சௌதி, பாகிஸ்தான், துருக்கி பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து அரபு ஊடகங்களில் மாறுபட்ட எதிர்வினை ஏன்?

    • எழுதியவர், பிபிசி மானிட்டரிங்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் ஹோர்மூஸ் நீரிணையைச் சுற்றி அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில் பாகிஸ்தான், சௌதி அரேபியா மற்றும் துருக்கி இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது பற்றி அரபு ஊடகங்கள் மாறுபட்ட விதங்களில் செய்தி வெளியிட்டுள்ளன.

சௌதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான், அதிபர் ரெசெப் தயிப் எர்துவான் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் ஆகியோர் ஆகஸ்ட் 7 அன்று உச்சிமாநாடு ஒன்றை நடத்தி "மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில்" கையெழுத்திட்டனர்.

ஒப்பந்தம் கையெழுத்தானது பற்றி சௌதி மற்றும் கத்தாரின் முன்னணி தொலைக்காட்சி ஊடகங்களான அல் அரேபியா மற்றும் அல் ஜசீரா விரிவாக நேரலையில் செய்தி வழங்கிய நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஊடகங்கள் இதற்கு குறைவான முக்கியத்துவமே அளித்துள்ளன.

பாப் அல்-மண்டேப் நீரிணை, செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா வழியாகச் செல்லும் கடல் வர்த்தக வழித்தடங்களைப் பாதுகாக்கும் நோக்கில் சௌதி அரேபியா தலைமையிலான பன்னாட்டு கடல்சார் பாதுகாப்புக் கூட்டணியை அமைப்பதை பாகிஸ்தான் ஆதரித்துப் பேசியதற்கு ஒரு வாரத்திற்குப் பின்னர் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் சொல்லும் செய்தி என்ன?

அல் ஜசீராவிடம் பேசிய சௌதி அரசியல் ஆய்வாளர் காலித் பாதெர்ஃபி, இந்த ஒப்பந்தம் பாதுகாப்பு நோக்கத்தைக் கொண்டது என்றும், குறிப்பாக இரான் அல்லது இஸ்ரேலிலிருந்து ஏதேனும் தாக்குதல் ஏற்பட்டால் அதற்கு பதிலளிக்கும் வகையில் செயல்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒன்றைத் தாக்கும் திட்டம் இரானுக்கு இருந்தால், அதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.

இந்த ஒப்பந்தம் மத்திய கிழக்கில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளதாக துருக்கிய ஆய்வாளர் மொஸ்தஃபா ஜினார் தெரிவித்தார்.

ராணுவ ஆய்வாளர் பைசல் அல்-ஹமாத் அல் அரேபியாவிடம் பேசுகையில், இந்த ஒப்பந்தம் "மத்திய கிழக்கின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த முனையும், முற்றிலும் பாதுகாப்பு நோக்கமுடைய கூட்டணி என்பதை வெளிப்படுத்தும் செய்தியாகும்." என்று தெரிவித்தார்.

மேலும், இந்தக் கூட்டணி பிராந்தியத்தில் நடந்த எந்தவொரு குறிப்பிட்ட சம்பவத்திற்கும் பதிலடியாக உருவாக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

"மூன்று நாடுகளும் பரஸ்பரம் தங்களது வலிமைகளை ஒருங்கிணைக்க உதவும் உத்தி சார்ந்த ஒப்பந்தம் இதுவாகும்," என்று அரசியல் ஆய்வாளர் முஸ்தபா ஷலாஷ் கூறுகிறார்.

அல் அரேபியாவின் இணை ஊடகமான அல் ஹதத் இது பற்றி வெளியிட்ட செய்தியில், "மெக்கா ஒப்பந்தமானது அணு ஆயுதங்களைப் பெறும் முயற்சிகளுடனோ அல்லது மத அடிப்படையிலான கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளுடனோ தொடர்புடையதல்ல," என்று சௌதி வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக மேற்கோள் காட்டியுள்ளது.

'இஸ்லாமிய நேட்டோ'

கத்தாரைச் சேர்ந்த அல் அரபி தொலைக்காட்சியின் பாகிஸ்தான் நிருபர், பல முஸ்லிம் நாடுகளை ஒரே ராணுவக் குடையின் கீழ் ஒன்றிணைக்க வேண்டும் என்ற விருப்பம் பாகிஸ்தானுக்கு நீண்டகாலமாக இருந்ததாகக் கூறினார்.

அரசியல் ஆய்வாளர் முனிஃப் அம்மாஷ், ஆகஸ்ட் 6 அன்று சௌதி அல் அரேபியா வானொலியிடம் பேசுகையில், இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் "தற்போதைய பிராந்திய ஒழுங்கமைப்புக்குள் ஒரு புதிய பிராந்திய கட்டமைப்பிற்கான அடித்தளமாக மாறக்கூடும்" என்று தெரிவித்தார்.

"பிராந்தியத்தில் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களை எதிர்கொள்வதற்காக செளதி அரேபியா புதிய விதிமுறைகளை வகுத்து வருகிறது," என்றும் அவர் கூறினார்.

எகிப்தைச் சேர்ந்த சௌதி ஆதரவு பத்திரிகையாளர் கமால் சுல்தான், எக்ஸ் தளத்தில், இது "ஒரு வரலாற்றுச் சம்பவம்... 'ஒரு இஸ்லாமிய நேட்டோ' பிறப்பதை உலகம் காணக்கூடும்" என்று தெரிவித்தார்.

இராக்கைச் சேர்ந்த ஆய்வாளர் லிகா மக்கி, ஆகஸ்ட் 6 அன்று அல் ஜசீராவின் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், இந்த உச்சிமாநாடு புதிய கூட்டணியின் தொடக்கமாக அமையும் என்றும், அதில் சிரியா, கத்தார் மற்றும் ஒருவேளை குவைத் ஆகிய நாடுகளும் இடம்பெறலாம் என்றும் கூறினார்.

லண்டனைச் சேர்ந்த அரபு தேசியவாத நாளிதழான அல்-குத்ஸ் அல்-அரபி, ஆகஸ்ட் 7 அன்று வெளியிட்ட தலையங்கத்தில், இரான் ஆதரவு பெற்ற ஏமன் ஹூதி இயக்கத்தின் பதற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் "சௌதியின் கூட்டணிகள் வெற்றி பெறுமா?" என்று கேள்வி எழுப்பியது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஊடகங்களின் அமைதி

ஸ்கை நியூஸ் அரேபியா மற்றும் அல் மஷ்ஹத் டிவி உள்ளிட்ட முன்னணி எமிரேட்ஸ் ஊடகங்கள் ஆகஸ்ட் 7 அன்று இந்த ஒப்பந்தம் குறித்து மிகவும் குறைந்த முக்கியத்துவத்துடனே செய்தி வெளியிட்டன.

ஸ்கை நியூஸ் அரேபியா, ஒப்பந்தம் கையெழுத்தானதை நேரலையில் ஒளிபரப்பவில்லை. சுமார் இரண்டு மணி நேரம் கழித்து அதன் செய்தி அறிக்கையில் மட்டுமே இதை வெளியிட்டது.

அல் மஷ்ஹத், ஒப்பந்தம் கையெழுத்தானதை நேரலையில் ஒளிபரப்பாததுடன், அதனைத் தொடர்ந்து வந்த செய்தி அறிக்கையிலும் இந்தச் செய்தியைப் புறக்கணித்தது. அதன் இணையதளத்தில் சுருக்கமான செய்தி ஒன்றை மட்டுமே வெளியிட்டது.

அல்-ஐன் மற்றும் எரம் நியூஸ் போன்ற முக்கிய எமிரேட்ஸ் இணையதளங்களும் இந்த ஒப்பந்தம் குறித்து எந்தச் செய்தியையும் வெளியிடவில்லை.

எகிப்தின் 'ராஜ்ஜிய தோல்வி'

எகிப்தின் அரசுத் தொலைக்காட்சியான அல்-காஹெரா நியூஸ், ஆகஸ்ட் 7 பிற்பகல் செய்தி அறிக்கைகளில் இந்தச் செய்தியை முதன்மையாக வெளியிட்டது.

அதேவேளையில், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்தக் கூட்டணியில் எகிப்து இடம்பெறாதது பற்றி கேள்வி எழுப்பியிருந்தனர்.

துருக்கியைச் சேர்ந்த பாதுகாப்பு நிபுணர் மொஅமென் அஷ்ரஃப் இதை "தெளிவான ராஜ்ஜிய தோல்வி" என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையில், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் முகம்மது ஷுஹூத் தனது ஃபேஸ்புக்கில் பக்கத்தில், "ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்வில் எகிப்து பங்கேற்காதது, எதிர்காலத்தில் அதற்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டன என்பதைக் குறிக்காது." என்று பதிவிட்டார்.

எழுத்தாளர் யாஹியா அல்-கெபாலி, இந்த ஒப்பந்தத்தை "ஒரு வரலாற்றுச் சம்பவம் மற்றும் மத்திய கிழக்கின் அதிகாரச் சமநிலையை மாற்றக்கூடிய புதிய கூட்டணி... இது பிராந்தியத்திற்கே அல்ல, உலகம் முழுவதற்குமான செய்தியையும் கொண்டுள்ளது." என்று பாராட்டினார்.

மறுபுறம், பிரிட்டனைச் சேர்ந்த பத்திரிகையாளர் அப்தெல்மோனெய்ம் மக்மூத், இந்தக் கூட்டணி எந்த அளவிற்கு நடைமுறைச் சாத்தியமுடையது மற்றும் எத்தனைக் காலம் நிலைத்திருக்கக் கூடியது என்பதைக் கேள்விக்கு உட்படுத்தினார்.

விமர்சகர் அப்டோ ஃபயேத், இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தைச் சிறுமைப்படுத்தி, இரானை அச்சுறுத்துவதற்காக "பாதுகாப்பு பொறுப்பாளரைத் தேடும் சௌதியின் முயற்சி" என்று குறிப்பிட்டார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு