும் வேலைக்குச் செல்வது இல்லை, சிலர் மட்டும் செல்கின்றனர்.
இது போன்ற நிலையில் எங்களது சமூகத்தை முன்னேற்ற அரசு முன் வர வேண்டும். எனவே, குடும்ப அட்டை பெற்றவர்கள், பெறாதவர்கள் என பாகுபாடுகளைப் பார்க்காமல் அனைவருக்கும் உரிமைத்தொகை கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என்பதே திருநங்கைகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது."
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட திருநங்கைகளின் எண்ணிக்கை குறைவு என்ற நிலையில் சமூக நலத்துறையின் கீழ் அனைத்து திருநங்கைகளையும் பதிவு செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மாதாந்திர திருநங்கைகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது எனத் தெரிவித்த அவர், இதில் இணைய வசதியுடன் திருநங்கைகள் பதிவு நடைபெற்று வருகிறது என்றும், எனவே இது குறித்து சமூக நலத்துறை விழிப்புணர்வை அதிகரித்து தமிழ்நாட்டில் வசிக்கும் திருநங்கைகளின் புள்ளி விவரத்தைப் பெற்று அதன் அடிப்படையில் அனைவருக்கும் உதவிகளை செய்திட முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
மகளிர் உரிமைத் தொகை குறித்து ஆலோசனைக் கூட்டம்
இது குறித்து மதுரை மாநில அரசின் முக்கிய அதிகாரி ஒருவர் பிபிசியிடம் பேசிய போது, "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் திருநங்கைகளை இணைப்பது குறித்து தற்போது வரை எந்த அறிவிப்பும் வரவில்லை.
இத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வது குறித்து மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்டவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி சென்னையில் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் சில காரணங்களால் அந்த ஆலோசனைக் கூட்டம் தேதி மாற்றப்பட்டு, ஆக். 5 அல்லது 6-ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையில் நிராகரிக்கப்பட்டவர்களை எப்படி இணைப்பது, யாரையெல்லாம் சேர்ப்பது என்பது குறித்து தெளிவான விளக்கம் கிடைக்கும். இதில் திருநங்கைகள் மகளிர் உரிமைத் தொகை குறித்து பேச வாய்ப்புகள் இருக்கலாம்," என கூறினார்.
திருநங்கைகளுக்குக் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா?
இந்தக் கேள்விக்குப் பதில் அளித்த சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், "தமிழ்நாட்டில் சமூக நலத்துறையின் கீழ் திருநங்கைகளுக்கு உதவித் தொகை திட்டம், திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழில்முனைவோர் கடன் உதவித் தொகை, சிறு சேமிப்புத் திட்டம் என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சமூக நலத்துறையின் தகவலின்படி தமிழ்நாட்டில் சுமார் 10 ஆயிரம் திருநங்கைகள் தங்களை பதிவு செய்து இருக்கின்றனர்.
40 வயதிற்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு 1500 ரூபாய் மாதாந்திர உதவித் தொகை தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் 1482 திருநங்கைகள் பயன் பெற்று வருகின்றனர்", என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் 3,209 திருநங்கைகளுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் திருநங்கைகள், திருநம்பிகள் என தனித்தனியாக குடும்ப அட்டைகள் வழங்கப்படவில்லை. கடந்த ஆட்சியில் மூன்றாம் பாலினத்தவர் எனக் குடும்ப அட்டையில் குறிப்பிடப்பட்டு கொடுக்கப்பட்டது.
தற்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி சூட்டிய பெயரான 'திருநங்கை' எனக் குறிப்பிடப்பட்டுக் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. சில குடும்ப அட்டையில் 5 திருநங்கைகள் இருக்கின்றனர், சிலர் தனியாகக் குடும்ப அட்டை பெற்று இருக்கின்றனர்.
திருநங்கைகளுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை திருநங்கைகள் மனுவாக என்னிடம் வழங்கினர். அந்த கோரிக்கை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
அதனை ஆராய்ந்து 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தில் திருநங்கைகளின் குடும்ப அட்டையை இணைப்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார்", என கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)