காணொளி: டிரம்ப் - புதின் சந்திப்புக்கு பிறகு யுக்ரேன் பற்றி இருவரும் கூறியது என்ன?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

யுக்ரேன் போர் விவகாரத்தில் உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையிலான அலாஸ்கா சந்திப்பு முடிவு ஏதும் எட்டப்படாமலேயே நிறைவுற்றிருக்கிறது. யுக்ரேன் போர் தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக டிரம்ப் கூறினார். இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தான் ஆர்வமாக இருப்பதாக புதின் கூறினார். இந்த சந்திப்பில் நடந்தது என்ன?

அமெரிக்காவில் யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியைப் போல அல்லாமல், ரஷ்ய அதிபர் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு காத்திருந்தது. அலாஸ்காவில் தனது சிறப்பு விமானத்தில் இருந்து இறங்கி சிவப்பு கம்பளத்தில் புதின் நடந்து வந்த போது, டிரம்ப் கைத்தட்டி வரவேற்றார். பின்னர் இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர்.

புதின் தனக்காக காத்திருந்த காரை தவிர்த்துவிட்டு, டிரம்புடன் இணைந்து அவரது காரிலேயே சந்திப்பு நடக்கவிருந்த இடத்திற்குச் சென்றார். இருவரது முகத்திலுமே உற்சாகம் தென்பட்டது.

அலாஸ்காவில் டிரம்ப் - புதின் ஆகிய இருவரும் தனியே சந்திப்பார்கள் என்றே முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசிக் கட்ட மாற்றமாக, அமெரிக்கா - ரஷ்யா இருதரப்பில் இருந்தும் தலா 3 பேர் இந்த சந்திப்பில் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

ரஷ்ய தரப்பில் அதிபர் புதின், வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், வெளியறவு கொள்கை வகுப்பு உதவியாளர் யூரி உஷாகோவ் ஆகிய மூவர் பங்கேற்றனர். அமெரிக்கா தரப்பில் அதிபர் டிரம்ப், வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ, சிறப்பு பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டிரம்ப் - புதின் தவிர மற்ற நால்வருமே கடந்த பிப்ரவரியில் சௌதி அரேபியாவில் நடைபெற்ற யுக்ரேன் அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மூடிய கதவுகளுக்குப் பின்னால் டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தை சுமார் 3 மணி நேரம் நீடித்தது.

பேச்சுவார்த்தை நிறைவடைந்ததைத் தொடர்ந்து இருவரும் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர்.

டிரம்ப் புதினுக்கு சைகை செய்து, அவரை முதலில் பேசுமாறு கேட்டுக் கொண்டார். அமெரிக்காவும் ரஷ்யாவும் கடல்களால் பிரிக்கப்பட்டிருந்தாலும், நெருங்கிய அண்டை நாடுகள் என்று புதின் குறிப்பிட்டார்.

மேலும், வெறும் 4 கி.மீ. தொலைவில் அமெரிக்கர்கள் உள்ளனர். நாங்கள் நெருங்கிய அண்டை நாடுகள் என்று குறிப்பிட்ட புதின், டிரம்பிடம் கைகுலுக்கிய போது ஹலோ, அண்டை நாட்டவர் என்று குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்த பேசிய புதின், இரு நாடுகளுக்கும் இடையே சில ஆண்டுகளாக எந்த உச்சிமாநாடுகளும் இல்லை என்றும், இருதரப்பு உறவுகள் பனிப்போருக்குப் பிறகு மிக மோசமான நிலைக்குச் சென்றுவிட்டன என்றும் கூறினார்.

மோதல் போக்கில் இருந்து உரையாடலுக்கு மாற வேண்டிய நேரம் இது என்று கூறிய அவர், இந்த சந்திப்பை நீண்ட காலமாக தாமதமாகிவிட்ட ஒன்று எனக் குறிப்பிட்டார்.

யுக்ரேன் விவகாரம் குறித்து பேசிய புதின், இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தான் ஆர்வமாக இருப்பதாகவும், யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வர போர் மூண்டதற்கு அடிப்படையான முதன்மை காரணங்கள் நீக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். டிரம்பின் முயற்சிக்கு நன்றி தெரிவிப்பதாவும் புதின் கூறினார்.

புதினைத் தொடர்ந்து பேசிய டிரம்ப், தானும் புதினும் ஒரு பயனுள்ள சந்திப்பை நடத்தி சில முன்னேற்றங்களை அடைந்துள்ளதாக கூறினார். பல அம்சங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டன. சில விஷயங்கள் மீதமுள்ளன. அதில் ஒன்று முக்கியமானது என டிரம்ப் குறிப்பிட்டார். ஆனால், முக்கியமான அந்த ஒன்று எது என்பதை டிரம்ப் குறிப்பிடவில்லை.

"நாங்கள் மிகவும் பயனுள்ள ஒரு சந்திப்பை நடத்தியிருந்தோம். பல அம்சங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டன. சில விஷயங்கள் மீதமுள்ளன. சில முக்கியமல்ல. ஆனால் ஒன்று மிகவும் முக்கியமானது. அதை அடைய நல்ல வாய்ப்பு இருக்கிறது." என்றார் டிரம்ப்.

அதே நேரம் ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என கூறிய டிரம்ப் அதை எட்ட நல்ல வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

வாரத்திற்கு ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படுவதை இருவரும் தடுப்போம் என்று கூறிய டிரம்ப், தான் விரும்புவதைப் போலவே அதிபர் புதினும் அதை விரும்புவதாகத் தெரிவித்தார்.

தனது பேச்சை நிறைவு செய்யும் முன், புதினுக்கு நன்றி கூறி நாம் அநேகமாக மீண்டும் விரைவில் சந்திப்போம் என டிரம்ப் கூற அடுத்த சந்திப்பு மாஸ்கோவில் என சிரித்துக் கொண்டே ஆங்கிலத்தில் புதின் தெரிவித்தார். உடனே அது நடக்க வாய்ப்பு இருக்கிறது என டிரம்ப் கூறினார்.

அத்துடன் இருவரும் செய்தியாளர்களின் கேள்விகளை தவிர்த்துவிட்டு புறப்பட்டனர். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள வெள்ளை மாளிகை, இது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும், எப்போதும் அமைதி என்பதே குறிக்கோள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு