You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'நிமிஷா பிரியா இல்லாமல் இந்தியா திரும்ப மாட்டேன்' - கேரள செவிலியரின் தாயார் பிபிசி தமிழுக்கு பேட்டி
கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியா என்ற செவிலியர், ஏமனில் அந்நாட்டு குடிமகனை கொலை செய்த குற்றத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜூலை 16-ஆம் தேதி அவருக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். இந்த சூழலில் அவருடைய தாயார், நிமிஷாவை மீட்பதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறார். அவரும், நிமிஷா பிரியா குடும்பத்தின் சார்பாக, ஏமனில் இந்த வழக்கைக் கையாளும் அதிகாரம் பெற்றவரான சாமுவேல் ஜெரோமும் பிபிசி தமிழுக்கு பிரத்யேக நேர்காணலை வழங்கியுள்ளனர்.
நிமிஷா பிரியா இல்லாமல் ஏமனில் இருந்து இந்தியாவுக்குத் திரும்ப மாட்டேன் என்று அவரது தாயார் திட்டவட்மாக கூறியுள்ளார். அவர்களிடம் பிபிசி தமிழ் முன்வைத்த கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் இங்கே தரப்பட்டுள்ளன.
கேள்வி: சிறையில் முதல்முறை நிமிஷாவைப் பார்க்கும்போது என்ன பேசினீர்கள்? அந்த உணர்வு எப்படி இருந்தது?
இதற்குப் பதிலளித்த பிரேமா குமாரி, "நான் 12 ஆண்டுகள் கழித்துதான் நிமிஷாவை பார்த்தேன். முதல்முறை கடந்த ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி பார்த்தேன். ஏப்ரல் 23, தூதரக அதிகாரிகளும் நானும் பார்க்கச் சென்றோம். ஆனால், அவளை பார்க்க முடியாதோ என்று கவலைக்கு உள்ளானேன்.
அதன் பிறகு அவளை பார்க்கும் போது அவளுடன் இரண்டு பேர் வந்தனர். ஒரே மாதிரி ஆடை அணிந்திருந்தனர். அவள் என்னை ஓடி வந்து கட்டிப்பிடித்து அழுதாள். நானும் அழுதேன். உடன் இருந்தவர்கள் அழாதீர்கள் என்று சொன்னார்கள். 12 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக அவளை பார்த்தேன். நான் இறந்தால்கூட அந்தக் காட்சியை என்னால் மறக்க முடியாது. தான் சந்தோஷமாக இருப்பது போல நிமிஷா என் முன் நடித்தாள்." என்று கூறினார்.
கேள்வி: கேரளாவில் உள்ள நிமிஷாவின் கணவர் டோமி மற்றும் நிமிஷாவின் மகளுடன் இந்த தண்டனை அறிவிப்பு குறித்து பேசினீர்களா?
"டோமியுடன் பேசினேன், அப்போது என் பேத்தியும் பேசினாள். எப்போது பேசினாலுமே அம்மாவை கூப்பிட்டுதானே வருவீர்கள் என்று என்னிடம் பேத்தி கேட்பாள்.
அம்மாவை சிக்கீரம் கூப்பிட்டு வரவேண்டும், அம்மாவை பார்க்க ஆசையாக உள்ளது என்று சொன்னாள். நிமிஷாவிடம் பேசும் போதும் இதை சொன்னேன். 'அம்மாவை கூப்பிட்டு வருவேன் என்று சொன்னேன், அவர்கள் முன்பு நான் எப்படி போய் நிற்பேன். என்னால் திரும்பி போக முடியாது' என்று நிமிஷாவிடம் சொன்னேன்." என்று கூறினார் பிரேமா குமாரி.
கேள்வி: மஹ்தியின் குடும்பம் நிமிஷாவுக்கு மன்னிப்பு அளிக்க மறுத்துவிட்டார்களா?
இதற்குப் பதிலளித்த சாமுவேல் ஜெரோம், "அவர்கள் இதுவரை நிமிஷாவை மன்னிப்பதற்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை, சம்மதமும் தெரிவிக்கவில்லை" என்று கூறினார்.
கேள்வி: தொடக்கம் முதல் நீதிமன்ற விசாரணைகள் வரை, இந்த வழக்கில் மஹ்தி குடும்பத்தின் பங்கு என்ன?
சாமுவேல் ஜெரோம், "மஹ்தியின் கொலை நடந்தது ஏமனின் வடக்குப் பகுதியில், ஆனால் நிமிஷா கைது செய்யப்பட்டது ஏமனின் மாரிப் எனும் பகுதியில். மாரிப் நகரின் சிறையில் இருந்த நிமிஷாவை, மீண்டும் வடக்கு ஏமனுக்கு அழைத்து வந்ததே மஹ்தியின் குடும்பம் தான். தங்கள் சொந்த வாகனத்தில் சென்று அவர்கள் அல்-பைதாவுக்கு அழைத்து வந்தனர். தெற்கு ஏமனில் நிமிஷா இருந்திருந்தால், அவருக்கு சட்டரீதியான விசாரணை நடந்திருக்காது. எனவே நிமிஷாவுக்கு நீதி விசாரணை நடந்ததற்கு மஹ்தியின் குடும்பமும் ஒரு காரணம். ஆனால் அவர்கள் நிமிஷாவை அழைத்து வந்தது வேறு நோக்கத்திற்காக." என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "மஹ்தியின் குடும்பத்தினர் 'ஒசாப்' எனும் பழங்குடி குழுவை சேர்ந்தவர்கள். அவர்களின் பூர்வீகம் சனாவுக்கு அருகில் தமார் என்ற பகுதி. ஆனால் அவர்கள் வணிகம் செய்து, வாழ்வது அல்-பைதா பகுதியில். திருநெல்வேலியைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் வேலைக்காக வசிப்பது போல. ஸ்வாதியா எனும் பழங்குடி குழுவின் பூர்வீகம் தான் அல்-பைதா.
அப்படியிருக்க அங்கு வைத்து மஹ்தி கொலை செய்யப்பட, அதற்கான பழி ஸ்வாதியா பழங்குடி மீது விழும் அபாயம் உருவானது. ஏனென்றால், ஏமனில் தங்கள் எல்லையில் வாழும் வேறொரு பழங்குடி நபர் உயிரிழந்தால், அதற்கு பூர்வீக பழங்குடி இனமே பொறுப்பு. நிமிஷா தான் குற்றவாளி என்பது அப்போது தெரியாது. இரு பழங்குடி குழுக்கள் இடையே சண்டை உருவாகும் சூழல் இருந்தது.
பிறகு மஹ்தியின் குடும்பத்திற்கு உண்மை தெரிந்தவுடன், அவர்கள் தங்கள் வாகனத்தை எடுத்துக்கொண்டு மாரிப் நகரம் சென்று நிமிஷாவை அழைத்து வந்தார்கள். அப்போது அவர்களுக்கு இருந்த கோபத்திற்கு, நிமிஷாவை அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால், அவர்கள் நிமிஷாவை பத்திரமாக அல்-பைதாவிற்கு அழைத்து வந்தார்கள்.
அதன் பிறகு, நிமிஷாவை சனாவிற்கு அனுப்ப வேண்டும் என்ற ஹூத்தி வெளியுறவு அமைச்சகத்தின் அறிவிப்பு வந்ததும் . அதை மதித்து அனுப்பி வைத்தார்கள்" என்றார்.
முழு விவரம் இந்த வீடியோவில்!
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு