You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐவிஎஃப் செய்யும் முன் வேறு என்னென்ன சிகிச்சைகள் செய்யப்படும்? குழந்தையின்மை பற்றிய 15 கேள்வி-பதில்கள்
- எழுதியவர், பிரியங்கா திமன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
கருத்தரிக்க சரியான வயது எது, இளம் தம்பதிகள் கூட ஏன் பெற்றோராக ஆவதில் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள், இதுபோன்ற பிரச்னையுடன் தம்பதிகள் மருத்துவரை அணுகினால் என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன என்று யாராவது கேட்டால், பல சிகிச்சைகளுக்குப் பிறகு, பல தம்பதிகள் ஐவிஎஃப் முறையை நாடுகின்றனர், ஆனால் ஐவிஎஃப் போன்ற ஒரு சிகிச்சை எப்போது அவசியமாகிறது?
இது குறித்து, பிபிசி பஞ்சாபியின் 'ஹை லத் பாட்காஸ்ட் ஹெல்த் சீக்ரெட்ஸ்' நிகழ்ச்சியில் மூத்த ஐவிஎஃப் ஆலோசகர் சிம்ரன்தீப் கௌருடனான கலந்துரையாடல் இங்கே கேள்வி - பதில் வடிவில் தரப்பட்டுள்ளது.
1. குழந்தையின்மை பிரச்னைகளுடன் ஒரு தம்பதி வரும் போது சிகிச்சையின் முதல் படி என்னவாக இருக்கும்?
சிகிச்சையின் முதல் படி, கணவன் மற்றும் மனைவி இருவரின் மருத்துவ ரீதியான தகவல்களை விரிவாகக் கேட்டறிவதாகும் (இதுவரை அவர்கள் எதிர்கொண்ட பிரச்னைகளைத் தெரிந்துகொள்ள). இதன் மூலமே சுமார் 80 சதவிகித காரணங்களை நாம் அறிந்துகொள்ள முடியும். பெண்ணின் மாதவிடாய் சுழற்சி குறித்த தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம்; அதேபோல நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் அல்லது தைராய்டு போன்ற பிரச்னைகள் ஏதேனும் இருந்தால் அதைத் தெரிந்துகொள்வதும் முக்கியம், ஏனெனில் சில சமயங்களில் இவை கருமுட்டைப் பாதைகள் (tubes) அல்லது கருப்பையைப் பாதிக்கக்கூடும்.
இக்காலத்தில், தம்பதியினரின் பணி சார்ந்த விவரங்களை அறிந்துகொள்வது மிக முக்கியம்; ஏனெனில், அது ஹார்மோன் சமநிலையைப் பாதிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, நீண்ட நேரம் அல்லது இரவு நேரப் பணிகளில் ஈடுபடும் தம்பதியினருக்கு இது போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
ஆண்களைப் பொறுத்தவரை, அவர்கள் மது, சிகரெட் அல்லது வேறு ஏதேனும் போதைப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்களா என்பதைக் கண்டறிவது அவசியம். உடற்பயிற்சி கூடங்களுக்குச் செல்பவர்கள் பலர் பல்வேறு சத்து மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள்; இதுவும் அவர்களைப் பெரிதும் பாதிக்கக்கூடும். எனவே, இவை அனைத்தையும் கண்டறிவது மிகவும் முக்கியம். அதன் பிறகு, நாங்கள் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்கிறோம்.
2. தம்பதியினருக்குச் செய்யப்படும் முக்கிய பரிசோதனைகள் யாவை?
தலசீமியா பரிசோதனை செய்துகொள்வது மிகவும் முக்கியம். அதேபோல, ரத்தப் பரிசோதனைகள், தைராய்டு மற்றும் ஹார்மோன் பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன. இவை தவிர, கருமுட்டை இருப்பு மற்றும் கருமுட்டையின் தரம் ஆகியவற்றுக்கான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆண்களுக்கு முக்கியமாக விந்துப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இந்தப் பரிசோதனைகள், பிரச்னை எந்த இடத்தில் உள்ளது என்பதைத் தோராயமாக அறிந்துகொள்ள உதவுகின்றன.
3. இயற்கையாக கருத்தரிப்பதில் சிரமம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன?
இயற்கையாகக் கருத்தரிப்பதில் ஏற்படும் சிக்கல்களுக்கு முக்கியக் காரணம் வாழ்க்கை முறைதான். இரண்டாவதாக, தற்காலத்தில் பலரும் தாமதமாகத் திருமணம் செய்துகொள்கிறார்கள்; இதனால், கருத்தரிக்கும் திறன் குறையத் தொடங்கும் 34-35 வயதில்தான் அவர்கள் இச்சிக்கலை எதிர்கொள்கிறார்கள்.
வாழ்க்கை முறையும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது இயந்திரங்களின் யுகமாக இருப்பதால், அனைவரும் இயந்திரங்களின் உதவியையே நாடுகிறார்கள்; வேலைக்குச் செல்லும் தம்பதியரின் வீடுகளில் வீட்டு வேலைக்கு ஆட்கள் உள்ளனர், அமர்ந்தபடியே செய்யும் வேலைகள் அதிகம். மக்கள் துரித உணவுகளை (junk food) அதிகமாக உட்கொள்கிறார்கள் - இவற்றால் உடல் பருமன் அதிகரிக்கிறது. இவை அனைத்தும் ஒன்றிணைந்து சிக்கல்களை உருவாக்குகின்றன.
உடற்பயிற்சி மற்றும் உடல் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடும்போது, நன்மை பயக்கும் ஹார்மோன்கள் சுரக்கின்றன; இவை கருத்தரிப்பதற்கு உதவுகின்றன.
4. வாழ்க்கை முறையை மேம்படுத்த என்ன மாதிரியான மாற்றங்களைச் செய்ய வேண்டும்?
முதலாவதாக, உங்கள் உடல் இயக்கத்தை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். உதாரணமாக, உங்கள் வேலை நீண்ட நேரம் அமர்ந்து செய்யும் வகையிலானதாக இருந்தால், ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒருமுறை எழுந்து சிறிது தூரம் நடந்து செல்லுங்கள். உங்கள் வாழ்க்கை முறையில் யோகாவைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; குறிப்பாக, கருவுறுதல் திறனை அதிகரிக்க 'மாலாசனம்' (Mal Asana) மிகவும் சிறந்தது.
இது தவிர, ஓட்டம் அல்லது மெதுவோட்டம் (jogging) போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். முடிந்தவரை வாகனங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக நடந்து செல்லுங்கள்; மின்தூக்கியைப் (lift) பயன்படுத்துவதற்குப் பதிலாகப் படிக்கட்டுகளைப் பயன்படுத்துங்கள்.
உங்கள் உணவு மற்றும் பானங்கள் விஷயத்தில் சிறப்புக் கவனம் செலுத்துங்கள். வெளி உணவுகளைத் தவிர்த்து, வீட்டிலேயே சமைத்த உணவை உண்ண முயற்சி செய்யுங்கள். பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள், ஆளி விதைகள் (flax seeds), அனைத்து வகையான உலர் பழங்கள், புதிய பழங்கள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இறுதியாக, மன அழுத்தமற்ற வாழ்க்கையை வாழுங்கள்.
5. மன அழுத்தமும் குழந்தையின்மைக்கு ஒரு முக்கிய காரணமா?
மன அழுத்தம் நம் உடலில் கார்டிசோல் என்ற ஹார்மோனை வெளியிடுகிறது. இது கருத்தரிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்துவதோடு, கருத்தரிக்கத் தேவையான ஹார்மோன்களையும் சீர்குலைக்கிறது. உங்கள் உடல் ஓய்வெடுக்கும்போது, கருத்தரிக்க உதவும் பல நல்ல ஹார்மோன்கள் வெளியிடப்படுகின்றன.
6. பெண் மற்றும் ஆணுக்கு குழந்தையின்மை பிரச்னைக்கு வெவ்வேறு காரணங்கள் உள்ளனவா?
மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்ற வாழ்க்கை முறை காரணிகள் பெண்களை சமமாக பாதிக்கின்றன. உடல் பருமன், புகைபிடித்தல், மது மற்றும் போதைப்பொருள் ஆகியவையும் இருபாலரையும் பாதிக்கின்றன. ஆனால், உடலை வலுப்படுத்தும் நோக்கில் உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்று பல்வேறு சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் ஆண்களுக்கு, விந்தணு உற்பத்தி கணிசமாகக் குறைகிறது.
புரதச் சத்து மாத்திரைகள் தீங்கு விளைவிப்பதில்லை, ஆனால் அனபாலிக் ஸ்டீராய்டுகள் அடங்கிய சத்து மாத்திரைகள் தீங்கு விளைவிப்பவை. அவை உங்கள் உடலுக்குள் செல்லும்போது, விந்தணு உற்பத்தியை கணிசமாகக் குறைக்கின்றன.
7. கருமுட்டைகளின் எண்ணிக்கை குறைவதற்கு முக்கிய காரணம் என்ன?
பெண்களிடம் கருமுட்டைகளின் எண்ணிக்கை குறைவதற்கு முக்கியக் காரணம் அவர்களின் வயதுதான். வயது அதிகரிக்கும்போது, அவர்களது கருமுட்டை இருப்பு குறைகிறது.
35 வயதுக்குப் பிறகு கருமுட்டை இருப்பு மிகக் கணிசமாகக் குறையத் தொடங்குகிறது. 30 வயதுக்குப் பிறகே இது குறையத் தொடங்கினாலும், 35 வயதுக்குப் பிறகு கருமுட்டைகளின் தரம் மற்றும் எண்ணிக்கை ஆகிய இரண்டுமே மிக வேகமாகச் சரிவடைகின்றன.
'தரம்' என்பது இங்கு குழந்தைகளிடம் குறைபாடுகள் அல்லது அசாதாரண நிலைகள் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறிக்கிறது.
8. கர்ப்பம் தரிக்க சரியான வயது எது?
தம்பதியினர் 30 வயது அல்லது அதற்குக் குறைவான வயதுக்குள் கர்ப்பம் தரிக்கத் திட்டமிடுவது மிகவும் நல்லது. 32 வயதுக்குப் பிறகு, கருவுறும் திறன் குறையத் தொடங்குகிறது.
பெண்களைப் பொறுத்தவரை உயிரியல் ரீதியான வயது மிகவும் முக்கியமானது; ஏனெனில் வயது ஏற ஏற, கருமுட்டைகளின் எண்ணிக்கை குறையத் தொடங்குகிறது. ஆண்களுக்கு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் புதிய விந்தணுக்கள் உற்பத்தியாகின்றன, ஆனால் பெண்களுக்கு இந்தச் சூழல் மாறுபட்டிருப்பதால், கருவுறுதல் தொடர்பான சவால்கள் அதிகம் காணப்படுகின்றன.
9. இப்போதெல்லாம் பலர் ஐவிஎஃப் சிகிச்சையை நாடுகிறார்கள்; அதற்கான காரணம் என்ன?
மக்கள் தாமதமாக திருமணம் செய்துகொண்டு, அதற்கேற்ப கர்ப்பம் தரிக்கத் திட்டமிடும் போது, அந்தச் செயல்முறையும் தாமதமாகிறது. 35 வயதுக்கு மேல் கர்ப்பம் தரிக்கத் திட்டமிடும்போது, இயற்கையான முறையில் கருத்தரிக்க முயற்சிப்பதற்கு 2-3 ஆண்டுகள் வரை செலவிடப் போதுமான நேரம் நோயாளிக்கோ அல்லது மருத்துவருக்கோ இருப்பதில்லை.
சில சமயங்களில் பிசிஓஎஸ் மற்றும் பிற ஹார்மோன் தொடர்பான பிரச்னைகளும் ஏற்படுகின்றன. இது தவிர, ஆண்களிடம் விந்தணுக்களின் சராசரி எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அதேவேளையில், ஐவிஎஃப் சிகிச்சைக்கான வசதிகளும் தற்போது பரவலாகக் கிடைக்கின்றன.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு கூட இவ்வளவு அதிகமான ஐவிஎஃப் மையங்கள் இல்லை; ஆனால் இப்போது அவை எல்லா இடங்களிலும் கிடைப்பதால், மக்கள் (இயற்கை முறையில் கருத்தரிக்க முயற்சிப்பதில் உள்ள) இடர்பாடுகளைத் தவிர்க்க விரும்புகிறார்கள்.
10. ஐவிஎஃப் செய்யும் முன் தம்பதிக்கு வேறு என்னென்ன சிகிச்சைகள் செய்யப்படும்?
முதலாவதாக, அவர்களின் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன; இதன் மூலமே 50 முதல் 60 சதவிகிதத்தினர் கருத்தரிக்கின்றனர். உதாரணமாக, பல ஆண்கள் பல்வேறு வகையான போதைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களாக இருந்தால், அவற்றை நிறுத்துவது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
இரவு நேரப் பணி செய்பவர்களுக்கு, பணி நேரத்தை மாற்றுவதும், விந்து வெளியேறும் முறையைச் சரிசெய்வதும் நல்ல பலனைத் தரும். ஏதேனும் பிரச்னையால் பெண்களின் உடலில் கருமுட்டைகள் உருவாகவில்லை என்றால், அதைத் தூண்டுவதற்கான மருந்துகளை நாங்கள் வழங்குகிறோம்; இதன் மூலம் பல நேரங்களில் கருத்தரிப்பு நிகழ்கிறது.
இவை அனைத்தையும் செய்தும் கருத்தரிப்பு ஏற்படவில்லை என்றால், அடுத்த கட்டமாக ஐயூஐ (IUI) சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதில் 3 முதல் 4 சுழற்சிகள் வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது; இதற்காக மருந்துகள் வழங்கப்படுகின்றன.
இதன் மூலமும் பல தம்பதியினர் கருத்தரிக்கின்றனர். ஆனால் சிலருக்கு ஐயூஐ மூலமும் பலன் கிடைப்பதில்லை என்பதால், இறுதிக்கட்டமாக ஐவிஎஃப் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
ஐயூஐ சிகிச்சை 20 சதவிகித பேர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர்; அதே சமயம் ஐவிஎஃப் சிகிச்சையில் 80 சதவிகிதம் வரையிலான தம்பதியர் சிறந்த பலனைப் பெறுகின்றனர்.
11. ஐவிஎஃப் என்றால் என்ன, அதன் முழு செயல்முறையும் எவ்வாறு நடைபெறுகிறது?
ஐவிஎஃப் என்பது 'இன் விட்ரோ ஃபெர்டிலைசேஷன்' (in vitro fertilization) என்பதன் சுருக்கமாகும். அதாவது, பொதுவாகப் பெண்ணின் உடலுக்குள் இயற்கையாக நிகழும் கருத்தரித்தல் நிகழ்வை, உடலுக்கு வெளியே ஆய்வகச் சூழலில் மேற்கொள்வதே இம்முறையாகும். இதில் விந்தணு மற்றும் கருமுட்டை ஆகியவற்றை இணைப்பதன் மூலம் ஒரு கரு உருவாக்கப்படுகிறது; இதுவே 'சோதனைக் குழாய் குழந்தை' என்றும் அழைக்கப்படுகிறது.
ஐவிஎஃப் முறையில், ஊசி மூலம் பெண்ணின் உடலிலிருந்து முடிந்தவரை அதிக எண்ணிக்கையிலான கருமுட்டைகள் சேகரிக்கப்படுகின்றன; அதேவேளையில் விந்தணுக்களும் பெறப்படுகின்றன. தம்பதியினரிடம் பெரிய அளவிலான மருத்துவச் சிக்கல்கள் ஏதுமில்லாத பட்சத்தில், 80 முதல் 90 சதவிகித நிகழ்வுகளில் ஐவிஎஃப் முறை நல்ல பலனைத் தருகிறது.
12. எந்த வயதுக்கு பிறகு ஐவிஎஃப் சிகிச்சை செய்யப்படுவதில்லை?
சட்டப்படி, பெண்களுக்கு 50 வயது வரையிலும், ஆண்களுக்கு 55 வயது வரையிலும் மட்டுமே ஐவிஎஃப் சிகிச்சை செய்யப்படலாம். ஆனால் 40 வயதுக்குப் பிறகு, பெண்களின் உடலில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே கருமுட்டைகள் எஞ்சியிருக்கும்; எனவே அவர்கள் கொடையாளரிடமிருந்து பெறப்படும் கருமுட்டைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
ஒருவேளை அவர்கள் தங்கள் சொந்தக் கருமுட்டைகளைக் கொண்டு ஐவிஎஃப் செய்ய விரும்பினால், அவற்றில் 50 சதவிகிதக் கருமுட்டைகள் அசாதாரணத் தன்மை கொண்டவையாக இருக்கக்கூடும். இதைக் கண்டறிய 'PGTA' என்ற சிறப்புப் பரிசோதனை உள்ளது.
38 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இத்தகைய அசாதாரணத் தன்மைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால், பொதுவாக அவர்களுக்கு இந்தப் பரிசோதனையை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
13. ஐவிஎஃப் சிகிச்சையில் இரட்டை குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் ஏன்?
ஐவிஎஃப் சிகிச்சையின்போது, கருக்கள் பொதுவாக 3-வது அல்லது 5-வது நாளில் உருவாக்கப்படுகின்றன. 5-வது நாளில் உள்ள கருக்கள் 'பிளாஸ்டோசிஸ்ட்' (blastocyst) என்று அழைக்கப்படுகின்றன; இவற்றின் கருப்பையில் ஒட்டிக்கொண்டு வளரும் திறன் (implantation potential) மிகச் சிறப்பாக இருக்கும். எனவே, இவை இரண்டும் கருப்பையில் இணைந்து இரட்டைக் குழந்தைகளாக உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
தொடர்ந்து 4 அல்லது 5 முறை ஐவிஎஃப் சிகிச்சை தோல்வியடைந்த நிலையில் ஒரு பெண் எங்களிடம் வரும்போது, அவருக்கு இரண்டு கருக்கள் மட்டுமே கருப்பையில் செலுத்தப்படுகின்றன.
14. ஐவிஎஃப் சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும்?
முதலாவதாக, பரிசோதனைகளுக்கே 5 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். மருந்துகள் மற்றும் ஊசிகளுக்கு 85 முதல் 90 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. அதன்பிறகு, பெண்ணுக்கு 10 நாட்களுக்கு ஊசிகள் போடப்படுகின்றன; 11-ம் நாளில் கருமுட்டைகள் சேகரிக்கும் (egg retrieval) செயல்முறை நடைபெறும்போது அதற்கும் சுமார் 95 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. ஆக மொத்தம், இதற்கான செலவு 2 லட்சம் ரூபாய் வரை ஆகிறது.
15. ஆண்கள் அல்லது பெண்களில் யாருக்கு பிரச்னைகள் அதிகம்?
சில ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்குத்தான் அதிகப் பிரச்னைகள் இருந்தன; ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. இன்று ஆண்களும் பெண்களும் சமமான அளவிலான பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள்.
இதை ஒரு உதாரணத்துடன் விளக்குகிறேன்: இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு தம்பதியினர் என்னைச் சந்திக்க வந்தனர். அந்தப் பெண் தனக்கான அனைத்துப் பரிசோதனைகளையும் செய்துகொண்டிருந்தார், ஆனால் அவரது கணவர் எந்தப் பரிசோதனையையும் செய்துகொள்ளவில்லை.
அவரது கணவருக்குப் பரிசோதனை செய்தபோது, அவருக்கு நீரிழிவு நோய் மற்றும் 'ஹைப்பர்ட்ரைகிளிசிரிடீமியா' (ரத்தத்தில் ட்ரைகிளிசரைடு கொழுப்பு அளவு அதிகமாக இருத்தல்) இருப்பது கண்டறியப்பட்டது. அவர் உடல் பருமன் பிரச்னையாலும் அவதிப்பட்டு வந்தார். உடல் பருமன் விந்தணுக்களின் தரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால்தான் ஆண்களுக்கும் பரிசோதனை செய்வது மிகவும் முக்கியம்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு