You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை இன்னும் பேசுபொருளாவது ஏன்?
மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு இன்றுடன் ஆறு ஆண்டுகள் ஆகின்றன.
ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதும் சரி, இப்போதும் சரி பொதுவெளியில் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவாதங்களும் விமர்சனங்களுமே அரசியல் வாழ்க்கையைவிட மேலோங்கி கிடக்கின்றன.
அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அவரை எதிர்ப்பவர்கள் ஓர் ஆயுதமாக பயன்படுத்துவதும் நடந்திருக்கிறது, அதையே அவருக்கான அனுதாபமாக மாற்றுவதும் நிகழ்ந்திருக்கிறது.
அதற்கான சமீபத்திய உதாரணமாக, ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கூறிய வார்த்தைகள் அமைந்திருக்கிறது.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆறுமுகசாமி, “ஒரு பெண் இந்த உலகத்தை விட்டுப் போவதற்கு முன் ஓர் உயிரை விட்டுச் செல்ல வேண்டும் என்பது ஷேக்ஸ்பியரின் பொன்மொழி. அவ்வாறு, ஜெயலலிதாவுக்கு வாரிசு இருந்திருந்தால் மருத்துவமனையில் அவருக்கு உதவியாக இருந்திருக்கும். மீதியை மக்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்” என்று பேசியிருந்தார்.
"பொதுப்புத்தியின் வெளிப்பாடே"
சமூகத்தில் நிலவும் பொதுப்புத்தியின் வெளிப்பாடே ஜெயலலிதா குறித்த இத்தகைய பேச்சுகள் என்கிறார், ‘ஜெயலலிதா - மனமும் மாயையும்’ எனும் புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் வாஸந்தி.
பிபிசி தமிழிடம் பேசிய வாஸந்தி, “சமூகத்தில் நிலவும் பொதுப்புத்தியிலிருந்து ஆறுமுகசாமி பேசியிருப்பதாகவே இதனை கருத வேண்டும். ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அனுதாபப்பட ஒன்றும் இல்லை. ஏனெனில், அது அவருடைய முடிவு. சொந்த வாழ்க்கையில் அவர் எடுத்த முடிவுகளை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. அரசியல் வாழ்க்கையில் ஆளுமை மிக்க தலைவர் அவர். அவருக்கும் சில பலவீனங்கள் இருந்தன. சசிகலாவின் உதவி அவருக்குத் தேவைப்பட்டது” என்கிறார்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் திருமணமாகாதவர்தான்; ஆனால் அவருடைய தனிப்பட்ட வாழ்வை அனுதாபத்திற்குரிய வகையில் யாரும் பேசவில்லை என்கிறார் வாஸந்தி.
“ஓர் ஆணின் துணை இருந்தால்தான் பெண்ணுக்கு பாதுகாப்பு என்ற கருத்தின் வெளிப்பாடே இத்தகைய பேச்சுகள்,” என்றார் அவர்.
தனிப்பட்ட விமர்சனம் ஏன்?
திமுக தலைவர்கள் மற்றும் பேச்சாளர்கள் பலரும் ஜெயலலிதாவின் சொந்த வாழ்க்கையை குறிப்பிட்டு பொது மேடைகளில் விமர்சித்துள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ஜெயலலிதாவுக்கு குடும்பம், குழந்தை இல்லை என்பதை குறிப்பிட்டு, தனிப்பட்ட ரீதியில் விமர்சித்து பேசியுள்ளார்.
இப்படி, ஜெயலலிதாவுக்கென தனியே குடும்பம் இல்லாதது, அவருடைய தனிப்பட்ட உறவுகள் உள்ளிட்டவையும் அவருடைய சொந்த வாழ்க்கை குறித்த தகவல்களும் எப்போதும் பெரும்பான்மை சமூகத்தால் விரும்பி அறியப்படும் ஒன்றாகவே இருந்திருக்கிறது.
ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது ஏன் இன்றளவும் அதிகமாக பேசப்படுகிறது? அதற்கான அரசியல் - சமூக காரணம் என்ன என்பது குறித்து பெண்ணிய எழுத்தாளரும் ஜெயலலிதா குறித்து பல விமர்சனபூர்வ கட்டுரைகளை எழுதியுள்ளவருமான வ.கீதா பிபிசி தமிழிடம் பேசினார்.
“நாம் சாதிய சமூகமாக இருக்கிறோம். அப்படிப்பட்ட சமூகத்தில் சமூகத் தகுதி, சொத்து உள்ளிட்டவற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்தினால்தான் உள்ளவர்களுக்கே எல்லாம் இருக்கும். அதன் வெளிப்பாடுதான் ஜெயலலிதாவுக்கு வாரிசு இல்லை என்பதை பேச வைக்கிறது” என்கிறார்.
ஜெயலலிதா எப்போதும் ஜனநாயக - உரிமை அரசியலை மேற்கொண்டவர் இல்லை எனக்கூறும் வ.கீதா, அவர் மேற்கொண்ட அதிகாரத்துவ அரசியல் தமிழ்நாட்டு அரசியலில் எதேச்சதிகாரம் வேரூன்றி இருப்பதற்கு ஓர் காரணம் என்று கூறுகிறார்.
“ஆனாலும், அவருக்கு காட்டப்பட்ட எதிர்ப்பு அவர் ஒரு பெண்ணாக இருப்பதாலேயே குறிப்பிட்ட வடிவத்தை எடுத்தது. பெண்களுடன் சம்பந்தப்பட்ட விஷயங்களை முதன்மைப்படுத்தி அவரை விமர்சிப்பதே எதிரில் இருப்பவர்களுக்கு எளிதானதாக இருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையை கேலியாகவும் அவரை விமர்சிக்கவும் பயன்படுத்தியுள்ளனர். அதே பாணியில் ஜெயலலிதா பதிலடியும் கொடுத்துள்ளார்” என்கிறார், வ.கீதா.
ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பேச்சுக்களால், அவர் கையாண்ட அரசியல் குறித்து ஆழ்ந்த பகுத்தறிவான விமர்சனங்களை முன்வைக்க இச்சமூகம் தவறிவிட்டதாக கூறுகிறார் வ.கீதா. ஏனெனில், தனிப்பட்ட விமர்சனங்கள் பொதுமக்களிடம் எளிதில் சென்று சேருவதாக கூறுகிறார் அவர். இதனால் விமர்சன பண்பாடு வளர்க்கப்படாமல் வெறுப்பு பண்பாடு வளர்க்கப்படுவதாக கூறுகிறார்.
ஜெயலலிதா மீது பெண்களும் தனிப்பட்ட தாக்குதல் தொடுப்பதன் பின்னான உளவியல் குறித்து பேசிய வ.கீதா, ”பெண்களும் ஆண்களும் ஒரே மாதிரியான சமூகத்தில் வளர்வதே இதற்கு காரணம்” என்றார்.
“ஜெயலலிதாவின் வித்தியாசமான வாழ்க்கை முறை, சசிகலாவுடன் அவருக்கு இருந்த தோழமை என, அரசியலில் மிக அரிதான, அசாதாரண ஓர் வாழ்க்கை முறையை அவர் மேற்கொண்டிருந்தார். அதுவே இன்றுவரை ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையை பேசிக்கொண்டிருப்பதற்கு காரணமாக அமைகிறது. ஆனால், மாயாவதி, மமதா பானர்ஜி போன்ற மற்ற தலைவர்கள் குறித்து அம்மாநில உள்ளூர் ஊடகங்கள், பொதுமக்கள் என்னமாதிரி பேசுகின்றனர் என்பது அதிகம் அறியப்படவில்லை,” என கூறுகிறார் வ.கீதா.
மேலும், “பெண் என்ற உருவகத்தை பல்வேறு நிலைகளில் ஜெயலலிதா வளர்த்தெடுத்துக்கொண்டார். தாயாக தன்னை வெளிப்படையாக பிரசாரம் செய்வது போன்றவற்றை அவர் முன்னெடுத்தார். அதை மிக வெற்றிகரமாகவே செய்திருக்கிறார்” என்கிறார்.
“ஜெயலலிதாவின் அதிகாரம், கட்சியை எப்படி தனக்கு மட்டுமே விசுவாசமிக்க ஒன்றாக மாற்றிக்கொண்டார், அரசு அதிகாரிகளை நடத்திய விதம் என எல்லாவற்றையும் பார்க்க வேண்டியுள்ளது. அவர் உயிருடன் இருந்தபோது அவருடன் உடன்பட்டவர்கள், இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கின்றனர். அப்போது அவரை அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாதவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தே அதிகம் பேசியுள்ளனர்” என்றார், வ.கீதா.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்