You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கரூருக்கு ஏன் செல்லவில்லை? - விஜய் விளக்கம்
கரூருக்கு தான் ஏன் செல்லவில்லை என்பது குறித்து தவெக தலைவர் விஜய் பதிலளித்துள்ளார்.
சனிக்கிழமை கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அரசு சார்பில் வீடியோக்கள், படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், கூட்ட நெரிசல், மின் தடை குறித்து அரசுத்தரப்பில் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் சமூக ஊடங்களில் வெளியிட்ட வீடியோவில், "என் வாழ்க்கையில் இதுபோன்ற வலிமிகுந்த சூழலை நான் எதிர்கொண்டதில்லை. மனம் முழுக்க வலியாக உள்ளது. வலி மட்டும்தான் உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் என்னை மக்கள் பார்க்க வருகின்றனர். என் மீதான பாசத்தாலேயே அவர்கள் வருகின்றனர். அந்த பாசத்திற்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்." என பேசியுள்ளார்.
"நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. நானும் மனிதன் தானே, அவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கும்போது என்னால் எப்படி அந்த ஊரை விட்டு வர முடியும். நான் திரும்பி போக வேண்டியிருந்தால் வேறு சில பதற்றங்கள், சூழல்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே நான் மீண்டும் அங்கு செல்லவில்லை." என விஜய் கூறியுள்ளார்.
இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள், படங்களை காட்டி அமுதா ஐஏஎஸ் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
என்ன நடந்தது?
கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய், கடந்த சனிக்கிழயமைன்று (செப்டெம்பர் 27) பரப்புரை மேற்கொண்டார். அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் சிக்கிக் கொண்டனர். அதில், 41 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் அறுபதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் என். ஆனந்த் உள்பட தவெக நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மதியழகன் நேற்றைய தினம் (29/09/2025) கைது செய்யப்பட்டுவிட்டார்.
ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையமும் விசாரணையை தொடங்கியுள்ளது. பரப்புரைக் கூட்டம் நடைபெற்ற இடம், கரூர் அரசு மருத்துவமனை, உயிரிழந்தவர்களின் வீடுகள் ஆகியவற்றுக்குச் சென்று அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தியுள்ளார்.
அதேநேரத்தில், சி.பி.ஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தவெக தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.
விஜய் பரப்புரை செய்ய தடை விதிக்குமாறு கோரியும் ஒரு தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.