You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிறந்ததும் குழந்தையிலேயே கைவிடப்பட்ட ஒருவர் 65 ஆண்டுக்கு பின்னர் தனது குடும்பத்தை கண்டுபிடித்த கதை
- எழுதியவர், ஷரிகுவா அகமது மற்றும் டாட்டி மெக்லியோட்
- பதவி, பிபிசி நியூஸ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
கடந்த 65 ஆண்டுகளாக, டேவிட் ஸ்டீவன்சன் தன் வாழ்நாள் முழுவதும் தன்னை துரத்திக் கொண்டிருந்த ஒரு கேள்வியோடு தான் வாழ்ந்து வந்தார்: 'நான் எங்கிருந்து வந்தேன்?'
பிரிட்டனின் பீட்டர்பரோ நகரத்தைச் சேர்ந்த டேவிட், பெற்றோரால் கைவிடப்பட்டு முன்பின் தெரியாதவர்களால் கண்டெடுக்கப்பட்ட ஒரு குழந்தை ஆவார்.
1960-ஆம் ஆண்டு, லண்டனில் உள்ள கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், பிறந்து சில நாட்களே ஆன நிலையில் அவர் கண்டெடுக்கப்பட்டார். அவர் எந்தச் சூழ்நிலையில் கைவிடப்பட்டார் என்பது தெரியாத நிலையில், பின்னர் ஸ்டீவன்சன் குடும்பத்தினரால் தத்தெடுக்கப்பட்டார்.
"நான் வளர்ப்புக் குழந்தை என்பது சிறுவயதிலேயே எனக்குத் தெரியும். என்னை தத்தெடுத்த பெற்றோர் அதனை என்னிடம் சொல்லியிருந்தார்கள். ஆனால், எனக்கென்று குழந்தைகள் பிறந்த பிறகுதான், எனது உண்மையான பிறப்பிடம் பற்றி நான் சிந்திக்கத் தொடங்கினேன்," என்று அவர் கூறினார்.
1960-ஆம் ஆண்டில், லண்டனில் ஒரு கட்டடத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த குழந்தையை அடையாளம் காண உதவுமாறு 'டெய்லி மெயில்' (Daily Mail) நாளிதழ் ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருந்தது. இதற்கான தடயங்களைக் கண்டறியும் புதிய முயற்சியாக 2009-ஆம் ஆண்டில் அந்த நாளிதழ் இந்தச் செய்தியை மீண்டும் வெளியிட்டது.
பல ஆண்டுகளாகத் தேடியும், தனது தத்தெடுப்பு ஆவணங்களில் தனது உண்மையான பெற்றோரைப் பற்றிய தகவல்கள் மிகவும் குறைவாகவே இருந்ததாக டேவிட் கூறினார்.
"அது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவது போல இருந்தது," என்றும் அவர் குறிப்பிட்டார்.
"அந்த ஆவணங்களில் ஒரு காவல் நிலைய அறிக்கை இருப்பதை என் மனைவி கவனித்தார். அதன் மூலம், என்னை மீட்ட டெக்வின் கர்ல் என்ற பெண் அதிகாரியை அவரால் கண்டுபிடிக்க முடிந்தது. நான் கண்டெடுக்கப்பட்ட அந்த நாளைப் பற்றிய கூடுதல் தகவல்களை அந்த அதிகாரியால் எங்களுக்குத் தர முடிந்தது."
பீட்டர்பரோ நகர முன்னாள் கவுன்சிலரான அவரது மனைவி ஜூலி ஸ்டீவன்சன், "டேவிட்டை மீட்டதை தான் ஒருபோதும் மறக்கவில்லை என்று அந்த காவல்துறை அதிகாரி கூறினார். அது அவரது பணிக்காலத்தில் மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களில் ஒன்று," என்றார்.
'என் தாயின் மீது எனக்கு அனுதாபம் ஏற்படுகிறது'
அவர்களின் தேடலின் முடிவில், 1940-ஆம் ஆண்டு நெதர்லாந்தில் பிறந்து ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் வளர்ந்த டேவிட்டின் உண்மையான தாய் 'பெட்ரா' பற்றிய விவரங்கள் தெரியவந்தன.
19 வயதில் பெட்ரா பிரான்சுக்கும், பின்னர் செவிலியராகப் பணிபுரிய இங்கிலாந்துக்கும் பயணம் செய்ததாகவும், 1960-ஆம் ஆண்டில் டேவிட்டை அவர் கருவில் சுமந்ததாகவும் ஜூலி நினைவுகூர்ந்தார்.
"லண்டனுக்கு வந்தபோது தான் கர்ப்பமாக இருப்பது அவருக்குத் தெரிந்திருந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், முழு கர்ப்ப காலத்தையும் அவர் கடந்து வந்துள்ளார். மேலும் கர்ப்ப காலம் முழுவதும் அவரைச் சுற்றியிருந்தவர்களின் ஆதரவு அவருக்குக் கிடைத்திருப்பதாகவே தெரிகிறது," என்று ஜூலி கூறினார்.
2015-ஆம் ஆண்டு கைவிடப்பட்ட குழந்தைகளுக்கான அருங்காட்சியகத்திற்குச் சென்றிருந்தபோதுதான், ஐடிவி (ITV) தொலைக்காட்சியின் 'லாங் லாஸ்ட் ஃபேமிலி' (Long Lost Family) குழுவினரை டேவிட் முதன்முதலில் தொடர்பு கொண்டார்.
"டிஎன்ஏ பகுப்பாய்வு மற்றும் மரபியல் ஆராய்ச்சியின் மூலம் எனது உண்மையான தாய் யார் என்பதை அடையாளம் காண்பதில் அந்த நிகழ்ச்சி ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது, இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது," என்று நினைவுகூர்ந்தார்.
"துரதிர்ஷ்டவசமாக, அவர் 2010-ஆம் ஆண்டிலேயே இறந்துவிட்டார். ஆனால் எனது இந்தப் புதிய குடும்பம் அவரை மீண்டும் என் வாழ்க்கைக்குள் கொண்டு வந்துள்ளது: அவர் மிகவும் அன்பான பெண்மணி என்பதை அறிந்தேன்."
"என்னை கவனித்துக் கொள்வதற்காக அவர் ஏதோ ஒரு ஏற்பாடு செய்திருந்தார் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அந்த ஏற்பாட்டில் ஏதோ தவறு நடந்திருக்கலாம், அதனால்தான் நான் ஒரு காப்பகத்தில் விடப்பட்டேன்," என்று கூறினார் டேவிட்.
"ஆனால் என் தாயின் மீது எனக்கு அனுதாபமே ஏற்படுகிறது. 50 மற்றும் 60-களில் பெண்கள் ஒற்றைத் தாயாக வாழ்வது மிகவும் கடினமான விஷயமாக இருந்தது. அவரால் முடிந்ததை அவர் செய்தார் என்று நான் நினைக்கிறேன்."
இதற்குப் பதிலளிக்கும் விதமாக பேசும் ஜூலி, "இந்த உண்மையை வெளியே சொல்ல முடியாத அளவுக்கு அவருக்கு (பெட்ரா) சில காரணங்கள் இருந்திருக்கலாம் என்று தான் நாம் நம்ப வேண்டும், அதில் எந்தத் தவறும் இல்லை. அவரை விமர்சிக்க நாம் யார்? நாம் அவர் வாழ்க்கையை வாழவில்லை. இது மிகவும் துயரமான ஒரு நிகழ்வு, அவ்வளவுதான்" என்கிறார்.
புதிய குடும்பம்
அதன் பிறகு, ராட்டர்டாமில் உள்ள தனது தாயின் சகோதரியான மரியானா மற்றும் தனது உறவினர்களை டேவிட் சந்தித்து, இணைந்தார். இதை ஒரு "மனதை நெகிழவைக்கும் கதை" என்று அவர் வர்ணித்தார்.
"அந்தக் குடும்பம் என்னை இருகரம் கூப்பி வரவேற்றது, அவர்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்களைச் சந்தித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி."
புதிய டிஎன்ஏ தொழில்நுட்பத்தால்தான் இது சாத்தியமானது என்று டேவிட் கூறுகிறார்.
"கனடாவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் டிஎன்ஏ, ஒரு டிஎன்ஏ இணையதளத்தில் என்னுடன் பொருந்திப் போனது, அது தான் எங்களை இந்தக் குடும்பத்திடம் கொண்டு சேர்த்தது. என் கொள்ளுப் பாட்டி இந்தோனேசிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதையும் நான் இப்போது கண்டுபிடித்துள்ளேன்."
"நான் எங்கிருந்து வந்தேன் என்பதைப் புரிந்துகொள்வது அளவற்ற மனநிறைவைத் தருகிறது. அதேசமயம், என் தந்தை வழியில் இன்னும் சில தேடல்களை நான் செய்ய வேண்டியுள்ளது," என்கிறார் டேவிட்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு