தமிழ் சினிமாவின் நீண்டகால வசனகர்த்தா ஆருர்தாஸ் காலமானார் - ஆயிரம் படங்களுக்கு மேல் வசனம் எழுதியவர்

ஆரூர் தாஸ்
படக்குறிப்பு, ஆரூர் தாஸ்
பிரசுரிக்கப்பட்டது

தமிழ் திரையுலகில் நீண்டகாலம் வசனகர்த்தாவாக பணிபுரிந்த ஆரூர்தாஸ் வயது மூப்பின் காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91.

தமிழ்த் திரையுலகில் வசனகர்த்தாக்களுக்கு பெரும் மரியாதை இருந்த காலகட்டத்தில் திரையுலகில் அடியெடுத்துவைத்த ஆரூர்தாஸ், சுமார் 1000 படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார்.

ஆரூர்தாஸின் சொந்த ஊர் திருவாரூர். 1931ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி சந்தியாகு - ஆரோக்கிய மேரி தம்பதிக்குப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் யேசுதாஸ். இவர் தனது ஆரம்ப ஆண்டுகளை பவித்திர மாணிக்கம் என்ற சிற்றூரில் கழித்தார்.

திருவாரூரில் பள்ளிப் படிப்பை முடித்த நிலையில், மு. கருணாநிதி எழுதிய, சாந்தா அல்லது பழனியப்பன், தூக்கு மேடை, மந்திரி குமாரி ஆகிய நாடகங்களைப் பார்த்து தானும் அதுபோல எழுத வேண்டுமென ஆசைப்பட்டார். நண்பர்கள் சிலரைச் சேர்த்துக்கொண்டு ஜென்ம தண்டனை என்ற நாடகத்தை எழுதினார். அதற்குப் பிறகு திரிசூலம் என்ற நாடகத்தை எழுதினார்.

இதைப் பார்த்த சோமு என்பவர், அந்த காலகட்டத்தில் பாடலாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் விளங்கிய தஞ்சை ராமைய்யாவிடம் தாஸை சேர்த்து விட்டார்.

ஆரூர்தாஸ் அங்கேதான் வசனம் எழுதும் கலையை கற்றுக்கொண்டார். சுவாமி சங்கரதாஸ், பாஸ்கரதாஸ், விஸ்வநாததாஸ் என பெயர் வைத்தவர்கள் எல்லாம் புகழ்பெற்றவர்களாக இருப்பதால், ஜேசுதாஸிலிருந்த தாஸை எடுத்து அவருடைய சொந்த ஊரான திருவாரூரின் ஒரு பகுதியோடு சேர்த்து, ஆரூர்தாஸ் எனப் பெயர்வைத்தார் ராமையாதாஸ்.

ஆயிரம் படங்களுக்கு மேல் கதை, வசனம்

1958 - 59ல் தேவர் பிலிம்ஸ் தயாரித்துவந்த வாழ வைத்த தெய்வம் படத்திற்கு முதல் முதலாக வசனம் எழுதிக் கொண்டிருந்தார் ஆரூர்தாஸ்.

அந்த சமயத்தில் சிவாஜி - சாவித்திரி நடிக்க பீம்சிங்கின் இயக்கத்தில் பாசமலர் படத்தை தயாரிக்க முடிவாகியிருந்தது. அப்போது ஜெமினி கணேசன் - சாவித்திரி பரிந்துரையில், அந்தப் படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு ஆரூர்தாசுக்குக் கிடைத்தது. அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இதையடுத்து, சிவாஜி நடித்த 28 படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு ஆரூர்தாஸுக்குக் கிடைத்தது. சிவாஜியின் இத்தனை படங்களுக்கு வசனம் எழுதிய வசனகர்த்தா வேறு யாரும் கிடையாது. கிட்டத்தட்ட இதை எண்ணிக்கையில், எம்.ஜி.ஆர். நடித்த படங்களுக்கும் வசனம் எழுதினார் ஆரூர்தாஸ்.

ஆரூர் தாஸ்
படக்குறிப்பு, திரைக்குழுவினருடன் ஆரூர் தாஸ் (இடமிருந்து நான்காவது)
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தமிழ் இலக்கியத்தின் மீது மிகுந்த பற்றும் புலமையும் கொண்டிருந்த ஆரூர்தாஸின் வசனங்கள், அந்த காலகட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. நேரடியாக தமிழில் எடுக்கப்படும் படங்களுக்கு வசனம் எழுதியதோடு, வேறு மொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் படங்களுக்கும் வசனம் எழுதினார் ஆரூர்தாஸ்.

துவக்கத்தில் தெலுங்கலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்களுக்கு சில இடங்களில் வசனங்களை எழுதிக் கொண்டருந்த ஆரூர்தாஸ், பிறகு வாழ வைத்த தெய்வம் படத்திற்கு முழுமையாக வசனங்களை எழுதினார். இந்தப் படம் 1959ல் வெளிவந்தது.

இதில் துவங்கி, 2014ல் வெளிவந்த தெனாலிராமன் படம் வரை தொடர்ந்து வசனம் எழுதியுள்ளார் அவர்.

பாசமலர், பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, தாயைக் காத்த தனையன், அன்னை இல்லம், நீதிக்குப் பின் பாசம், புதிய பறவை, வேட்டைக்காரன், அன்பே வா, பெற்றால்தான் பிள்ளையா, தாலி பாக்கியம், தெய்வமகன், விதி ஆகியவை இவர் எழுதிய படங்களில் குறிப்பிடத்தகுந்தவை.

80களின் பிற்பகுதியிலும் 90களின் துவக்கத்திலும் பல தெலுங்குத் திரைப்படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, வெற்றிகரமாக ஓடின.

இதுதாண்டா போலீஸ், மன்னிக்க வேண்டுகிறேன், எவனா இருந்தா எனக்கென்ன ஆகிய டப்பிங் படங்களில் ஆரூர்தாஸின் வசனங்கள் குறிப்பிடத்தக்கவையாக இருந்தன.

இப்படியாக சுமார் 1000 படங்களுக்கு மேல் வசனம் எழுதியுள்ள ஆரூர்தாஸ், ஜெமினி கணேசன் நடிக்க  பெண் என்றால் பெண் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

ஆரூர்தாஸுக்கு பேபி என்ற மனைவியும் தாரா, உஷா, ஆஷா ஆகிய மகள்களும் ரவிச்சந்திரன் என்ற மகனும் இருக்கிறார்கள். 

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: