You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கன்னியாகுமரியில் பாலியல் சீண்டலை தட்டிக் கேட்ட பெண்ணை மின் கம்பத்தில் கட்டி வைத்த விஷமிகள் - மூவர் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம் மேல்புறம் பகுதியை சேர்ந்தவர் கலா (35). கணவரை இழந்த இவர் தனது 9 வயது மகளுடன் வசித்து வருகிறார். மார்த்தாண்டம் பகுதியில் ஒரு மசாஜ் சென்டரையும் கலா நடத்தி வருகிறார்.
வீட்டில் தனிமையில் இருப்பதால் மகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதிய கலா, தனது மகளை காப்பகத்தில் சேர்த்து படிக்க வைத்து வந்துள்ளார்.
இந்த நிலையில், தான் நடத்தி வரும் மசாஜ் சென்டருக்கு கலா மேல்புறம் வழியாக செல்லும் போது அந்த பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் தினசரி கலாவை பாலியல் சீண்டல் செய்வதாகவும் அவதூறாகவும் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பயந்து போன கலா தனது பாதுகாப்பிற்காக மிளகாய்ப்பொடியும் கத்தியையும் கைவசம் வைத்திருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் வியாழக்கிழமை வழக்கம் போல் கலா தனது மசாஜ் சென்டருக்கு செல்வதற்காக மேல்புறம் பகுதிக்கு வந்தபோது அங்கு நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர், கலாவை பார்த்து கிண்டல் செய்தபடி அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து கலா தன் கைவசம் வைத்திருந்த மிளகாய்ப்பொடியை எடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் மீது எறிந்து விட்டு தன்னை காப்பாற்றிக் கொள்ள முயன்றுள்ளார்.
அப்போது அங்கு நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநர்களில் சிலர் கலாவை பலவந்தமாக பிடித்து அவரது கை, கால்களை துணியால் கட்டி மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கலா தெரிவித்துள்ளார்.
கலா ஒரு மணி நேரத்திற்கு மேல் மின் கம்பத்திலேயே கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அருமனை போலீசார் மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கலாவை மீட்டு காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
தனக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து போலீசாரிடம் கலா தெரிவித்துள்ளார். இதையடுத்து பெண்ணை மின் கம்பத்தில் கட்டி வைத்து துன்புறுத்தியதாக மேல்புறம் பகுதியை சேர்ந்த சசி, வினோத், திபின் , விஜயகாந்த், அரவிந்த் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் சசி, வினோத், விஜயகாந்த் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக இருக்கும் திபின் மற்றும் அரவிந்தை போலீசார் தேடி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்