புதின்: ரஷ்ய அரசியலில் 24 ஆண்டுகளாக அசைக்க முடியாத தலைவராக நீடிக்கும் ரகசியம் என்ன?

காணொளிக் குறிப்பு, ரஷ்யாவில் அதிக காலம் அதிகாரத்தில் இருக்கும் நபராக புதின் விளங்குவது எப்படி?
புதின்: ரஷ்ய அரசியலில் 24 ஆண்டுகளாக அசைக்க முடியாத தலைவராக நீடிக்கும் ரகசியம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

ரஷ்ய அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் விளாதிமிர் புதின் 87 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றிபெற்றிருப்பதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 71 வயதாகும் புதின் 5வது முறையாக மீண்டும் அதிபராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது. அவருக்கு எதிரான எதிர்ப்பின் அனைத்து சாயல்களும் மறைந்துவிட்டன. புதின் விரும்பும் பட்சத்தில் 2036ஆம் ஆண்டுவரை அவர் அதிபராக நீடிப்பதை யாராலும் தடுக்க முடியாத நிலை உள்ளது.

மறுபுறம், ரஷ்ய அதிபர் தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை என மேற்கத்திய நாடுகள் குற்றச்சாட்டுகளை முன்வைக்க தொடங்கியுள்ளன.

புதினின் இளமைக் காலம்

லெனின்கிராட் மாநிலப் பல்கலைக்கழகத்தில் தனது சட்டப் படிப்பை முடித்தபின் சோவியத் உளவுத் துறையில் பணிக்குச் சேர்ந்தார். அப்பணி அவருக்கு மிகவும் பொருத்தமானதாக இருந்தது.

1985-ஆம் ஆண்டு, கேஜிபி-யின் கிழக்கு ஜெர்மனி பிரிவில் பணியமர்த்தப்பட்ட அவர், 1989-ஆம் ஆண்டு அந்த கம்யூனிஸ்ட் அரசின் வீழ்ச்சியை நேரில் கண்டார்.

கிளர்ச்சியாளர்கள் அவரது அலுவலகத்தை முற்றுகையிட வந்தபோது அவர்களை எச்சரித்துத் துரத்தினார். ஆனால் அவருக்கு ரஷ்ய அரசிடமிருந்து எந்த உதவியும் வரவில்லை.

அடுத்த ஆண்டு அவர் ரஷ்யாவுக்குத் திரும்பியபோது, ரஷ்ய கம்யூனிச அரசியல் கட்டமைப்பே ஒரு வீழ்ச்சியின் விளிம்பில் இருந்தது.

புதினால் கேஜிபி-யில் பெரும் பதவிகளுக்குச் செல்ல முடியவில்லை. அவரது உயரதிகாரியாக இருந்த நிகோலாய் லியோனோவ், புதினை பெரும் திறமைகளற்ற சாதாரணமான பணியாளர் என்று கருதினார்.

அரசியலில் புதினின் ஆரம்ப நாட்கள்

1991-ஆம் ஆண்டு புதின், அப்போது லெனின்கிராட் நகரத்துக்கு புதிய மேயராகப் பொறுப்பேற்ற அனடோலி சோப்சாக் என்பவருக்குக் கீழ் துணை மேயரானார்.

சோப்சாக் பதவியிழந்தபின், புதின் மாஸ்கோவில் அதிபர் போரிஸ் யெல்ட்சினின் நிர்வாக அலுவலகத்தில் வேலை செய்ய அழைக்கப்பட்டார். அதன்பின் வந்த வருடங்களில்தான் அவரது அரசியல் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது.

அவர் சிலகாலம் கேஜிபி-க்கு பதிலாக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு பாதுகாப்புச் சேவைக்குத் தலைமை தாங்கினார். அதன்பின் அதிபருக்குக் கீழ் இயங்கிய பாதுகாப்புக் குழுவின் செயலாளரானார்.

1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், உடல்நிலை குன்றியிருந்த அதிபர் போரிஸ் யெல்ட்சின், தனது பிரதம மந்திரியை நீக்கிவிட்டு, அப்பதவியில் புதினை அமர வைத்தார்.

2000-ஆம் ஆண்டில் வரவிருந்த அதிபர் தேர்தலுக்கு முந்தைய சீர்திருத்தங்களை புதின் கவனித்துக் கொண்டார்.

அப்போது மாஸ்கோ நகரில் பல குண்டுவெடிப்புகள் நிழந்தன. அதைத் தொடர்ந்து செச்னியா மாகாணத்தில் கிளர்ச்சியை ஒடுக்க ராணுவத்தை அனுப்பினார். அதில் பல செச்னிய மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் புதினின் முயற்சி வெற்றியடைந்தது.

இந்தக் காலகட்டத்தில் அவர் வேகமாக பிரபலம் அடைந்தார். 1999-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் பொறுப்பு அதிபராகப் பதவியில் அமர்த்தப்பட்டார். சில மாதங்கள் கழித்து தேர்தலுக்குப் பிறகு முதல்முறை முழுநேர ரஷ்ய அதிபரானார்.

கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 24 ஆண்டுகளாக புதின் பதவியில் இருக்கிறார். ரஷ்யாவின் பிரதமராகவும் அவர் இருந்துள்ளார். சோவியத் ஒன்றியத்தின் சர்வாதிகாரியாக திகழ்ந்த ஜோசப் ஸ்டாலினுக்கு பிறகு ரஷ்யாவில் அதிக காலம் அதிகாரத்தில் இருக்கும் நபராக புதின் விளங்குவது எப்படி? உளவாளியாக வாழ்க்கையை தொடங்கிய புதின் அதிபராக உயர்ந்தது எப்படி?

இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)