பிக்பாஸ் ஷிவின்: திருநங்கைகள் மீது புதிய பார்வையை உருவாக்குகிறாரா?

பட மூலாதாரம், Shivin/Instagram
பாலினம் என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது என்கிறார் ஷிவின் கணேசன். பிக்பாஸ் சீசன் 6-இல் கடந்த ஆண்டு நமீதா மாரிமுத்து போலவே இந்த ஆண்டு பங்கேற்றிருப்பவர் ஷிவின்.
அவரது பிக்பாஸ் பங்கேற்பு திருநங்கைகள் உள்ளிட்ட பிற பாலினத்தவர் மீதான புதிய பார்வையையும் விவாதத்தையும் சமூக வலைத்தளங்களில் கடந்த சில வாரங்களாக உருவாக்கி இருக்கிறது.
"உங்களை நீங்கள் ஏற்றுக் கொண்டால் வேறு யாரும் உங்களை அசைக்க முடியாது" என்று தன்னைப் பற்றிய காணொளியில் இவர் கூறுகிறார்.
பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி 6 வாரங்கள் ஆகும் நிலையில், தொலைக்காட்சி ரசிகர்களின் பரவலான ஆதரவு அவருக்கு இருப்பதை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர்களும் பெரிய அளவில் வேறுபாடு இல்லாமல் அவரோடு பழகுகிறார்கள்.
ஆனால் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்குச் சென்றதற்கு அடிப்படையான காரணமே தனது பாலினம்தான் என்று தொலைக்காட்சியின் காணொளியில் அவர் கூறியிருக்கிறார்.
காரைக்குடி அருகே தேவக்கோட்டையில் பிறந்து வளர்ந்த இவர், "[திருநங்கையாக] இந்தியாவில் வாழ முடியாது என்பதால் எனது அம்மா சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தார். இந்தியாவில் இருந்து இவ்வளவு பேரை விட்டுவிட்டு சிங்கப்பூருக்கு வந்தது ஏன் என்றால் பாலினம்தானம் காரணம்" என்று கூறியிருக்கிறார்.
கடந்த பிக்பாஸ் சீசனின் பங்கேற்ற திருநங்கையான் நமிதா மாரிமுத்து சில நாள்களிலேயே போட்டியில் இருந்து விலகி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். உடல்நலக்குறைவு காரணமாக அவர் விலகியதாக அப்போது அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த முறை ஷிவின் கணேசன் தொடர்ந்து போட்டியில் இருப்பதுடன் பெரும்பாலான போட்டியாளர்களைவிட ரசிகர்களின் ஆதரவில் முன்னணியிலும் இருக்கிறார்.
சில நாள்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் பிடித்த போட்டியாளர் யார் என்று ஒவ்வொருவரிடமும் கமல் கேட்டபோது, பெரும்பாலானவர்கள் ஷிவின் பெயரைக் கூறினார்கள். தனது கருத்தை துணிச்சலாகக் கூறுவார் என்றும் அப்போது சிலர் தெரிவித்தார்கள்.
திருநங்கைகள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று பொதுச் சமூகத்தில் கட்டமைக்கும் பிம்பத்தை ஷிவின் உடைத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவாகப் பலர் பதிவிட்டு வருகிறார்கள்.
பிக்பாஸ் வீட்டில் ஷிவினை உருவக் கேலி செய்த நிகழ்வுகள் நடந்தபோதும் அதை ஷவின் திறமையாகக் கையாண்டு வருவதாக ட்விட்டரில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். பலர் உருவக் கேலி செய்வதற்குக் கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

பட மூலாதாரம், Shivin/Instagram
திருநங்கைகள் அல்லது திருநம்பிகளைப் பற்றி புரிதல் இல்லாததுதான் இதுபோன்ற பேச்சுகளுக்குக் காரணம் என்ற விவாதமும் எழுந்திருக்கிறது.
அதே நேரத்தில் ஆண்கள், பெண்கள் ஆகியோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருப்பதன் வெளிப்பாடாகவும் இது இருக்கலாம் என்கிறார் திருநங்கையான சுஜாதா. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
பிக்பாஸ் வீட்டில் ஷிவின் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகக் கூறும் சுஜாதா, வேறுபாடு இல்லாமல் அவரால் பிறருடன் பழக முடிந்திருக்கிறது என்று கூறுகிறார். தொடக்கத்தில் ஷிவினுடன் பிறர் பழகுவதற்கு தயக்கம் காட்டியதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“திருநங்கைகளைப் பற்றி பிறர் பேசும்போது முதலாவதாக வருவது அவர்களுக்கு அந்தரங்க உறுப்புகள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய பேச்சாகத்தான் இருக்கும். தொடக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இதைக் காண முடிந்தது.” என்கிறார் சுஜாதா.
இந்தியாவை விட வெளிநாடுகளில் திருநங்கைகள் மீதான பார்வை முன்னேறியிருப்பதாக ஷிவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியதை ஏற்றுக் கொள்கிறார் சுஜாதா.

பட மூலாதாரம், Sujatha
திருநங்கைகளைப் பற்றிய புரிதல் சென்னை போன்ற நகரங்களில் முன்பைவிட அதிகரித்திருப்பதாக திருநங்கைகள் நலனுக்கான செயல்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். இருப்பினும் வாடகைக்கு வீடு தேடும்போது இரண்டு மடங்கு வாடகை கேட்பது, வேலைகளில் புறக்கணிப்பது போன்றவை இன்னும் தொடருகின்றன என்கிறார்கள்.
“கிராமப்புறங்களில் இன்னும் சில வார்த்தைகளைக் கூறி கேலி செய்வது தொடருகிறது” என்கிறார் சுஜாதா.
“சில ஆண்டுகளில் பத்துப் பதினைந்து நிறுவனங்களில் வேலை செய்து விட்டேன் ” என்று கூறுகிறார் கமலி. தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் இருவர், சமூகப் பணிகளைச் செய்து வருவதாகவும் கூறுகிறார்.
“புதிதாகப் பழகும் பலர் சுற்றி வளைத்து கடைசியாக பாலியல் நோக்கத்தையே வெளிப்படுத்துவார்கள். அவர்களைத்தான் முதலில் சமாளிக்க வேண்டியிருக்கிறது” என்கிறார் கமலி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




























