பிரதமர் மோதியின் தாயார் ஹீரா பா காலமானார்

பிரசுரிக்கப்பட்டது

பிரதமர் நரேந்திர மோதியின் தாயார் ஹீரா பா உடல்நலக்குறைவு காரணமாக ஆமதாபாத் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 99.

“ஒரு மகிமையான நூற்றாண்டு, இறைவனின் காலடியை அடைந்திருக்கிறது” என்று தனது தாயின் மறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

ஹீரா பா மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள விஸ்நகரில் பிறந்தார். ஹீரா பா பிறந்த சில நாட்களில் அவரது தாயார் அதாவது பிரதமர் மோதியின் தாய்வழி பாட்டி இறந்துவிட்டார். அது உலகம் முழுவதும் தொற்றுநோய் ஏற்பட்டிருந்த காலம்.

"என் அம்மாவின் குழந்தைப் பருவம் தாயின்றி கழிந்தது, அம்மாவைப் பார்க்க முடியவில்லை, மடியில் தலையைப் புதைத்துக் கொள்ள முடியவில்லை, அம்மாவுக்கு எழுத்து அறிவு கூட இல்லை, பள்ளிக்குச் செல்லவில்லை. பள்ளிக்கு.வீட்டின் கதவைக்கூட பார்க்கவில்லை.வீட்டில் எங்கும் ஏழ்மையை மட்டுமே பார்த்தார்” என்று தனது தாய் பற்றி மோதி அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

மறைந்த தனது தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோதி அவரது உடலைச் சுமந்து சென்றார்.இறுதிச் சடங்கில் பங்கேற்ற மோதி, சிதைக்கு தீ மூட்டினார். பின்னர் ஏற்கெனவே ஒப்புக் கொண்ட அரசு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோதி காணொளி வாயிலாகக் கலந்து கொண்டார்.

தலைவர்கள் இரங்கல்

பிரதமர் மோதியின் தாயார் மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஹீரா பா மோதியின் வாழ்க்கைக் குறிப்பு

ஹீரா பா, 1922ஆம் ஆண்டு குஜராத்தின் மெஹ்சானாவில் பிறந்தார். அவர் தேநீர் விற்பனையாளரான பிரதமர் மோதியின் தந்தை தாமோதர்தாஸ் முல்சந்த் மோதியை மணந்தார்.

2015ஆம் ஆண்டு ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜக்கர்பெர்க் உடனான பிரபல பேட்டியில், பிரதமர் மோதி தனது தாயைப் பற்றி பேசும்போது உணர்ச்சிவசப்பட்டார்.

பிரதமர் மோதி தனது தாயை தனது வாழ்க்கையின் தூண் என்று வருணித்தார். 2016ஆம் ஆண்டு மே மாதம் ஹீரா பா மோதி, டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நரேந்திர மோதியை சந்தித்தார்.

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது மகனும் நாட்டின் பிரதமருமான நரேந்திர மோதி அறிவித்த பணமதிப்பிழப்பு முடிவை ஹீரா பா ஆதரித்து கருத்து வெளியிட்டார். அப்போது அவரது பெயர் பட்டி தொட்டியெங்கும் பரவி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது.

இத்தனைக்கும் பிரதமரின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிற்பாடு ஹீரா பாவும் ஏடிஎம் வாயிலில் வரிசையில் காத்திருந்த படங்கள் அப்போது வெளிவந்து வைரலாயின.

கடந்த ஆண்டு, கோவிட்-19 தடுப்பூசியை வயதானவர்கள் போட்டுக் கொள்வதால் உடல் உபாதைகள் ஏற்படுவதாக வதந்தி பரவியபோது, ஹீரா பா தடுப்பூசி போட்டுக் கொண்ட காட்சிகள் வெளி வந்தபோதும் அவரது செயல்பாடு பரவலான கவனத்தை ஈர்த்தது.  

(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: