ட்விட்டர்: போனால் போகட்டும் ப்ளூ டிக்; கண்டு கொள்ளாத பிரபலங்கள்

பட மூலாதாரம், Getty Images
டிவிட்டரில் சரிபார்க்கப்பட்ட தனிநபர் கணக்குகளுக்கு வழங்கப்பட்டிருந்த நீலநிற அங்கீகாரக் குறியீட்டை (ப்ளூ டிக்) அந்த நிறுவனம் நீக்கியுள்ளது. இனி மாதாந்திரக் கட்டணம் செலுத்துவோருக்கு மட்டுமே ப்ளூ டிக் இருக்கும் என்பதால் உலகம் முழுவதும் பல பிரபலங்கள் தங்கள் ப்ளூ டிக்கை இழந்துள்ளனர்.
உலகின் மிகப் பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் தனது வாடிக்கையாளர்களில் சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கு, அவர்களது பெயர்களுக்கு அருகில் 'ப்ளூ டிக்'ஐ வழங்கியிருந்தது.
ஆனால், இந்த நிறுவனத்தை ஈலோன் மஸ்க் கையகப்படுத்திய பிறகு, பணம் செலுத்துவோருக்கு மட்டுமே இனி ப்ளூ டிக் அடையாளம் இருக்கும் என அறிவித்தார். இதற்கு முன்பு வழங்கப்பட்டிருந்த ப்ளூ டிக்குகள் ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, வியாழக்கிழமையன்று இரவு லட்சக்கணக்கானோரின் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு, அதனை லாபகரமான நிறுவனமாக மாற்றும் முயற்சியாக, பல்வேறு நடவடிக்கைகளை அவர் அறிவித்தார். அதன் ஒரு பகுதியாக ப்ளூ டிக்கிற்கு மாதச் சந்தா செலுத்தும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து தனது பெயருக்குப் பின்னால் ப்ளூ டிக்கை பயன்படுத்த விரும்புவோர் வருடத்திற்கு 84 டாலர்கள் செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் இருப்பவர்கள் ப்ளு டிக்கை வைத்துக்கொள்ள விரும்பினால் மாதம் 900 ரூபாய் செலுத்த வேண்டும்.
விளையாட்டு வீரர் ஒருவர் தனது பெயரை வைத்துக்கொண்டு ஒருவர் தவறான கருத்தைப் பதிவிட்டதாக வழக்குத் தொடர்ந்ததையடுத்து, ட்விட்டரில் ப்ளூ டிக் முதன்முதலாக 2009ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒரு கட்டத்தில் ப்ளூ டிக் என்பது சமூக வலைதளங்களில் ஒரு அந்தஸ்தின் அடையாளமாக மாறியது. ஆனால், தற்போது பணம் கட்ட முன்வரும் அனைவருக்கும் ட்விட்டர் ப்ளூ டிக்கை வழங்கிவருகிறது.
முன்பு, அங்கீகரிக்கப்பட்ட, சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கு ப்ளூ டிக் வழங்கப்பட்டு வந்ததால், பிரபலங்களின் கணக்குகளில் எது உண்மையான கணக்கு என்பது தெளிவாகத் தெரிந்தது. இப்போது பணம் செலுத்தாத பிரபலங்களின் ப்ளூ டிக் நீக்கப்பட்டிருப்பதால், இனிமேல் பிரபலங்களுக்கு உள்ள பின்தொடர்வோரை வைத்தே, எது சரியான கணக்கு என்பதை புரிந்துகொள்ள முடியும்.
பணம் செலுத்தாத பிரபலங்களின் கணக்குகளில் இருந்த ப்ளூ டிக் நீக்கப்பட்டதும், அவர்களது பெயரில் போலிக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு, வேடிக்கையான விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார்கள். இந்த நடவடிக்கையால், தவறான தகவல்கள் பெரிய அளவில் பரவும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், பணம் செலுத்துவோருக்கெல்லாம் ப்ளூ டிக்கை வழங்குவதன் மூலம் ட்விட்டரை ஜனநாயகப்படுத்தியிருப்பதாக ஈலோன் மஸ்க் கூறுகிறார்.
ஏப்ரல் 20ஆம் தேதி நண்பகல் 12 மணியிலிருந்து ப்ளூ டிக்குகளை நீக்கும் நடவடிக்கை துவங்கியது. அன்று இரவுக்குள் பணம் செலுத்தாத பெரும்பாலானவர்களின் ப்ளூ டிக்குகள் நீக்கப்பட்டன. மதத் தலைவர்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், பிரபலங்கள் தங்கள் ப்ளூ டிக்குகள் இந்த நடவடிக்கையால் இழந்துள்ளனர்.
நடிகர் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தனிப்பட்ட பக்கம், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் தங்கள் ப்ளூ டிக்களை இழந்துள்ளனர்.
ஈலோன் மஸ்க்கைப் பொறுத்தவரை, ட்விட்டரின் வருவாய்க்காக விளம்பரங்களைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்க நினைக்கிறார்.
தற்போது ட்விட்டரில் ப்ளூ டிக் மட்டுமல்லாமல் வெவ்வேறு விதமான அடையாளங்களும் வழங்கப்பட்டுவருகின்றன.
1. ப்ளூ டிக்: மாதாந்திரக் கட்டணம் செலுத்துவோருக்கு இந்த டிக் வழங்கப்படுகிறது. இவர்கள் ட்விட்டரின் சந்தாதாரர்கள்.
2. தங்க நிற டிக்: சரிபார்க்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் அதிகாரபூர்வ கணக்கிற்கு இந்த டிக் வழங்கப்படுகிறது. இவர்கள் தங்கள் புரொஃபைல் படத்தை சதுரவடிவிலும் வைத்துக்கொள்ளலாம்.
3. பழுப்பு நிற டிக்: இந்த நிற டிக் அரசு சார்ந்த அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது. மத்திய அரசு, மாநில அரசு, தூதரகங்கள், நாடாளுமன்றங்கள், சட்ட அமைப்புகள், கண்காணிப்பு அமைப்புகள், தேசத்தின் தலைவர்கள், துணைத் தலைவர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு இந்த நிற டிக் வழங்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
ப்ளூ டிக்கை இழந்த முதல்வர்கள்
சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கு வழங்கப்பட்ட ப்ளூ டிக் நீக்கப்பட்ட நிலையில், இந்தியாவின் பல மாநிலங்களின் முதல்வர்களது கணக்குகளுக்கு வழங்கப்பட்டிருந்த ப்ளூ டிக்குகளும் நீக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் ப்ளூ டிக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதல்வரின் ப்ளூ டிக்கைப் பொறுத்தவரை, அவர் அரசமைப்புப் பதவியில் இருப்பதால், பழுப்பு நிற டிக் கோரப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்குள் ப்ளூ டிக் நீக்கப்பட்டிருப்பதால், அதனை மீண்டும் பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் முதல்வரின் ப்ளூ டிக் திரும்பவரும் எனச் சொல்லப்படுகிறது.
கேரள முதல்வரின் ப்ளூ டிக், பழுப்பு நிறமாக மாற்றப்பட்டது. பிறகு மீண்டும் ப்ளூ டிக்காக மாற்றப்பட்டது. இந்த ப்ளூ டிக் நேற்று இரவு நீக்கப்பட்டிருக்கிறது.
தேசத்தின் தலைவர்கள், துணைத் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பழுப்பு நிற டிக் வழங்க ட்விட்டரின் விதிகள் அனுமதிக்கின்றன. ஆனால், மாநில மட்டத்தில் இது குறித்து தெளிவான விதிகள் இல்லாததாலேயே அவை நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
கண்டுகொள்ளாத தமிழ் சினிமா பிரபலங்கள்
திரைத்துறையில் ரஜினிகாந்த், விஜய், ஏ.ஆர். ரஹ்மான், ஷாருக்கான், சல்மான் கான் உட்பட பல்வேறு பிரபலங்களின் பக்கங்கள் ப்ளூ டிக்கை இழந்திருக்கிறது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், ப்ளூ டிக்கிற்கு நன்றி தெரிவித்து, தனது கருத்துகளும், பகிர்வுகளும் தொடரும் என வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார். இதேபோல், ரசிகர்களும் மீம், பதிவுகள் மூலம் ப்ளூ டிக் குறித்த தங்களை கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை பெரும்பான்மை பிரபலங்களின் ப்ளூ டிக் அகற்றப்பட்டுள்ள நிலையில், கமல்ஹாசன், சூர்யா ஆகியோர் ட்விட்டருக்கு சந்தா செலுத்தி தங்கள் பக்கங்களில் ப்ளூ டிக்கை தக்க வைத்துள்ளனர். ஏற்கனவே கெடு அறிவிக்கப்பட்ட நிலையில், சந்தாவை செலுத்தி ப்ளூ டிக்கை தக்க வைத்துக் கொள்ளாதது பிரபலங்கள் பலரும் ‘போனால் போகட்டும் ப்ளூ டிக்’ எனும் மனநிலையில் இருப்பதாகவே புரிந்து கொள்ள முடிகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




























