அறைக்குள் நுழைந்த சிறுத்தையை சிறைபிடித்த 12 வயது சிறுவன் - காணொளி

அறைக்குள் நுழைந்த சிறுத்தையை சிறைபிடித்த 12 வயது சிறுவன் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

மகாராஷ்டிரா மாநிலம் மாலேகான் பகுதியில் இருக்கும் ஒரு அலுவலகத்தின் அறைக்குள் சிறுத்தை ஒன்று திடீரென நுழைந்தது. அப்போது அறைக்குள் இருந்த 12 வயது சிறுவன் மோஹித் பதற்றப்படாமல் அறையை விட்டு வெளியேறி, சிறுத்தையை உள்ளே வைத்து பூட்டியுள்ளார்.

பின்னர் அந்த சிறுத்தை வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது. சிறுவனின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அலுவலக அறைக்குள் சிறுத்தை நுழைந்த போது, வாசலின் அருகில் அமர்ந்திருந்த மோஹித் கைப்பேசியில் கேம் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். சிறுத்தை அவரைப் பார்க்காமல் நேராக உள்அறைக்குள் சென்றது. ஆனால் சிறுத்தையை கண்டு அசராமல், மெதுவாக எழுந்து அறைக்கு வெளியே சென்று சாமர்த்தியமாக கதவை மூடிவிட்டார் மோஹித்.

இந்த சம்பவம் அலுவலக அறையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

"நான் அலுவலகத்தின் கதவின் அருகே சோஃபாவில் அமர்ந்திருந்தேன். சிறுத்தை நேராக உள்ளே நுழைந்தது. ஒருவித சத்தம் எழுப்பியது. நான் உடனடியாக மொபைலை எடுத்துக்கொண்டு வெளியே வந்து, கதவை மூடிவிட்டேன்" என்கிறார் சிறுவன் மோஹித் விஜய் அஹிரே.

சிறுவன் கொடுத்த தகவலின் பேரில் அருகிலிருந்தவர்கள் வனத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இருதுறையைச் சேர்ந்த அதிகாரிகளும் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுத்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து மயக்க மருந்து செலுத்தப்பட்டு சிறுத்தை பிடிக்கப்பட்டது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)