காணொளி: நியூயார்க் மேயராக தேர்வான ஸோஹ்ரான் மம்தானி கடந்து வந்த பாதை

காணொளி: நியூயார்க் மேயராக தேர்வான ஸோஹ்ரான் மம்தானி கடந்து வந்த பாதை
பிரசுரிக்கப்பட்டது

நியூயார்க் நகரின் முதல் முஸ்லீம் மேயர் இவர். அதுமட்டுமல்லாமல் முதல் இந்திய வம்சாவளி மேயரும் கூட. அதுபோக 1892ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு நியூயார்க்கின் இளைய மேயர் என்ற பெருமையும் இவரையே சேரும். ஆம். 34 வயதில் மம்தானி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு வரை இவர் யாரென்று பலருக்கும் தெரியாது. ஆனால் இப்போது நியூயார்க் நகரின் மேயராக தேர்வாகி, உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார். அவரை குறிப்பிட்டு, ஒரு கம்யூனிஸ்ட் மேயராக தேர்தெடுக்கப்பட்டால், நியூயார்க்கின் நிதியை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார்.

மேயராக தேர்வானதும் முன்னாள் பிரதமர் நேருவின் வார்த்தைகளை குறிப்பிட்டு மம்தானி பேசினார். முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர் கர்டிஸ் சில்வா ஆகியோரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளார். வரும் ஜனவரியில் பதவியேற்கவுள்ளார்.

ஸோஹ்ரான் மம்தானியின் இந்திய பின்னணி

இவரின் முழுப்பெயர் ஸோஹ்ரான் குவாமே மம்தானி. இவர் 1991-ஆம் ஆண்டு உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவில் பிறந்தார். கானா நாட்டின் முதல் பிரதமரான குவாமே நக்ருமாவின் நினைவாக மம்தானியின் தந்தை இவருக்கு குவாமே என்ற நடுப் பெயரைச் சூட்டியுள்ளார்.

இவரின் தாய் புகழ் பெற்ற இந்திய-அமெரிக்க திரைப்பட மீரா நாயர். Monsoon Wedding, Salaam Bombay, Mississippi Masala, Kama Sutra: A Tale of Love போன்ற படங்களை இயக்கியுள்ளார். பத்ம பூஷன், கான் திரைப்பட விருது என உயரிய விருதுகளை வென்றுள்ளார். இவரின் தந்தை புகழ் பெற்ற கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் மஹ்மூத் மம்தானி ஆவர்.

5 வயதில் இவரது குடும்பம் தென்னாப்ரிக்காவுக்கு குடிபெயர்ந்தது. பின் அவரது 7 வயதில் நியூயார்க்கிற்கு குடிபெயர்ந்தனர். அங்கே உள்ள பிராங்க்ஸ் உயர்நிலை அறிவியல் பள்ளியில் பயின்றார். 2014-இல் போடன் கல்லூரியில் ஆப்ரிக்க ஆய்வுகளில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

பின் 2018-இல் இவர் அமெரிக்க குடிமகன் ஆனார். அரசியலுக்கு வருவதற்கு முன் housing counsellor அதாவது வீட்டுவசதி ஆலோசகராக இருந்தார். குயின்ஸ் நகரில் குறைந்த வருமானம் கொண்ட வீட்டு உரிமையாளர்களுக்காக போராடினார்.

2021-ஆம் ஆண்டில், குயின்ஸில் உள்ள மாவட்டம் 36-ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் நியூயார்க் மாநில சட்டமன்றத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மம்தானியின் நோக்கம் என்ன?

மேயர் தேர்தலுக்கான பிரசாரத்தின்போது சமூக வலைதளத்தில் பரவலாக அறியப்பட்டார். ஜனநாயக கட்சினரே தங்களின் சொந்த கட்சி மீது நம்பிக்கையை இழந்திருந்த சமயத்தில், வைரல் வீடியோக்கள், பாட்காஸ்ட்கள் என சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருந்து வாக்காளர்களுடன் இணக்கமாக இருந்தார்.

அவர் தன்னை ஒரு ஜனநாயக சோசலிஸ்ட் என அழைக்கிறார். பெரிய பெரிய நிறுவனங்களுக்காக அல்லாமல் தொழிலாளர்களின் குரலை அங்கீகாரப்பதே இதன் நோக்கம் ஆகும்.

மம்தானியின் வாக்குறுதிகள் என்னென்ன?

நியூயார்க்கில் இலவச பேருந்து சேவை... குறைந்த விலையில் மளிகை பொருட்கள்... குழந்தை பராமரிப்புக்கான செலவைக் குறைப்பது உள்ளிட்டவை இவரது வாக்குறுதிகளாகும்.

மேயரான பின் மம்தானி பேசியது என்ன?

நியூயார்க் நகரின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் செவ்வாய்க்கிழமை இரவு மக்கள் மத்தியில் மம்தானி உரையாற்றினார்.

இவர் மேடை ஏறியதும், மக்கள் அரங்கம் அதிர கைத்தட்டி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

"அனைத்து முரண்பாடுகளையும் தாண்டி இன்று நாம் வென்றுவிட்டோம். எதிர்காலம் நமது கையில் உள்ளது. குடும்ப அரசியலை நாம் வீழ்த்திவிட்டோம். புதிய மாற்றம் மற்றும் புதுவித அரசியலுக்குள் நுழையப்போகிறோம்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு