ஒடிஷா ரயில் விபத்து: கோரமண்டல் எக்ஸ்பிரஸ் என்று இந்த ரயிலுக்கு ஏன் பெயர் வந்தது?

பிரசுரிக்கப்பட்டது

ஒடிஷாவில் விபத்துக்கு உள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலை பற்றிய விவரங்கள்- அதன் வேகம், எங்கிருந்து எங்கு செல்கிறது, எந்தப் பாதையை அது பயன்படுத்துகிறது- உள்ளிட்ட தகவல்களை இங்கு பார்ப்போம்.

ஒடிஷாவின் பாலசோர் மாவட்டத்தில் நேரிட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்துகளில் இதுவும் ஒன்று. இதற்கு முன் கடந்த 1981ஆம் ஆண்டு பீகாரில் பாகமதி ஆற்றில் ரயில் கவிழ்ந்த விபத்தில் எண்ணூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதுவே இந்தியாவின் மோசமான ரெயில் விபத்தாகக் கருதப்படுகிறது.

நேற்று நடந்த விபத்தில் உயிரிழப்புகள் மிக அதிகமாக இருந்ததுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம் என்பதால் நாடு முழுவதும் சோகம் சூழ்ந்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு பேசும் மக்களும் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிக்கும் பாதை

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இந்தியாவின் மிக முக்கிய ரயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தென்கிழக்கு ரயில்வேயின் ராஜா என்றும் அழைக்கப்படுகிறது.

ராஜதானி எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ், டுரண்டோ எக்ஸ்பிரஸ் எனப் பல விரைவு ரயில்கள் இந்தப் பாதையில் இயக்கப்பட்டபோதிலும், அவற்றை எல்லாம்விட இந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்திய ரயில்வே வாரியத்தின் தென்கிழக்கு மண்டலம் இந்த ரயிலை இயக்கி வருகிறது. கொல்கத்தாவின் ஹவுரா முதல் சென்னை வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது.

நாட்டின் கிழக்கு கடற்கரையை ஒட்டியே இந்த ரயிலின் பாதை அமைந்துள்ளதால், கோரமண்டல கடற்கரை என்பதையொட்டி இந்த ரயிலுக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் எனப் பெயரிடப்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்- 12842), காலை 7 மணிக்குப் புறப்பட்டு, விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், புவனேஸ்வரம், ஜெய்ப்பூர் ஹைரோடு என கிழக்குக் கடற்கரையை ஒட்டிய பாதையில் பயணிக்கிறது.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம்

கடந்த 1977ஆம் ஆண்டிலிருந்து இயக்கப்பட்டு வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஓர் அதிவிரைவு (Superfast) ரயிலாகும். அதிவிரைவு ரயில்களின் எண்கள் எப்போதும் 12, 22 அல்லது 20 எனத் தொடங்குகின்றன.

பயணிகள் ரயில், புறநகர் ரயில், விரைவு ரயில்களைவிட அதிவிரைவு ரயில்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கின்றன. இதனால் இந்த அதிவிரைவு ரயில்கள் பயணதூரத்தை பிற ரயில்களைவிடக் குறைவான நேரத்தில் கடக்கின்றன.

விரைவு ரயில்களின் சராசரி வேகம் மணிக்கு 42 கிலோ மீட்டருக்கு அதிகமாக இருக்கும் நிலையில், அதிவிரைவு ரயில்களின் சராசரி வேகம் மணிக்கு 55 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இருக்கிறது. அதே நேரம் அதிகபட்சமாக இந்த வகை ரயில்கள் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும்.

இந்த வகை ரயில்களில் பயணிக்க கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விரைவு ரயில்கள் நின்று செல்லும் ரயில் நிலையங்களின் எண்ணிக்கையைவிட அதிவிரைவு ரயில்கள் நின்று செல்லும் ரயில் நிலையங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பயணம் செய்யும் மொத்த பயண தூரம் 1662 கிலோ மீட்டர்.

பயண தூரத்தைக் கடக்க 27 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் இந்த ரயில், மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. சென்னையில் காலை 7 மணிக்குப் புறப்பட்டு, 27 மணிநேரம் மட்டும் 40 நிமிடங்களில் அடுத்த நாள் காலை 10.40 மணிக்கு ஷாலிமரை அடைகிறது.

மறுமார்க்கத்தில் ஷாலிமரில் (வண்டி எண்- 12841) மாலை 3.20க்கு புறப்பட்டு 25 மணிநேரம் 30 நிமிடங்களில் அடுத்த நாள் மாலை சுமார் 5 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைகிறது.

இந்த ரயில் இதுவரை சந்தித்த விபத்துக்கள்

கடந்த 2002ஆம் ஆண்டு மார்ச் 15 அன்று கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லூரை கடந்து சென்ற பதுகுபடு சாலைக்கு மேலுள்ள பாலத்தில் பிற்பகல் 2.40 மணியளவில் ஒரு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் நுற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். ரயில் பாதை மோசமாக இருந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என அப்போது சொல்லப்பட்டது.

2009ஆம் ஆண்டு பிப்ரவரி 13 அன்று இந்த ரயில் புவனேஸ்வரத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜெய்பூர் ஹைரோடு அருகே சென்றபோது தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்த்தாகத் தகவல்கள் வெளியாகின.

2012ஆம் ஆண்டு டிசம்பர் 30 அன்று ஒடிஷாவின் கஞ்சம் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சந்தித்த விபத்தில் இரண்டு யானைக்குட்டிகள் உள்பட 6 யானைகள் உயிரிழந்தன.

2014ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று லிங்கராஜ் ரயில் நிலையத்திற்கு அருகில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றபோது ரயிலில் தீ பற்றியது.

ரயிலில் இருந்து வெளியேறிய புகையைக் கொண்டு எங்கு தீ பற்றியது என்பது கண்டுபிடிக்கப்பட்ட பின் புவனேஸ்வரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு தீ அணைக்கப்பட்டது.

வெறும் 20 நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டு, தீயில் சேதமடைந்த பெட்டிகள் அந்த ரயில் நிலையத்திலேயே கழற்றிவிடப்பட்டன. பின்னர் ரயில் புறப்பட்டுச் சென்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: