பிரிஜ் பூஷன் சிங் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை என்ன சொல்கிறது? அடுத்து என்ன நடக்கும்?

பிரசுரிக்கப்பட்டது

பா.ஜ.க., நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் சரண் சிங், இந்திய மல்யுத்த வீரர்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பா.ஜ.க. எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங், தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறி, மல்யுத்த வீரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இது தொடர்பாக டெல்லி காவல் நிலையத்தில் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த வழக்கு தொடர்பாக, டெல்லியில் உள்ள ரோஸ் கோர்ட் அவென்யூ நீதிமன்றத்தில், டெல்லி காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில், பிரிஜ் பூஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதேநேரத்தில், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பதிவு செய்யப்பட்டுள்ள, போக்சோ வழக்கை ரத்து செய்யுமாறு டெல்லி காவல்துறையினர் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்திடம் பரிந்துரைத்துள்ளனர்.

கடந்த பல வாரங்களாக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில், மல்யுத்த வீரர்களான சாக்‌ஷி மாலிக், வினீத் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் பிரிஜ் பூஷனை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தங்களை பாலியல்ரீதியாக பிரிஜ் பூஷன் துன்புறுத்தியதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதுதொடர்பாக கடந்த ஜூன் 7ஆம் தேதி, மல்யுத்த வீரர்களின் குழு, விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்தது.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த மல்யுத்த வீரர்கள், “இந்த விவகாரம் தொடர்பாக ஜுன் 15ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக” கூறினர்.

குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகள் என்னென்ன?

பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில், பிரிஜ் பூஷன் சிங் மீதான போக்சோ குற்றச்சாட்டை ரத்து செய்யுமாறு டெல்லி காவல்துறை பரிந்துரைத்துள்ளது.

இது தொடர்பான விசாரணையில், “போக்சோ வழக்கில் சிறுமியின் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை,” என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

பி.டி.ஐ., செய்தி முகமை தெரிவித்த தகவலின்படி, சிறுமியின் தந்தை அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கை ரத்து செய்யுமாறு டெல்லி காவல்துறை நீதிமன்றத்திடம் பரிந்துரைத்துள்ளது.

பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த போக்சோ வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை ஜூலை 4ஆம் தேதி, நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை இந்த போக்சோ வழக்கு ரத்து செய்யப்பட்டால், அது பிரிஜ் பூஷன் சிங்கிற்கு பெரும் நிம்மதியைக் கொடுக்கலாம்.

அதேபோல் ரோஸ் கோர்ட் அவென்யூ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை குறித்து அரசு வழக்கறிஞர் கூறுகையில், "பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த முதல் குற்றப்பத்திரிகையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பிரிவு 354, 354-ஏ மற்றும் 354-டி ஆகிய பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன," என்றார்.

மேலும் இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை வரும் ஜூன் 22 ஆம் தேதி நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.டி.ஐ., செய்தி முகமையிடம் பேசிய அரசு வழக்கறிஞர் அதுல் ஸ்ரீவஸ்தவா, இந்த வழக்கில் 2 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் உதவி செயலாளர் வினோத் தோமர் மற்றொரு குற்றவாளியாக இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ளார் என ’இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் தற்போது, பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள போக்சோ சட்டத்தை நீக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை காவல்துறை அறிக்கையின்படி பாட்டியாலா நீதிமன்றம் முடிவு செய்யும்.

பிரிஜ் பூஷனின் வழக்கறிஞர் என்ன சொல்கிறார்?

பிரிஜ் பூஷனின் வழக்கறிஞர், ஏ.பி.சிங் பிபிசியிடம் பேசியபோது, பிரிஜ் பூஷன் சிங் குற்றமற்றவர் என்றும், அரசியல் சதியால் அவர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார்.

"போக்சோ வழக்கில் பிரிஜ் பூஷனுக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அதனால் காவல்துறையினரே அந்த வழக்கை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்திடம் தற்போது பரிந்துரைத்துள்ளனர்.

எங்களுக்கு நீதியின் மீது நம்பிக்கை உள்ளது. எனவே உண்மை நிரூபிக்கப்பட்டு, அவர் குற்றமற்றவர் என்பது அனைவருக்கும் தெரிய வரும்,” என்று ஏ.பி.சிங் பிபிசியிடம் கூறினார்.

அதேபோல தன் மீது சுமத்தப்பட்டு வரும் அனைத்து குற்றச்சாட்டுகளையும், பிரிஜ் பூஷன் சரண் சிங் தொடர்ந்து மறுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: