தமிழக கோவில்களில் தமிழில் குடமுழுக்கு: சுகிசிவம், ஆன்மிக தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் சலசலப்பு - என்ன நடந்தது?

    • எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

கோவில்களில் குடமுழுக்கை தமிழில் நடத்தலாமா என்பது தொடர்பாக திருநெல்வேலியில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் சலசலப்பு, கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் பாதியிலேயே அக்கூட்டம் முடிந்தது.

கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தலாமா என்பது தொடர்பான கருத்துகளை அறிவதற்காக முதல் கட்டமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கான கருத்து கேட்புக் கூட்டம் திருநெல்வேலியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சிரவை குமரகுரு சுவாமிகள், பேரூர் மருதாச்சலம் அடிகள், ஆன்மிக பேச்சாளர் சுகிசிவம், அறநிலையத்துறை இணை கமிஷனர் அன்புமணி, அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிப்பதற்காக, பாஜக, நாம் தமிழர் கட்சியினர், இந்து அமைப்பினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

கூட்டம் தொடங்கியபோது, ‘இந்து அறநிலையத்துறை சார்பாக நடைபெறும் இந்த கூட்டத்தில் மேடையில் சாமி படம் கூட இல்லை’ என்று சிலர் தங்களது அதிருப்தியைத் தெரிவித்தனர்.

மேலும், தமிழிலும் குடமுழுக்கு நடத்தலாமா என்பது தொடர்பாக கருத்து கேட்பதற்கு பதிலாக, தமிழில் குடமுழுக்கு நடத்துதல் தொடர்பாக கருத்துக் கோருதல் என்ற பெயரில் இக்கூட்டம் நடத்தப்படுவதாக கூறி இந்து அமைப்பினர் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

நீதிமன்ற உத்தரவை விளக்கி முதலில் சுகிசிவம் பேசினார். அவரை தொடர்ந்து பேரூர் மருதாச்சலம் அடிகள் பேச தொடங்கியதும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்படத்தொடங்கியது.

அப்போது சுகிசிவம் அனைவரையும் அமைதியாக இருக்கும்படி மைக்கில் கூறியுள்ளார்.

எனினும் பலரும் மேடை அருகே வந்து கோஷமிட்டனர். மேலும், கருத்தை தெரிவிப்பதற்காக கொடுக்கப்பட்ட துண்டு காகிதத்தையும் அவர்கள் கிழித்தெறிந்தனர். இதனால், கருத்து கேட்புக் கூட்டம் பாதியிலேயே முடிந்தது.

கருத்து கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற திருநெல்வேலி சிவநெறிக்கழகத்தின் தலைவர் வி. கணபதி சுப்ரமணியன் பிபிசி தமிழிடம் பேசுகையில், ‘குடமுழுக்கை தமிழில் நடத்தலாமா வேண்டாமா என்பது தொடர்பான கருத்து கூட்டமாக இது இருக்கும் என்ற எண்ணத்தில் தான் பலரும் கலந்து கொண்டனர். ஆனால், தமிழில் எவ்வாறு நடத்துவது என்ற நோக்கில் கருத்துக் கூட்டம் நடைபெறுவது அங்கே சென்ற போதுதான் தெரியவந்தது. இதுவே பலருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

மேலும், சுகி சிவம் பேசும்போது முன்வரிசைகளில் அமர்ந்திருந்த சிலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பிற மதத்தினருக்கு ஆதரவாக பேசும் அவர் வெளியேற வேண்டும் என்றும் குரல் எழுப்பினர்.

இதற்கு தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், அங்கிருந்தவர்கள் தலையிட்டு சமாதானம் ஏற்படுத்த முயன்றனர். இதற்கிடையே, கருத்துகளை தெரிவிப்பதற்காக தரப்பட்ட சீட்டிலும் தமிழில் எப்படி நடத்தலாம்? என்பது குறித்தே கேட்கப்பட்டிருந்ததால் அதை சிலர் கிழித்தெறிந்தனர்.

இந்த அமளியைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்திலேயே கூட்டம் முடிந்தது’ என்றார்.

ஆகமமுறைப்படிதான் வழிபாடு நடத்த வேண்டும் என்று கூட்டத்தில் தங்களது கருத்தை பதிவு செய்ததாகக் கூறிய வி.கணபதி சுப்ரமணியன், ‘வழிபாட்டில் கிரியை, தோத்திரம் என இரண்டு பகுதிகள் உள்ளன. கிரியை எந்த மொழியில் வகுக்கப்பட்டுள்ளதோ, அந்த மொழியில்தான் செய்ய வேண்டும். மந்திரத்தை மொழி பெயர்க்க முடியாது. கிரியைகள் வடமொழி ஆகமங்களில்தான் உள்ளன. பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த முறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதுமே ஒரே கிரியைதான் உள்ளது. தோத்திரம் என்பது இறைவனை போற்றி பாடுவது. ஆனால், இவர்கள் தோத்திர முறையை எடுத்து புதிய கிரியை செய்கின்றனர். மொழி துவேஷத்தை நுழைத்து இவ்வாறு செய்யக்கூடாது என்பதே எங்களின் கோரிக்கை’ என்கிறார்.

இந்த நிகழ்வு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சுகி சிவம், ‘அடிகளார் பேசத் தயார் ஆனதும் கலாட்டா செய்தனர். அவருக்கு அவமானம் நேர வேண்டாமே என்று அமைதியாக இருக்கும்படி கேட்டேன். கூச்சல் குறையவில்லை. இதனால் தமிழ் ஆர்வலர்கள் பதிலுக்குக் கோஷம் போட்டதால் பிரச்சனை வேண்டாமே என்று அமர்ந்து கொண்டேன். எங்களுக்கு ஆதரவாக இருந்தவர்கள் எங்கள் பேச்சை பின்னர் கோஷம் எழுப்பாமல் அமைதியாக இருந்தனர்," என்றார்.

கருத்துக் கேட்பு கூட்டத்தில் கடவுள் புகைப்படம் வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், "கடவுள் இல்லாத இடம் உண்டா? கூட்டத்தில் தேவாரம் இசைக்கப்பட்டது. அதில் கடவுள் இல்லையா? எதாவது வம்பு செய்ய வேண்டும் என்பதற்காக இதைவைத்து கூச்சலில் ஈடுபட தொடங்கிவிட்டனர். கருத்துக் கேட்பு கூட்டத்தில் ஏதாவது கருத்தை தெரிவிக்க வேண்டும். அதைவிட்டு கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டால் என்ன செய்வது," என்று தெரிவித்தார்.

வழக்கின் பின்னணி

கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதீஸ்வரர் கோவில் குடமுழுக்கை தமிழ் சைவ ஆகம விதிப்படி நடத்த உத்தரவிடக்கோரி பொன்னுசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என். கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 19.08.2021ல் அளித்த தீர்ப்பில், ’தமிழ் உலகில் உள்ள தொன்மையான மொழி மட்டுமல்ல கடவுளின் மொழியும் கூட. சிவன் நடனமாடும்போது உடுக்கையில் இருந்து உதிர்த்தது தமிழ் மொழி என்றும், கடவுள் முருகன் தமிழ் மொழியை உருவாக்கினார் என்றும் இரு வேறு நம்பிக்கைகள் உள்ளன.

மனுதாரரின் கோரிக்கை பசுபதீஸ்வரர் கோவில் மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து கோவில்களுக்கும் பொருந்தும். அனைத்து கோவில்களிலும் தமிழில் குடமுழு நடத்த ஏதுவாக நாயன்மார்கள், ஆழ்வார்கள், அருணகிரிநாதர், சித்தர்கள் ஆகியோர் இயற்றிய பழமையான துதிப்பாடல்களைக் கண்டறிந்து தொழுதிடும் வகையில், தமிழ் அறிஞர்கள், ஆன்மிக ஆர்வலர்களைக் கொண்ட குழுவைத் தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டிருந்தது.

மேலும், குடமுழுக்கை தமிழில் நடத்தலாமா அல்லது சமஸ்கிருதத்தையுடன் தமிழுக்கும் சம முக்கியத்துவம் அளித்து குடமுழுக்கை நடத்தலாமா என்பது குறித்து மாநில அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: