You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெளியேறும் மக்கள், காலியாகும் கிராமம் - இருக்கம் தீவின் கதை என்ன?
தமிழ்நாட்டை ஒட்டிய ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்தில் உள்ள தடாவில் இருக்கம் தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் இரண்டு கிராமங்கள் உள்ளன. இருக்கம் கிராம மக்கள் விவசாயத்தை சார்ந்துள்ளனர். அதேசமயம் ஸ்ரீ வெங்கட நகர் குப்பம் கிராம மக்கள் மீன் பிடித் தொழிலை நம்பியுள்ளனர்.
2018ஆம் ஆண்டு பிபிசி இந்த கிராமத்துக்கு வந்திருந்தது. அப்போது மாணவர்கள் பள்ளிக்கு படகு மூலம் சென்று வந்தனர். நிலைமை இப்போதும் அதேபோல தான் தொடர்கிறது. ஆனால், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
ஒவ்வொரு நாளும் சுமார் 130 மாணவர்கள் பள்ளிக்கு படகுகளில் செல்கின்றனர். சிலர் அந்திர அரசு நடத்தும் பீமுலாவாரி பாலத்தில் உள்ள பள்ளியில் படிக்கின்றனர். மற்றவர்கள் தமிழ் நாடு அரசு நடத்தும் அரம்பாக்கத்துக்கு அருகே உள்ள பள்ளியில் படிக்கின்றனர். தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் இதில் அடங்குவர்.
"படிக்கவோ, சிறப்பு வகுப்புக்கு செல்லவோ நேரம் இருக்காது. நாங்கள் பள்ளிக்கு செல்ல தினமும் இரண்டு மணி நேரம் படகில் பயணம் செய்கிறோம். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் இருக்கும். ஆனாலும், நாங்கள் அதில் பங்கேற்க முடியாது என கூறினோம். நாங்கள் 4 மணி படகில் வீட்டுக்கு திரும்ப வேண்டும்." என்று மோனிஷா என்ற மாணவி கூறுகிறார்.
குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்றாலும் பெரியவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டுமென்றாலும் படகில் ஒரு மணி நேரம் பயணம் செய்து ஆக வேண்டும்.
"எங்கள் கிராமத்திலும் பள்ளி உள்ளது. ஆனால் அங்கே ஆசிரியர்கள் இல்லை. எந்த ஆசிரியரும் இங்கு வந்து பணிப்புரிய விரும்புவதில்லை. தடா அருகே உள்ள பூடி குப்பத்தில் எங்களுக்கு விடுமனை கொடுக்கப்பட்டிருந்தால், எங்கள் குழந்தைகளின் படிப்பில் எந்த பிரச்னையும் இருந்திருக்காது. ஸ்ரீ நகர சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்து நாங்கள் வாழ்க்கையை நடத்துவோம்." என்கிறார் குணா.
கடந்த சில ஆண்டுகளாக, கிராமத்தில் வசித்து வந்த மக்கள் அருகில் உள்ள நகரங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். வசதி உள்ளவர்கள் தங்கள் குழந்தைகளை விடுதியிலோ அல்லது உறவினர்கள் வீடுகளிலோ தங்கவைத்து படிக்க வைக்கின்றனர். வசதியில்லாத மக்கள் ஆந்திராவின் தடாவுக்கும், தமிழ்நாட்டின் அரம்பாக்கத்துக்கும் குடிபெயர்ந்து, வீடுகளை வாடகைக்கு எடுத்து, அவர்களின் குழந்தைகளை படிக்க வைத்து வருகின்றனர். இதன் காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகள் கொண்ட இந்த கிராமம் வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்த கிராமத்தில் இரண்டு பள்ளிக்கூடங்கள் உள்ளன. அதில் ஒன்று நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. எந்தவொரு ஆசிரியரும் இங்கு பணிபுரிய விரும்புவதில்லை என்பதே அதற்கு காரணம். மற்றொரு பள்ளியிலும் பத்துக்கும் குறைவான மாணவர்களே படித்து வருகின்றனர். அந்த பள்ளி ஆசிரியர்களும் படகின் நேரத்தை பொறுத்தே பணிக்கு வருகின்றனர். அதன் காரணமாக, பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளை இந்த பள்ளிக்கு அனுப்ப மறுக்கின்றனர். இது மாணவர்களின் பிரச்னை மட்டுமல்ல. பெரியவர்களும் இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். தீவில் போதுமான வேலைவாய்ப்புகள் இல்லை. கடந்த காலங்களைப் போல இவர்கள் விவசாயம் மற்றும் மீன்பிடித்தலை மட்டும் நம்பி இருக்க முடியாது. அதன் காரணமாக கிராம மக்கள் தீவை விட்டு வெளியேறி வருகின்றனர்.
ஆனால், இந்த கிராமத்தில் விவசாயத்தை சார்ந்து இருக்கும் மக்கள் வேறு விதமான கருத்தை கொண்டுள்ளனர். அவர்கள் இந்த கிராமத்தை விட்டு உடனடியாக வெளியேற விரும்பவில்லை. அதேசமயம், அவர்களின் குழந்தைகள் யாரும் கிராமத்தில் வாழவில்லை.
கிராமத்தை மற்ற நகரங்களுடன் இணைக்கும் வகையில் சாலைவசதி வேண்டும் என கிராம மக்கள் விரும்புகின்றனர். சாலை இணைப்பு வசதி கிராமத்தில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் என அவர்கள் நம்புகின்றனர். ஆனால், சாலை இணைப்பு பாதை பல காரணங்களால் தடைப்பட்டுள்ளது. சாலைகள் இல்லையென்றாலும், பள்ளி மற்றும் இடைநிலைக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் எனவும், ஆசிரியர்கள் தீவிலேயே தங்க வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். இவை இரண்டும் சாத்தியமில்லையெனில், தடாவுக்கு அருகில் வீடுமனையை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
இந்த கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று உள்ளது. அதில் ஒருவர் மட்டுமே பணியாற்றுகிறார். அவர் கிராம மக்களுக்கு அடிப்படை சுகாதார சேவையை வழங்குகிறார். பெரிய நோய்கள் மற்றும் மருத்துவ அவசர நிலைக்கு சிகிச்சை பெற கிராம மக்கள் படகில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த பிரச்னைகள் பற்றி பிபிசியிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ்வர், விரைவாக இதற்கு தீர்வு காண்பதாக கூறினார்.
இந்த இருக்கம் தீவில் உள்ளவர்களின் நிலை என்ன? காணொளியில் முழுமையாகக் காணலாம்
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு