ஆர்ட்டெமிஸ்: நாசாவின் தொலைதூர சாதனையை முறியடித்த ஓரியன் விண்கலன்

நாசா

பட மூலாதாரம், NASA

பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ஓரியன் விண்கலன், நிலவை சுற்றும் பணியில் ஒரு முக்கிய மைல்கல்லை அடைந்துள்ளது.

திங்கள்கிழமை பூமிக்கு அப்பால் சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் கிலோ மீட்டர் (2 லட்சத்து 70 ஆயிரம் மைல்கள்) தூரத்தை இது அடைந்தது. இதுவரை விண்வெளி வீரர்களை ஏற்றிச்செல்ல வடிவமைக்கப்பட்ட விண்கலங்கள் பயணித்த தூரத்தை விட இது அதிக தொலைவாகும்.

இந்த விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் யாரும் பயணிக்கவில்லை. இந்த ஆர்ட்டெமிஸ் விண்கலம் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்தால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் விண்வெளி வீரர்களோடு நிலவுக்கு பயணம் மேற்கொள்ளும் திட்டமுள்ளது.

ஓரியன் விண்கலனை கொண்டு நாசா மிகவும் சிக்கலான பயணங்களைத் திட்டமிடுகிறது. அவை அனைத்தும் நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

நாசா

பட மூலாதாரம், NASA

50 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்பு, நிலவுக்கு விண்வெளி வீரர்களை கொண்டு செல்ல நாசா இதன் மூலம் திட்டமிடுகிறது. திங்கள்கிழமை எட்டப்பட்ட மைல்கல், இந்த திட்டப்பணி பாதி நிறைவடைந்ததைக் குறிக்கிறது.

நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மேலாளர் மைக் சராஃபின் இது பற்றி தெரிவிக்கையில், “இந்த திட்டத்தில் பாதி இலக்கு எட்டப்பட்டிருப்பது, நிலவில் மீண்டும் கால் பதிக்கும் நாட்களை நம்மை எண்ணிப்பார்க்க வைத்துள்ளது” என்றார்.

“ இது ஆபத்துகளை குறைக்கவும், விண்வெளி வீரர்களோடு செல்லும் அடுத்த நிலவுப் பயணத்தில் விண்கல செயல்திறனை புரிந்துகொள்ளவும் செய்கிறது.” என்கிறார் மைக் சராஃபின்.

நாசா

பட மூலாதாரம், NASA

இந்த பயணத்தின் சில சிறந்த காணொளிகளை ஓரியன் மீண்டும் நேரடியாக அனுப்பி வருகிறது. இந்த மைல்கல் தொலைவை அடைவதற்கு சற்று முன்னதாக, பூமிக்கு முன்னால் நகர்ந்து கொண்டிருந்த நிலவை படம்படித்தது.

இந்த விண்கலன் ஃபுளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நவம்பர் 16ஆம் தேதி 26 நாள் பயணத்தை தொடங்கியது. இதன் அமைப்புகளை விரிவுபடுத்தவும், விண்வெளி வீரர்கள் செல்வதற்கு பாதுகாப்பானதா என்பதை உறுதிசெய்யவும் இது வடிவமைக்கப்பட்டது.

ஐரோப்பிய விண்வெளி அமைப்பு (இஎஸ்ஏ) வழங்கிய இயந்திர தொகுதி ஒன்றின் மூலமே ஓரியன் விண்வெளியில் சுற்றவைக்கப்படுகிறது. திறம்பட செயல்பட தேவையான இந்த வாகனம் பெரிய உந்துசக்தியை உள்ளடக்கியது.

தொலைதூர வெளிப்புற சுற்றுப்பாதை எனப்படும் நிலவை சுற்றிய ஒரு பெரிய சுற்றுப்பாதையை ஓரியன் அடைவதற்கு இஎஸ்ஏ இரண்டு முக்கிய இயந்திரங்களை வழங்கியது.

நிலவின் மேற்பரப்பிலிருந்து (61,000 கிமீ; 38,000 மைல்கள்) ஓரியன் நீண்ட தூரம் செல்வதால் "தொலைவு" என்றும், நிலவின் பயணத் திசைக்கு எதிர் திசையில் விண்கலனை சுற்ற செய்வதால் இது “நேர்மாறானது” என்றும் அழைக்கப்படுகிறது.

பூமிக்கு திரும்பி வருவதற்கு சரியான பாதையில் விண்கலனை கொண்டு வருவதற்காக இனி வரும் நாட்களில் மேலும் இரண்டு கவனமான பாதை மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

இந்த விண்கலம் டிசம்பர் 11ஆம் தேதி கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோவில் பசிபிக் பெருங்கடலில் இறங்கவுள்ளது.

நாசா

பட மூலாதாரம், NASA

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இதுவரை ஓரியன் செயல்பாடுகளில் கட்டுப்பாட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இஎஸ்ஏ தொகுதியோடு சென்றுள்ள ஓரியன், எதிர்பார்த்ததை விட மிகக் குறைவான எரிபொருளையே பயன்படுத்தியுள்ளது.

மேலும், எதிர்பார்த்ததை விட அதிக எரிசக்தியை உற்பத்தி செய்துள்ள அதேவேளையில் அதன் எரிசக்தியை செலவு செய்வதும் மிகவும் சிக்கனமாக இருக்கிறது.

சில சிறிய தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளன, ஆனால் "இதிலிருக்கும் முரண்பாடுகளால் எந்த விளைவு ஏற்படாது," என்கிறார் திரு சராஃபின்.

ஒரு சமயம் 45 நிமிடங்களுக்கு இந்த விண்கலனின் தொடர்பை கட்டுப்பாட்டாளர்கள் இழந்தனர், ஆனால் இது பூமியில் உள்ள உபகரணங்களின் உள்ளமைவு தொடர்பான சிக்கலால் ஏற்பட்டது என்று முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக, விண்வெளி வீரர்கள் சென்ற விண்கலம் அடைந்த தொலைதூரத்தின் முந்தைய சாதனை 1970ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்போலோ-13 பயணத்தால் உருவாக்கப்பட்டது.

அது பூமியிலிருந்து 4 லட்சத்து 171கிமீ (2 லட்சத்து 48 ஆயிரத்து 655 மைல்கள்) தொலைவு சென்றது, அந்த விண்கல சேவை தொகுதியில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து அதன் குழுவினர் திரும்பி வருவதற்கு போராடினர்.

ஓரியன் விண்கலத்திலுள்ள மனித உடல் பொம்மைக்கு, கமாண்டர் மூனிகின் காம்போஸ் என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டது.

சிக்கலில் இருந்த அப்பல்லோ 13-யை மீட்டெடுத்ததில் முக்கியப் பங்காற்றிய நாசா பொறியாளரான ஆர்டுரோ காம்போஸின் நினைவாக இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விண்வெளி வீரர்களோடு செல்லும் ஆர்ட்டெமிஸ் பயணம் தற்போது 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் திட்டமிடப்பட்டுள்ளது. விண்வெளி வீரர்கள் நிலவின் மேற்பரப்பில் இறங்குகின்ற ஓரியன் பயணம் 2025 அல்லது 2026 இல் நிகழலாம்.

"நிச்சயமாக, அப்போலோ சாதனை மீது ஆர்ட்டெமிஸ் கட்டமைக்கிறது" என்று நாசா நிர்வாகி பில் நெல்சன் கூறினார்.

"நாங்கள் வெகுதூரம் சென்று பூமிக்கு வேகமாக திரும்பி வருகிறோம் என்பது மட்டுமல்லாமல், ஒரு விரோதமான சூழலில், விண்வெளியில் தொலைவில் வாழவும், வேலை செய்யவும், புதியவை படைப்பதற்கும், இறுதியாக, மனிதர்களுடன் செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதற்கான வழியையும் ஆர்ட்டெமிஸ் வகுக்கிறது" என்கிறார் பில் நெல்சன்.

காணொளிக் குறிப்பு, நாசா வெளியிட்ட பூமியின் வெப்பநிலை காணொளி: 140 ஆண்டுகளில் எதிர்கொண்ட மாற்றம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: