'பிராமணர்கள் இந்திய மக்களின் இழப்பில் லாபம் ஈட்டுகிறார்கள்' - டிரம்பின் ஆலோசகர் கூறியது என்ன?

இந்தியா - அமெரிக்கா, டிரம்பின் 50% வரி, ரஷ்ய கச்சா எண்ணெய், பிராமணர்கள், பீட்டர் நவரோ

பட மூலாதாரம், EPA/Shutterstock

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவது குறித்து அமெரிக்க அதிபரின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ மீண்டும் பேசியுள்ளார்.

'பிராமணர்கள்' இந்திய மக்களின் இழப்பில் லாபம் ஈட்டுகிறார்கள் என்றும், இதை 'நிறுத்த வேண்டும்' என்றும் அந்த பேச்சில் நவரோ குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் நிர்வாகத்தில் வர்த்தகம் மற்றும் உற்பத்தி விவகாரங்களுக்கான மூத்த ஆலோசகரான நவரோ கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், "பிரதமர் மோதி ஒரு சிறந்த தலைவர். இந்தியத் தலைவர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் எவ்வாறு ஒத்துழைக்கிறார்கள் என்பது புரியவில்லை? அதேசமயம் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம்" என்று கூறினார்.

"எனவே நான் சொல்வதெல்லாம், இந்திய மக்களே, தயவுசெய்து இங்கே என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பிராமணர்கள் இந்திய மக்களின் இழப்பில் லாபம் ஈட்டுகிறார்கள். இதை நாம் நிறுத்த வேண்டும்" என்று நவரோ கூறினார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தகம் மற்றும் வரிக் கொள்கைகள் தொடர்பாக அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்ட பின்னர், கடந்த சில நாட்களாக நவரோ தொடர்ந்து இந்தியாவை குறிவைத்து வருகிறார்.

இந்தியா மீது டிரம்ப் 25 சதவீத பரஸ்பர வரியை விதித்தார். பின்னர், ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதன் மூலம் யுக்ரேன் போரில் புதினுக்கு உதவி புரிவதாகக் கூறி கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டது.

இந்தியா அந்த வரிகளை 'நியாயமற்றது மற்றும் நடைமுறைக்கு மாறானது' என்று கூறி, 'மலிவான எண்ணெய் எங்கே கிடைக்கிறதோ அங்கே தொடர்ந்து வாங்குவோம்' என்று திட்டவட்டமாக கூறியது.

சீனா பற்றிய கேள்விக்கு நவரோ பதில்

இந்தியா - அமெரிக்கா, டிரம்பின் 50% வரி, ரஷ்ய கச்சா எண்ணெய், பிராமணர்கள், பீட்டர் நவரோ

பட மூலாதாரம், EPA-EFE/REX/Shutterstock

சீனாவும் ரஷ்ய எண்ணெயை வாங்கும் போது, இந்தியா மீது மட்டும் கூடுதல் வரிகளை விதிப்பதால் புதினை 'கட்டுப்படுத்த' முடியுமா என்று நவரோவிடம் கேட்கப்பட்டது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இதற்கு பதிலளிக்கும் விதமாக, நவரோ, "சரி, இந்தியா மீது தற்போது 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சீனா மீதும் 50 சதவீதத்திற்கும் சற்று அதிகமான வரி உள்ளது. நமக்கு தீங்கு நேராமல் வரிகளை எவ்வளவு அதிகரிக்க விரும்புகிறோம் என்பதுதான் கேள்வி?" என்றார்.

பிப்ரவரி 2022 இல் புதின் யுக்ரேன் மீது படையெடுப்பதற்கு முன்பு, இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்கவில்லை என்று நவரோ கூறினார்.

"பிறகு என்ன நடந்தது? சரி, ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள் இந்தியாவுக்குள் நுழைந்து பெரிய எண்ணெய் நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்தன. புதின் மோதிக்கு கச்சா எண்ணெய் விலையில் தள்ளுபடி அளிக்கிறார். அவர்கள் அதை சுத்திகரித்து ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிற்கு அதிக விலைக்கு விற்று நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள்," என்று நவரோ கூறினார்.

"அப்படியானால் இதில் என்ன தவறு? உண்மையில், இது 'ரஷ்ய போர் இயந்திரத்தை' வலுப்படுத்துகிறது. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை ஆதரிக்கும் அதே வேளையில், இந்தியா தனது எரிசக்தி கொள்முதல் தேசிய நலன் சார்ந்தது என்று கூறி வருகிறது."

"யுக்ரேன் போருக்குப் பிறகு, மேற்கத்திய நாடுகள் ரஷ்ய கச்சா எண்ணெய் மீது தடைகளை விதித்தன. அப்போதிருந்து, ரஷ்யா இந்தியாவின் சிறந்த எரிசக்தி சப்ளையராக உருவெடுத்துள்ளது."

இந்தியா - அமெரிக்கா, டிரம்பின் 50% வரி, ரஷ்ய கச்சா எண்ணெய், பிராமணர்கள், பீட்டர் நவரோ

பட மூலாதாரம், Reuters

"இது யுக்ரேன் மக்களை காயப்படுத்துகிறது. வரி செலுத்துவோராக நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், யுக்ரேன் தன்னைத் தற்காத்துக் கொள்ள அதிக பணம் அனுப்ப வேண்டும். இந்தியா வரிகளின் 'மகாராஜா' என்பதாலேயே கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டது," என்று நவரோ குற்றம் சாட்டினார்.

"அவர்கள் (இந்தியா) உலகிலேயே மிக அதிக வரிகளை விதிக்கிறார்கள். அவர்கள் எங்களுக்கு நிறைய பொருட்களை ஏற்றுமதி செய்கிறார்கள். நாங்கள் அந்த பொருட்களை தயாரித்து விற்க முடியவில்லை. அதனால் யார் பாதிக்கப்படுவார்கள்? அமெரிக்க தொழிலாளர்கள், அமெரிக்க வரி செலுத்துவோர் மற்றும் ரஷ்ய டிரோன் தாக்குதல்களில் இறக்கும் யுக்ரேன் மக்கள்." என்று அவர் கூறினார்.

மோதியின் போர் என்று ஏற்கனவே விமர்சனம்

பீட்டர் நவரோ முன்பு யுக்ரேன் போர் தொடர்பாக இந்தியாவையும் பிரதமர் மோதியையும் விமர்சித்துள்ளார்.

முன்னதாக உக்ரைன் மோதலை "மோதியின் போர்" என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் புதன்கிழமை, அமெரிக்காவின் புதிய வரி விகிதங்கள் அமலுக்கு வந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பீட்டர் நவரோ இந்தியா மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தார்.

ப்ளூம்பெர்க் டிவியில் ஒரு உரையாடலில், ரஷ்யா-யுக்ரேன் போர் உண்மையில் "மோதியின் போர்" என்று நவரோ கூறினார்.

"இந்தியாவின் செயல்களால் அமெரிக்காவில் உள்ள அனைவரும் இழப்பை சந்திக்கிறார்கள். நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் இழப்பை சந்திக்கின்றனர். இந்தியா விதிக்கும் அதிக வரிகள் நமது வேலைகள், தொழிற்சாலைகள், வருமானம் மற்றும் சிறந்த ஊதியத்திற்கான வாய்ப்புகளைக் குறைக்கின்றன. பின்னர் 'மோதியின் போருக்கு' நாம் பணம் செலுத்த வேண்டியிருப்பதால் வரி செலுத்துவோரும் இழப்பை எதிர்கொள்கிறார்கள்" என்று நவரோ கூறினார்.

இந்தியா - அமெரிக்கா, டிரம்பின் 50% வரி, ரஷ்ய கச்சா எண்ணெய், பிராமணர்கள், பீட்டர் நவரோ
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

'புதினின் போர்' என்று அவர் சொல்கிறாரா என்று ப்ளூம்பெர்க் அவரிடம் கேட்டபோது, ​​"நான் 'மோதியின் போர்' என்று சொன்னேன், ஏனென்றால் அமைதிக்கான பாதை ஒரு வகையில் பார்த்தால் புதுடெல்லி வழியாகவே செல்கிறது" என்று நவரோ கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், "இந்தியர்கள் இந்த விஷயத்தில் மிகவும் பிடிவாதமானவர்கள் என்பது என்னைத் தொந்தரவு செய்கிறது. 'நாங்கள் அதிக வரி விதிக்கவில்லை, இது எங்கள் இறையாண்மை. நாம் எங்கிருந்து வேண்டுமானாலும், யாரிடமிருந்து வேண்டுமானாலும் எண்ணெய் வாங்கலாம்.' என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்தியா, நீங்கள் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம், அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு