டெஸ்லா 2022இல் 13 லட்சம் வாகனங்கள் தயாரித்து சாதனை – முந்தைய ஆண்டை விட 40% அதிகம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பீட்டர் ஹாஸ்கின்ஸ்
- பதவி, பிபிசி வணிக செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
பேட்டரி கார் தயாரிப்பில் முக்கிய நிறுவனமாக அறியப்படும் டெஸ்லா, 2022ஆம் ஆண்டு 13 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது 2021ஆம் ஆண்டு டெஸ்லா உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கையை விட 40% அதிகம்.
2022ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் சுமார் நான்கு லட்சத்து ஐந்தாயிரம் வாகனங்களை டெஸ்லா தயாரித்து வழங்கியிருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆனாலும் அதேகாலகட்டத்தில் டெஸ்லா நிறுவனம் 4,30,000 வாகனங்களை விநியோகம் செய்யும் என்ற அமெரிக்க பங்கு வர்த்தகத்தை குறிக்கும் வால்ஸ்ட்ரீட் கணிப்பு பொய்யாகியுள்ளது.
பொருளாதாரத்தில் ஏற்படவிருக்கும் மந்தநிலை மற்றும் அதிகரித்து வரும் வட்டி விகிதம் ஆகியவற்றால் நுகர்வோர் மத்தியில் ஏற்பட்டிருக்கும் கவலையின் காரணமாக இந்தாண்டு மோட்டார் துறையின் வணிகம் தொய்வடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தமது முதலீட்டாளர்களுக்கான அறிவிப்பில், ‘கோவிட் மற்றும் விநியோக சங்கிலி முறையில் ஏற்படும் சிக்கல்களால் ஏற்படும் சவால் நிறைந்த சூழல்களை இந்தாண்டு முழுவதும் தங்கள் நிறுவனம் எதிர்கொள்ளவேண்டியிருக்கும்” என டெஸ்லா கூறியுள்ளது.
இதேவேளை தென்கொரிய அதிகாரிகள், வெப்பநிலை குறைவாக இருக்கும் நேரத்தில் டெஸ்லாவின் எலக்ட்ரிக் வாகன தயாரிப்புகள் குறைந்த அளவு வாகன ஓட்டுதல் வரம்பை மட்டுமே எட்டுகிறது. இது குறித்து டெஸ்லா தனது வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்க தவறிய நிலையில் அந்நிறுவனத்திற்கு 2.2 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
பெட்ரோல் வாகனங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் மூலம் எட்டப்படும் தூரத்தை விட தங்களது எலக்ட்ரிக் வாகனங்களில் ஒருமுறை பேட்டரியை சார்ஜ் செய்து ஓட்டுவதன் மூலம் அதைவிட அதிக தூரத்தை அடையமுடியும் என டெஸ்லா நிறுவனம் தங்களது எலக்ட்ரிக் வாகனங்களின் ஓட்டுதல் வரம்பை மிகவும் மிகைப்படுத்தி கூறி வருகிறது” என்று கொரியாவின் வர்த்தக ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த கருத்தை கேட்பதற்கு டெஸ்லா நிறுவனத்தை பிபிசி செய்திகள் தொடர்பு கொண்டபோது உடனடியாக பதிலளிக்கவில்லை.
அதேபோல் உற்பத்தி செய்யும் கார்களை விநியோகம் செய்வதில் டெஸ்லா தற்போது சவால்களை சந்தித்து வருகிறது. 2022ஆம் ஆண்டின் நான்காம் நிதியாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களை விடவும் 34,000 கார்கள் குறைவாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இது டெஸ்லாவிற்கு ஒரு அசாரணமான சூழலாகும். இதற்கு முந்தைய ஆண்டுகளில் இதைவிட அதிக எண்ணிக்கைகளில் டெஸ்லா நிறுவனம் தங்களது கார்களை விநியோகம் செய்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் பேசிய டெஸ்லாவின் தலைமை செயலதிகாரி ஈலோன் மஸ்க், ‘இந்த சிக்கல்களை கலைவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக’ கூறியிருந்தார்.

பட மூலாதாரம், SMITHCOLLECTION/GADO
இதேபோல் இந்தாண்டு பாரம்பரிய மோட்டார் தொழில் நிறுவனங்களான ஃபோர்ட் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ், புதிய வரவு நிறுவனங்களான அமெரிக்காவின் ரிவியன், லூசிட், சீனாவின் BYD மற்றும் நியோ போன்றவற்றால் ஏற்படவிருக்கும் போட்டிகளை டெஸ்லா நிறுவனம் சமாளிக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தங்கள் நிறுவனத்தின் 2022ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டு அறிக்கையை ஜனவரி 25ஆம் தேதி டெஸ்லா அறிவிக்க திட்டமிட்டுள்ளது.
மற்றொரு அறிவிப்பில் தங்களது முதலீட்டாளர்களின் மாநாட்டை மார்ச் 1ஆம் தேதி டெக்சாஸில் உள்ள தங்களது ஜிகா தொழிற்சாலையில் நடத்தவிருப்பதாகவும் அதனை நேரடி ஒளிபரப்பு செய்யவிருப்பதாகவும் டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




























