காஸாவில் மனிதாபிமான மண்டலத்தில் இஸ்ரேல் தாக்குதல் - 40 பேர் பலி

காணொளிக் குறிப்பு, காஸாவில் மனிதாபிமான மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
காஸாவில் மனிதாபிமான மண்டலத்தில் இஸ்ரேல் தாக்குதல் - 40 பேர் பலி
பிரசுரிக்கப்பட்டது

காஸாவில் மனிதாபிமான மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என ஹமாஸ் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கான் யூனிஸில் உள்ள ஹமாஸ் குழுவினரின் கட்டுப்பாட்டு மையத்தை இஸ்ரேல் ராணுவம் தாக்கியதாகவும் ஆனால் இதில் பொதுமக்களுக்கு தீவிரமான பாதிப்புகள் ஏதும் ஏற்படாத வண்ணம் தாக்குதலுக்கு முன்னர் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

கான் யூனிஸ் நகரின் மேற்கு பகுதியில் உள்ள அல் மாவாசியில் உள்ள மனிதாபிமான மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் இடம் பெயர்ந்த மக்கள் வசித்த கூடாரங்கள் தாக்கப்பட்டதாக உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 60 மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் சிலர் இடிபாடிகளில் சிக்கியுள்ளனர் என ஹமாஸின் பொதுபாதுகாப்பு ஆணையத்தின் செயல்பாட்டு இயக்குநர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

நள்ளிரவுக்கு பிறகு அல் மாவாசி பகுதியில் பெருத்த வெடிப்புகள் நிகழ்ந்ததாகவும், புகை விண்ணை முட்டும் அளவிற்கு எழுந்ததாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

தொண்டு நிறுவனம் ஒன்றின் தன்னார்வலரான காலீத் மஹமூத், தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிக்கு அருகில் வசிக்கிறார். தாக்குதலுக்கு பிறகு அவரும் பிற தன்னார்வலர்களும் உதவு செய்ய ஓடியதாகவும் ஆனால் ஏற்பட்ட பாதிப்பை கண்டு திகைத்து நின்றதாகவும் தெரிவித்தார்

தாக்குதலால் ஏழு மீட்டர் ஆழத்திற்கு மூன்று குழிகள் உருவானதாகவும் 20 கூடாரங்கள் மண்ணில் புதைந்ததாகவும் மஹமூத் தெரிவித்தார்

பொதுமக்களின் மீது இஸ்ரேல் ஏன் தாக்குதல் நடத்தியது என தெரியவில்லை என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.

வீடு முழுக்க பொதுமக்களும் குழந்தைகளும் இருந்தனர். எந்தவித அறிவிப்புமின்றி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இங்கு எதற்கு தாக்குதல் நடத்தினார்கள் என இதுவரை தெரியவில்லை. ஆனால் யாரும் உயிர் பிழைக்கவில்லை. என சம்பவத்தை நேரில் பார்த்தவர் ஒருவர் தெரிவித்தார்.

வான் தாக்குதலால் புதைந்த பாலத்தீனர்களை காப்பாற்ற மக்கள் கைகளால் மண்ணை தோண்டும் வீடியோ ஒன்றை காண முடிகிறது ஆனால் இதனை சூயாதீனமாக பரிசோதிக்க முடியவில்லை.

இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், கான் யூனிஸில் வரையறுக்கப்பட்ட மனிதாபிமான பகுதியில் அமைந்திருந்த ஹமாஸ் பயங்கரவாதிகளின் முக்கிய கட்டுப்பாட்டு மையத்தை இஸ்ரேல் ராணுவம் தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

பாதிப்புகளை குறைக்கும் கட்டுப்பாட்டு ஆயுதங்கள், வான் கண்காணிப்பு மற்றும் பிற நடவடிக்கைகள் என இந்த தாக்குதலுக்கு முன்னதாக பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

காஸாவில் உள்ள பயங்கரவாத அமைப்பு, இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் மீது தாக்குதல் நடத்த பொதுமக்களையும், மனிதாபிமான உட்கட்டமைப்புகளையும் தொடர்ந்து தவறாக பயன்படுத்தி வருவதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்

தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் ஹமாஸ் குழுவினர் இருந்தனர் என்ற இஸ்ரேலின் கூற்றை ஹமாஸ் மறுத்துள்ளது.

மேலும் அது அப்பட்டமான பொய் என்றும் தெரிவித்துள்ளது.

தங்களுது குழுவினர்கள் பொதுமக்களோடு இயங்கவில்லை எனவும் பொதுமக்கள் வாழும் இடங்களை தாங்கள் பயன்படுத்துவதில்லை எனவும் பலமுறை மறுத்திருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலால் ஆயிரத்து 200 பேர் வரை கொல்லப்பட்டனர் மேலும் 251 பேர் பணயக்கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டனர். இதற்கு பதில் நடவடிக்கையாக இஸ்ரேல் ஹமாஸ் மீது போர் தொடுத்து வருகிறது

அக்டோபரில் இஸ்ரேல் தனது தாக்குதலை தொடங்கிய பிறகு ஆயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் கான் யூனிஸ் நகருக்கு இடம் பெயர்ந்தனர்.

அப்போதிலிருந்து இதுவரை காஸாவில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என ஹமாஸால் இயக்கப்படும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)