You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லாத தினம்: பாதிப்பு முடிவுக்கு வந்ததா?
தமிழ்நாட்டில் ஜூன் 26ஆம் தேதி கோவிட் தொற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என தமிழக சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டை விட்டு கோவிட் அபாயம் நீங்கிவிட்டதா?
கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோவிட் பரவல் தமிழ்நாட்டில் துவங்கி, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கோவிட் நோயால் ஒருவர்கூட பாதிக்கப்படாத நிலையை தமிழ்நாடு எட்டியுள்ளது.
தமிழக சுகாதாரத் துறையின் ஜூன் 26ஆம் தேதி தினசரி அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஒருவர்கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் சேர்த்து 16 பேர் இந்த நோய்க்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் நான்கு பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் இதுவரை 36,10,593 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, 38,080 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி வூகான் பல்கலைக்கழகத்திலிருந்து கேரளா திரும்பிய மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதுவே இந்தியாவில் பதிவான முதல் கொரோனா தொற்று.
இதற்கு சில வாரங்களுக்குப் பிறகு, மார்ச் மாதம் 7ஆம் தேதியன்று ஓமனிலிருந்து சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. தமிழ்நாட்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது அதுவே முதல் முறை. இதற்கு அடுத்ததாக மார்ச் 18ஆம் தேதி தில்லியிலிருந்து சென்னை வந்த ஒருவருக்கும் மார்ச் 19ஆம் தேதி அயர்லாந்திலிருந்து சென்னை வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அதே ஆண்டு மார்ச் 25ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மதுரையில் சிகிச்சைபெற்றுவந்த ஒருவர் உயிரிழந்தார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்தது அதுவே முதல் முறையாக அமைந்தது. இதற்கிடையில், முதன்முதலாக கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நபர் நோய்த் தொற்றிலிருந்து மீண்டதாக அறிவிக்கப்பட்டது.
மார்ச் 29ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50ஐத் தாண்டியது. இரு நாட்களிலேயே புதிய தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டியது. இதற்கிடையில் மார்ச் 24ஆம் தேதி பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.
இதற்குப் பிறகு, 2020லும் 2021லும் இரு மிகப் பெரிய கோவிட் அலை ஏற்பட்டு ஒரே நாளில் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக 2021ல், மருத்துவமனைகள் நிரம்பி, வாசலில் ஆம்புலன்சுகள் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டது. பெரும் எண்ணிக்கையிலான மரணங்களும் நிகழ்ந்தன.
இதற்குப் பிறகு, கோவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது.
இந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக, தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் ஒருவரும் பாதிக்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய அளவில் புதிய தொற்றுகள் ஆங்காங்கே ஏற்பட்டுவருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 33 பேர் புதிதாக இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 1,606 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த மூன்றாண்டுகளில் மொத்தமாக 5,31,903 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் புதிய திரிபுகளின் காரணமாக இந்தியா முழுவதும் கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரிக்க ஆரம்பித்தது. தில்லி, தமிழ்நாடு, உத்தர பிரதேசம், அரியானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அடுத்த சில வாரங்களிலேயே புதிய தொற்றுகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.
கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததா?
இப்போது தமிழ்நாட்டில் கொரோனா தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாகச் சொல்ல முடியுமா? "கொரோனா தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாகச் சொல்ல முடியாது. 90 சதவீதம் பேருக்கு மேல் தடுப்பூசி போட்டதாலும் பலருக்கும் இந்நோய் வந்து போனதால், எதிர்ப்பு சக்தி ஏற்பட்டதாலும் இந்த வைரஸால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. இப்போது சாதாரணமான சளி வைரஸைப் போல ஆகிவிட்டது.
பரிசோதனைகளைப் பொறுத்தவரை, தீவிர மூச்சுப் பிரச்னைகள் போன்ற அறிகுறிகள் இருப்பவர்களுக்கே தற்போது சோதனைகள் செய்யப்படுகின்றன. அவர்களில் யாருக்கும் தொற்று இல்லாததால், கொரோனா தொற்றே இல்லாத நிலை வந்துவிட்டதாகச் சொல்ல முடியாது. முன்பைப் போல, சாதாரண சளி - காய்ச்சல் இருப்பவர்களுக்கும் சோதனை செய்தால் ஒரு வேளை கொரோனா இருப்பது தெரியவரலாம்." என்கிறார் தமிழ்நாடு பொதுச் சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநர் குழந்தைச்சாமி.
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஒவ்வொரு நாளும் எத்தனை பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்படுகிறது என்ற புள்ளிவிவரத்தைத் தினமும் வெளியிடுகிறது. இது எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்? "அதனை இப்போதைக்கு நிறுத்த முடியாது. தொடர்ந்து செய்ய வேண்டும். தொடர்ந்து செய்வார்கள். தவிர, சோதனைகளும் தொடர்ந்து நடக்கவே செய்யும். உலக சுகாதார அமைப்பு, இந்த நோய் ஒரு சாதாரண சளி - காய்ச்சலைப் போல என்று சொல்லும்வரை தமிழ்நாடு அரசும் இது தொடர்பான அறிக்கைகளை வெளியிடும். அதற்குப் பிறகும், இந்த நோயைச் சோதனை செய்வதற்கான கட்டமைப்பு தொடர்ந்து நீடிக்கும்" என்கிறார் குழந்தைச்சாமி.
யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என்பது நல்ல செய்திதான்; ஆனால், அதையே கொரோனா தொற்றின் முடிவாகக் கொள்ள முடியாது என்கிறார் அவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்