You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யுக்ரேனில் அமெரிக்க தயாரிப்பான எஃப்-16 போர் விமானம் வீழ்ந்தது - ரஷ்ய தாக்குதலில் என்ன நடந்தது?
யுக்ரேனின் கிழக்கு பகுதியில் இருக்கும் கார்கீவ் நகரில் விளையாட்டு மைதானம் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 14 வயது சிறுமி ஒருவர் கொல்லப்பட்டார்.
ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள கார்கீவ் நகரில் 12 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம் ஒன்றும் தாக்குதலுக்கு உள்ளானது. அதில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர். 59 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்து வெளியான காணொளியில் கட்டடத்தின் மேல் பகுதியின் மீதிருந்து கரும்புகை கிளம்பியதும், தீயணைப்பு வீரர்கள் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதையும் காண முடிகிறது
யுக்ரேனின் இரண்டாம் பெரிய நகரமான கார்கீவ் ரஷ்ய எல்லையிலிருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா யுக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை தொடங்கியதிலிருந்து இந்நகரம் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இம்மாதிரியான தாக்குதல்களை தடுப்பதற்கு ரஷ்யாவின் எல்லைக்குள் தாக்குதல் நடத்த அனுமதிக்குமாறு தனது மேற்கத்திய கூட்டாளி நாடுகளிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார் செலன்ஸ்கி.
கடந்த வாரத்தில் மட்டும் 400 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ரஷ்யா ஏவியதாக யுக்ரேனின் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் விமானப் படையின் தலைவர் லெஃப்டினெண்ட் ஜெனரல் மிகோலா ஓலெஷ்க்கை பதவியிலிருந்து நீக்கிய சில மணிநேரங்களுக்கு முன்னதாக நடந்தது.
அவரை பதவியிலிருந்து நீக்கியதற்கு குறிப்பிட்ட காரணம் எதையும் செலன்ஸ்கி தெரிவிக்கவில்லை எனினும், நமது போர் வீரர்கள் அனைவரையும் காப்பது அவரது கடமை என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த தனது டெலிகிராம் பதிவில், கமாண்டர்கள் மட்டத்தில் நாம் வலுவாக இருந்து நமது மக்களை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கிய பிறகு இம்மாதிரியாக பலமுறை ராணுவ கமாண்டர்களை செலன்ஸ்கி மாற்றியுள்ளார்
ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் ஜெட் விமானம் தகர்க்கப்பட்டாலும் எதிரியின் நேரடி தாக்குதலால் ஜெட் விமானம் தகர்க்கப்படவில்லை என்று யுக்ரேன் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட F-16 ஜெட் விமானங்கள் இந்த மாதம் தனது மேற்கத்திய கூட்டாளி நாடுகளால் யுக்ரேனுக்கு வழங்கப்பட்டது.
யுக்ரேனுக்கு மேற்கத்திய நாடுகளால் இம்மாதிரியான ஜெட் விமானங்களை வழங்கியதிலிருந்து இப்படி ஒரு இழப்பு ஏற்படுவது இதுவே முதல்முறை.
ரஷ்யாவின் பெல்கோராட் பிராந்தியத்திலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கார்கீவ் பிராந்தியத்தின் தலைவர் ஒலே சினேஹ்ஹுபோவ் தெரிவித்துள்ளார்.
தெருக்களில் அதிகளவிலான பொதுமக்கள் கூடியிருந்தனர். அது ஒரு குடியிருப்பு கட்டடம். இது பொது மக்களுக்கு எதிரான ஒரு கூட்டு பயங்கரவாதம் என அவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் குறித்து பேசிய செலன்ஸ்கி, ரஷ்யா பொதுமக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது என்றும், ரஷ்ய விமான தளத்திலேயே விமானங்களை அழிக்க முடிந்திருந்தால் இந்த தாக்குதலை தடுத்திருக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
முழு விவரம் காணொளியில்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)