துணைவேந்தர்கள் நியமனம்: இடைக்கால தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் - அடுத்து என்ன நடக்கும்?

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பல்கலைக்கழகங்களில் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 சட்டத்திருத்தங்களின் செயல்பாட்டுக்கு கடந்த ஆண்டு மே மாதம் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை புதன்கிழமையன்று (பிப்ரவரி 4) உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

நீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வில், 'இந்த வழக்கு அவசர அவசரமாக விசாரிக்கப்பட்டது ஏன்?' எனவும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேற்கண்ட வழக்கைக் காரணம் காட்டி, 'துணைவேந்தர் நியமனத்துக்கு மாநில அரசு தேடுதல் குழுவை அமைத்திருப்பதை சட்டத்துக்கு முரணானது' என ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்திருந்தார். இந்தநிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் அடுத்து என்ன நடக்கும்?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன்மூலம் மாநில அரசால் நடத்தப்படும் 13 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

'வேந்தர்' என்ற இடத்தில் 'அரசு' என மாற்றம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பினார்.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்தது. வழக்கின் முடிவில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.

இதன் காரணமாக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசிடம் வந்தது. இது பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறி வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த ஆண்டு மே மாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக மாநில அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு இடைக்கால தடை விதித்தது.

'போதிய வாய்ப்பை வழங்கவில்லை' - உச்ச நீதிமன்றம்

உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்‌ஷி மற்றும் விபுல் பஞ்சோலி அமர்வு விசாரித்தது.

"சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பிப்பதற்கு முன்பாக, மாநில அரசுக்குப் போதுமான வாய்ப்பை வழங்கியிருக்க வேண்டும்" என, வழக்கின் விசாரணையின்போது நீதிபதிகள் தெரிவித்தனர்.

வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி தலைமை நீதிபதி அமர்வு அல்லது பொருத்தமான அமர்வில் பட்டியலிடப்பட வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், 'சம்பந்தப்பட்டவர்களின் வாதங்களைக் கேட்க வேண்டும்' என உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தின் முடிவு வெளியில் வரும் வரை எந்த நியமனங்களும் மேற்கொள்ளப்படக் கூடாது என உத்தரவிட விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதனை ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், "அதுவரை எந்த நியமனங்களையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை" எனத் தெரிவித்தார்.

இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை ஆறு வாரங்களுக்குள் முடிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது. முன்னதாக இதே வழக்கை மேற்கோள் காட்டி பிப்ரவரி 2 ஆம் தேதியன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

'விதிகளுக்கு மாறான குழுக்கள்' - ஆளுநர் ஆர்.என்.ரவி

கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் உள்பட சில மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்திருந்தது.

ஆனால், நீதிமன்ற உத்தரவுகளுக்கு மாறாக தேடுதல் குழுவை அமைத்தும் சில பல்கலைக்கழகங்களில் தேடுதல் குழுவின் பதவிக் காலத்தை நீட்டித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 2 அன்று தமிழ்நாடு லோக் பவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

'துணைவேந்தர் பதவிக்கு நியமனம் செய்யப்படும் நபர்களின் பெயர்ப் பட்டியலை பரிந்துரை செய்வதற்கான தேடுதல், தேர்வுக் குழுக்களில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதி இருக்க வேண்டும்' என, 2018 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளில் கூறப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த விதிமுறையை உச்ச நீதிமன்றம் (பேராசிரியர் ஸ்ரீஜித் எதிர் டாக்டர் ராஜஸ்ரீ வழக்கு) உறுதி செய்துள்ளதாகக் கூறியுள்ள ஆளுநர், 'ஜனவரி 31 ஆம் தேதி எஸ்.மோகன் எதிர் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக வேந்தரின் செயலர் வழக்கிலும் இது வலியுறுத்தப்பட்டுள்ளது' எனக் கூறியுள்ளார்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளுக்கு மாறாக அமைக்கப்படும் தேடுதல் குழுவின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு துணைவேந்தர் நியமனமும் செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

மாநில பல்கலைக்கழக சட்டங்களின்படி அதன் வேந்தராக ஆளுநர் செயல்படுகிறார். இதனைக் குறிப்பிட்டுள்ள ஆர்.என்.ரவி, 'தேடுதல் குழுக்களால் பரிந்துரைக்கப்பட்ட மூன்று பேர் பட்டியலில் இருந்து ஒருவர் துணைவேந்தர் பதவியில் வேந்தரால் நியமிக்கப்படுகிறார்' எனக் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் பல்கலைக்கழக சட்டத் திருத்தத்துக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமிநாராயணன் அமர்வு இடைக்கால தடை விதித்ததை ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கோள் காட்டியுள்ளார்.

'உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட தேடுதல் குழுக்கள் சட்டத்துக்கு முரணானவை' என, லோக் பவன் தெரிவித்துள்ளது.

துணைவேந்தர் தேடுதல் குழுக்களின் காலத்தை வரும் மார்ச் 21 வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாகக் கூறியுள்ள ஆர்.என்.ரவி, "பெரியார் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு யுஜிசி பிரதிநிதி இல்லாமல் ஜனவரி 24, 27 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார்.

இதுபோன்ற நடவடிக்கைகள் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானதாக உள்ளதாக லோக்பவன் கருதுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் இறுதி உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் வரை துணைவேந்தர் தேர்வு மற்றும் நியமனம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் உடனே நிறுத்தி வைக்குமாறு தமிழ்நாடு அரசை அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்தநிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

யுஜிசி விதிகளை அமல்படுத்த முடியுமா?

"அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் இடைக்கால தடையை நீதிபதிகள் ரத்து செய்துள்ளதாக கருதுகிறோம்" எனக் கூறுகிறார், தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் சுரேஷ்.

துணைவேந்தர் தேடுதல் குழுவை மாநில அரசு அமைத்திருப்பது குறித்துப் பேசிய சுரேஷ், "ஒவ்வொரு பல்கலைக்கழகங்களுக்கும் தனித்தனி சட்ட விதிகள் உள்ளன. அதன்படியே துணைவேந்தர் தேர்வுக்கான குழுவை அமைக்க முடியும்" என்கிறார்,

இந்தக் குழுவில் ஆளுநர் பிரதிநிதி, மாநில அரசின் பிரதிநிதி, சிண்டிகேட் அல்லது செனட் பிரதிநிதி என மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

சில பல்கலைக்கழக சட்டங்களில் 'ஆளுநர் பிரதிநிதி' என்ற வார்த்தையே இல்லாமல் உள்ளதாகக் கூறும் சுரேஷ், "இதில் தங்கள் தரப்பு பிரதிநிதியை சேர்க்குமாறு பல்கலைக்கழக மானியக் குழு கூறியது. அவ்வாறு நியமிக்க வேண்டும் என்றால் பல்கலைக்கழகங்களின் சட்ட விதிகளை மாற்ற வேண்டும்" என்கிறார்.

அவரது கூற்றுப்படி, "ஓர் ஆசிரியருக்கான தகுதி குறித்து பல்வேறு விதிகளை பல்கலைக்கழக மானியக் குழு வகுத்துள்ளது. இதனை அரசு ஏற்றுக் கொள்கிறது. ஆனால், ஆசிரியர் நியமனங்களை மாநில அரசு தான் மேற்கொள்கிறது".

இதே கருத்தை முன்வைக்கும் தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு, "மாநிலப் பட்டியலில் கல்வி இருந்தபோது, பல்கலைக்கழக சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதனை மாற்றாமல் மானியக் குழுவின் விதிகளை செயல்படுத்த முடியாது" என்கிறார்.

1976 ஆம் ஆண்டு மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு கல்வி மாற்றப்பட்டதை மேற்கோள் காட்டி இவ்வாறு அவர் குறிப்பிட்டார். இதனை ஆளுநர் மாளிகை புரிந்து கொள்ளத் தவறுவதாகவும் அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

சபாநாயகர் அப்பாவு கூறியது என்ன?

ஆளுநரின் கருத்து தொடர்பாக, செவ்வாய் கிழமையன்று (பிப்ரவரி 3) செய்தியாளர் சந்திப்பில் சில விளக்கங்களை சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

அவர் பேசும்போது, "பல்கலைக்கழகங்களின் சட்ட விதிகளின்படியே துணைவேந்தர் நியமனம் செய்யப்படுகிறார். இதற்கும் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" எனக் கூறியுள்ளார்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்பதற்கு எதிராக பல்வேறு மாநிலங்கள் நீதிமன்ற தீர்ப்பைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளை ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் அந்தந்த மாநில அரசுகளின் உரிமை என நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியுள்ளன. இதனை ஆளுநர் படித்துப் பார்க்க வேண்டும்" எனவும் அப்பாவு தெரிவித்தார்.

'பல்கலைக்கழகங்களுக்கு கடும் பாதிப்பு'

தமிழ்நாட்டில் சுமார் எட்டுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதன் காரணமாக பல்கலைக்கழக பணிகளில் தொய்வு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் மூன்று பேர் கொண்ட துணைவேந்தர் கமிட்டி ஒன்று செயல்படுகிறது.

இந்தக் கமிட்டியை பல்கலைக்கழக சிண்டிகேட் குழு முடிவு செய்கிறது. இதன் ஒருங்கிணைப்பாளராக உயர் கல்வித்துறை செயலர், கல்லூரிக் கல்வி இயக்கக ஆணையர் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படுகிறார்.

மற்ற இருவரும் சிண்டிகேட் குழுவில் இருந்து தேர்வு செய்யப்படுகின்றனர். "இவர்கள் மூவரும் வெவ்வேறு இடங்களில் உள்ளனர். எந்தப் பணியாக இருந்தாலும் மூன்று பேரும் சேர்ந்து கையொப்பமிட வேண்டும். இதனால் பல்கலைக்கழகத்தின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன" என்கிறார், தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் சுரேஷ்.

தொடர்ந்து பேசிய அவர், "துணைவேந்தர் இருந்தால் புதிய கல்லூரி தொடங்குவதற்கு அனுமதி கொடுப்பது, புதிய படிப்புகளுக்கு அனுமதி அளிப்பது, ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் சம்பளத்தில் கையெழுத்திடுவது உள்பட அனைத்து வேலைகளையும் பார்க்க வேண்டும்" என்கிறார்.

துணைவேந்தர் இல்லாததால் ஆசிரியர், மாணவர், ஆசிரியர் அல்லாத ஊழியர் என அனைவரின் நலன்களும் பாதிக்கப்படுவதாகக் கூறும் அவர், "இணைப்புக் கல்லூரிகளுக்கு பாடப் புத்தகங்கள், தேர்வு ஆகியவற்றை பல்கலைக்கழகம் முடிவு செய்கிறது. துணைவேந்தர் இல்லாததால் இப்பணியில் பாதிப்பு ஏற்படுகிறது" எனக் குறிப்பிட்டார்.

'தேடுதல் குழுவை அமைப்பது சட்டவிரோதம்' - பா.ஜ.க

தமிழ்நாடு பா.ஜ.க தலைமைச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பிபிசி தமிழ் பேசியது.

"பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளை மீறி தமிழ்நாட்டின் சில பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்வதற்கு தேடுதல் மற்றும் தேர்வுக் குழுவை அமைப்பது சட்டவிரோதமானவை" என்கிறார்.

தேடுதல் குழுக்கள் செயல்படுவதற்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை எனவும் ஆளுநர் அதிகார மீறல் செய்வதாக தமிழ்நாடு அரசு வாதிடுவதாகவும் அவர் விமர்சித்தார்.

ஆளுநரின் நிலைப்பாடு சட்டரீதியாக சரியாக உள்ளதாகக் கூறும் நாராயணன் திருப்பதி, விதிமுறைகளைப் பின்பற்றாமல் தேடுதல் குழுவின் பணி தொடர்ந்தால், இந்த நியமனங்கள் செல்லாதவையாக மாறிவிடும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆறு வாரங்களில் உத்தரவு வெளியாகும்போது துணைவேந்தர் நியமனம் தொடர்பான சர்ச்சைகளும் முடிவுக்கு வந்துவிடும்" எனக் கூறுகிறார், தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் சுரேஷ்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு