You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு : மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் பெரிய வித்தியாசம் வந்தது எப்படி?
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46% என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதிகபட்சமாக தருமபுரியில் 81.48 சதவீதமும் குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நிறைவுபெற்ற உடன், செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, மாநிலத்தின் சராசரி வாக்குப்பதிவு 72.09 சதவீதம் என அறிவித்திருந்தார். ஆனால் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, வாக்குப்பதிவு சதவீதம் இதைக் காட்டிலும் 2.63 சதவீதம் குறைவாக இருந்தது. இதுதவிர, மத்திய சென்னை உள்பட சில தொகுதிகளின் வாக்கு சதவீத நிலவரங்களில் பெரியளவில் வித்தியாசம் இருந்தது.
சென்னையின் மூன்று தொகுதிகள், மதுரை, ஸ்ரீபெரும்புதூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, கோவை ஆகிய தொகுதிகளில் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி 7 மணிக்கு வெளியிட்ட வாக்குவிகிதத்தை விட, இரவு 12.15 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்கு விகிதத்தில் பெரும் சரிவு காணப்படுகிறது.
கள்ளக்குறிச்சி, தருமபுரி, பெரம்பலூர், நாமக்கல், கரூர், அரக்கோணம், சேலம் ஆகிய தொகுதிகளில் 7 மணி வாக்குவிகிதத்தை விட, 12.15 மணி வாக்குவிகிதம் 4 முதல் 5% உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது 7 மணியளவில் தமிழ்நாட்டில் வாக்குவிகிதம் 72.09% என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார். ஆனால், இரவு 12.15 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட சராசரி வாக்குவிகிதம் 69.46% என்று கூறப்பட்டுள்ளது. இதை முந்தைய அளவோடு ஒப்பிடுகையில் 12.15 மணிக்கு வெளியிடப்பட்ட வாக்குவிகிதத்தில் 2.63% குறைந்துள்ளது.
இந்த 2.63% வேறுபாடு தான் தற்போது தமிழ்நாட்டில் அதிகம் பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது. ஆனால், இதில் எந்த முரண்பாடும், குளறுபடியும் இல்லை என்கிறார் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரான என்.கோபால்சாமி.
ஒவ்வொரு தேர்தலின் போதும் எப்படி வாக்குப்பதிவு விகிதம் வெளியிடப்படுகிறது என்பதை கோபால்சாமி பிபிசி தமிழிடம் விளக்கமாக கூறினார்.
“தேர்தல் நடக்கும் போது ஒவ்வொரு மண்டலத்திலும் குறிப்பிட்ட வாக்குசாவடிகளுக்கு பொறுப்பாக இருக்கும் அதிகாரி அவ்வப்போது கொடுக்கும் தோராய கணக்கே அடிக்கடி தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும்.”
“இதனடிப்படையில் தான் வாக்குப்பதிவு முடியும் சமயத்திலும் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு விகிதம் என்ன என்றும் தெரிவிக்கப்படும். ஆனால், அதுவும் இறுதிப்படுத்தப்பட்ட பட்டியல் கிடையாது.”
“ஒவ்வொரு வாக்காளரும் வாக்கு செலுத்தும்போது, 17A என்ற படிவத்தில் கையெழுத்திடுவார்கள். அப்படி இந்த படிவத்தில் எத்தனை வாக்காளர்கள் கையெழுத்திட்டுள்ளார்கள் என்பதை வாக்குப்பதிவு முடிந்த பிறகு கணக்கிட்டு 17C என்ற படிவத்தில் நிரப்புவார்கள். இதை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்த பிறகு, அவர்கள் இந்த வாக்குப்பதிவு விகிதத்தை அதற்கான மென்பொருளில் பதிவேற்றம் செய்து இறுதி விகிதத்தை வெளியிடுவார்கள்.
அதுவே இறுதிப்படுத்தப்பட்ட பட்டியல்” என்று கூறுகிறார் கோபால்சாமி.
சத்யபிரதா சாகு மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் ஆகிய இருவரும் வெளியிட்ட தரவுகளை ஒப்பிடுகையில் பல இடங்களில் கணிசமாக வித்தியாசம் காணப்படுகிறது. இதனால், வாக்குப்பதிவு விகிதத்தை கணக்கிடுவதில் ஏதேனும் குளறுபடி நடந்துள்ளதா என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறது.
இதுகுறித்து கோபால்சாமியிடம் கேட்கையில், “இதில் தவறு நடக்க சாத்தியமே இல்லை" என்று உறுதியாக கூறுகிறார்.
“தேர்தல் அதிகாரிகளை உடனுக்குடன் அப்டேட் கேட்டு ஊடங்கள் அழுத்துவதே இந்த முரண்பாட்டுக்கு காரணம். ஒரு மண்டல தேர்தல் அதிகாரி ஒவ்வொரு பூத்துக்கும் சென்று அங்கு பதிவாகியுள்ள வாக்குகளை தோராயமான கணக்கெடுத்து மேலே தெரிவிப்பதற்கு முன்பே அங்கு கணக்கு மாறிவிடும். எனவே அதற்கு ஏற்றாற்போல் அவரும் முன்பின் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ மதிப்பிட்டு கூறுவார். எனவே இயல்பாகவே இந்த சதவீதத்தில் வித்தியாசம் இருக்கும்” என்கிறார் அவர்.
முழு விவரத்தை இந்த காணொளியில் காணலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)