லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் தீவிரம் - 7 பேர் கொல்லப்பட்டதாக அறிவிப்பு

லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் தீவிரம் - 7 பேர் கொல்லப்பட்டதாக அறிவிப்பு
பிரசுரிக்கப்பட்டது

லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது பல ராக்கெட்டுகள் வீசப்பட்டதை அடுத்து, இஸ்ரேல் லெபனான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. நவம்பர் மாதம் அமலுக்கு வந்த போர் நிறுத்தத்துக்குப் பிறகு இதுவே அங்கு நடந்த மிகப்பெரிய தாக்குதலாகும்.

தெற்கு லெபனானில் இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொலாவுக்குச் சொந்தமான டஜன் கணக்கான ராக்கெட் ஏவுகணைகள் மற்றும் ஒரு கட்டளை மையத்தைத் தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

வான்வழித் தாக்குதல்களில் ஒரு குழந்தை உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும் 40 பேர் காயமடைந்ததாகவும் லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹெஸ்பொல்லா உட்பட பல ஆயுதக் குழுக்கள் லெபனானில் செயல்பட்டு வரும் நிலையில், இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

காஸாவில் ஹமாஸுக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு சனிக்கிழமை லெபனானில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடந்துள்ளது.

இஸ்ரேல் ராணுவம் வடக்கு நகரமான மேத்துலாவில் மூன்று ராக்கெட்டுகளை இடைமறித்ததாகவும், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என கூறியுள்ளது.

ஆனால், ஹெஸ்பொலா இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், போர் நிறுத்தத்தில் உறுதியுடன் இருப்பதாகவும் கூறி உள்ளது.

இஸ்ரேல், ஹெஸ்பொலா இடையே ஓர் ஆண்டுக்கும் மேலாக மோதல் நீடித்து வந்தது. அமெரிக்கா, பிரான்ஸ் முன்னெடுப்பில் போர் நிறுத்தம் ஏற்பட்ட நிலையில், இந்தத் தாக்குதல் மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

மறுபுறம், காஸாவிலும் இஸ்ரேல் தனது தாக்குதலை இந்த வார தொடக்கத்தில் தொடங்கியது.

கான் யூனிஸில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் உயர்மட்ட அரசியல் தலைவர் சலா அல்-பர்தவீல் கொல்லப்பட்டதாக ஹமாஸ் இன்று தெரிவித்துள்ளது. இதில் அவரது மனைவியும் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கூறுகிறது.

66 வயதான பர்தவீல் தனது மனையுடன் பிரார்த்தனையில் இருந்த போது இந்தத் தாக்குதல் நடந்ததாக ஹமாஸ் கூறுகிறது. எனினும், இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான அமெரிக்காவின் புதிய திட்டத்தை ஹமாஸ் நிராகரித்ததாக இஸ்ரேல் குற்றம்சாட்டுகிறது. ஆனால், ஹமாஸோ கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் உருவான ஒப்பந்ததை இஸ்ரேல் கைவிடுவதாக இஸ்ரேலை குற்றம்சாட்டுகிறது.

இது ஒருபுறமிருக்க, இஸ்ரேல் மற்றும் ஹூத்திகளுக்கு இடையேயான மோதல் தொடரும் சூழலில் யேமனில் இருந்தும் இஸ்ரேலை நோக்கி ஞாயிற்றுக்கிழமையான இன்று ராக்கெட் ஏவப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.

எனினும், அவை இடைமறிக்கப்பட்டதாக இஸ்ரேல் கூறியது. இதையடுத்து, டெல் அவிவில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு