You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மருத்துவக் கழிவா, அதிசய மருந்தா? மனித நஞ்சுக்கொடி கடத்தலின் பின்னணி என்ன?
- எழுதியவர், அசாத் சோஹைப்
- எழுதியவர், ஷஹ்சாத் மாலிக்
- பதவி, பிபிசி நியூஸ் உருது
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
- எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் மனித திசுக்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன.
முதுமையைத் தடுக்கும் ஊசிகளைத் தயாரிப்பதற்காக, மருத்துவமனைகளில் இருந்து மனித நஞ்சுக்கொடிகளை கடத்துவதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு கும்பல் குறித்து பாகிஸ்தானில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கும்பல் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து ஒவ்வொரு மாதமும் 200 கிலோ எடையுள்ள நஞ்சுக்கொடிகளை வாங்குவதாக பாகிஸ்தானின் மத்திய புலனாய்வு முகமை (எஃப்ஐஏ) குற்றம் சாட்டியுள்ளது.
அவர்கள் இவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு முன்பு, உலர வைத்துப் பதப்படுத்துவதாக எஃப்ஐஏ பிபிசி நியூஸ் உருதுவிடம் தெரிவித்துள்ளது.
கடந்த மாத இறுதியில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது, சட்டவிரோதப் பதப்படுத்தும் ஆலை ஒன்றில் மனித நஞ்சுக்கொடி என்று நம்பப்படும் 500 கிலோ எடையுள்ள பொருட்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர், இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எஃப்ஐஏ பகிர்ந்துள்ள புகைப்படங்களில், "நஞ்சுக்கொடியைச் சேமித்து பதப்படுத்தும் மையமாக மாற்றப்பட்டதாக" கூறப்படும் ஒரு வீட்டிற்குள், உலர்த்தப்பட்ட நஞ்சுக்கொடிகள் தட்டுகளில் அடுக்கப்பட்டு டிராலி வண்டிகளில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
சந்தேகத்துக்கு இடமான ஐந்து நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஒரு நஞ்சுக்கொடிக்கு சுமார் 2.90 டாலர்கள் செலுத்தியுள்ளனர்.
மருத்துவமனை நிர்வாகிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை என்று பாகிஸ்தானின் மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் அதிகாரி ஹினா கன்வால் பிபிசி நியூஸ் உருதுவிடம் தெரிவித்துள்ளார்.
இவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, ஒவ்வொன்றும் 2,530 டாலர்கள் மதிப்புள்ள முதுமையைத் தடுக்கும் ஊசிகளாகத் தயாரிக்கப்பட இருந்ததாக எஃப்ஐஏ கூறுகிறது.
அழகுசாதன அறுவை சிகிச்சையில் மனித நஞ்சுக்கொடிக்கு பெரும் தேவை உள்ளது என்று கன்வால் கூறுகிறார். ஆனால் பாகிஸ்தானில், அதை வாங்குவதும் விற்பதும் சட்டவிரோதமானது.
வணிக நோக்கத்திற்காக மனித உறுப்புகளை சேகரித்தது நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 3,600 அமெரிக்க டாலர் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
இந்த கும்பலின் செயல்பாடுகள் லாகூர் மற்றும் பெஷாவர் உள்ளிட்ட பிற பெரிய நகரங்களுக்கும் பரவியுள்ளதாக எஃப்ஐஏ கூறுகிறது.
குடிவரவு அதிகாரிகள், கழிவு மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கும் இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
எஃப்ஐஏ இதற்கு முன்பு "சட்டவிரோத மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது", ஆனால் "மனித நஞ்சுக்கொடி வர்த்தகத்தில் ஈடுபடும் ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட, சர்வதேச வலையமைப்பு" தொடர்புடைய முதல் வழக்கு இதுவாகும் என்று அதிகாரி ஒருவர் பிபிசி நியூஸ் உருதுவிடம் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகத்துக்கு இடமான ஐந்து நபர்களும் ஆரம்பத்தில் தாங்கள் கையாண்டது ஆட்டின் நஞ்சுக்கொடி என்று கூறினர், ஆனால் கூடுதல் விசாரணைக்குப் பிறகு அது மனித நஞ்சுக்கொடி என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில் வேறொரு சோதனையில், இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தில் எஃப்ஐஏ அதிகாரிகள் வியட்நாமுக்கு அனுப்பப்படவிருந்த 100 கிலோ மனித நஞ்சுக்கொடியைத் தடுத்து நிறுத்தினர்.
வியட்நாமில் தயாரிக்கப்படும் பொருட்களில் விலங்குகளின் நஞ்சுக்கொடியைப் பயன்படுத்த முடியும் என்றாலும், மனித நஞ்சுக்கொடியைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இதுவரை மொத்தம் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனித நஞ்சுக்கொடி கடத்தல் வணிகத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் தற்போது காவலில் உள்ளனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் சதாஃப் தாரிக், நஞ்சுக்கொடியை அகற்றுவதற்கான நடைமுறைகள் கடுமையாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன என்றும், அது "அதிக தொற்றுத் தன்மை கொண்ட மருத்துவக் கழிவு" எனக் கருதப்படுவதாகவும் கூறுகிறார்.
குழந்தை பிறந்த உடனேயே, அது பிரிக்கப்பட்டு, நஞ்சுக்கொடி உள்ளதாகக் குறிக்கப்பட்ட மஞ்சள் நிற உயிரியல் அபாயக் கழிவுப் பையில் இறுக்கமாக அடைத்து சீல் வைக்கப்படுகிறது என்று அவர் பிபிசி நியூஸ் உருதுவிடம் தெரிவித்தார்.
"அது அழுகிப்போவதையும் துர்நாற்றம் வீசுவதையும் தடுப்பதற்காக, பிரசவ அறை அல்லது அறுவை சிகிச்சை அரங்கில் இருந்து மருத்துவமனையின் மைய குளிரூட்டும் சேமிப்பு அறைக்கு மாற்றப்படுகிறது"என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
நஞ்சுக்கொடியை அதிகபட்சமாக 24 மணி நேரம் மட்டுமே சேமிக்க முடியும் என்கிறார் தாரிக்.
"இதற்குப் பிறகு, நஞ்சுக்கொடி போன்ற அனைத்து நோயியல் கழிவுகளும் எரியூட்டுதல் என்ற நிலையான மருத்துவ நடைமுறையின் மூலம் அகற்றப்படுகின்றன. அது அரசு மருத்துவமனையாக இருந்தாலும் சரி அல்லது தனியார் மருத்துவமனையாக இருந்தாலும் சரி, இதே முறையைப் பயன்படுத்திதான் அவை அகற்றப்படுகின்றன" என்று அவர் விளக்குகிறார்.
அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவக் கழிவு மேலாண்மை நிறுவனங்களே இந்தப் பணியை மேற்கொள்கின்றன. மருத்துவமனைகள் இத்தகைய கழிவுகளை அவர்களிடம் ஒப்படைக்கும்போது, அதற்கான பதிவுகள் முறையாக பராமரிக்கப்படுகின்றன. இந்தப் பதிவுகளை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்கிறார்கள் என்றும் தாரிக் தெரிவித்தார்
பாரம்பரிய மருத்துவப் பயன்பாடு
நஞ்சுக்கொடி என்பது கர்ப்பகாலத்தில் கருப்பையில் உருவாகும் ஒரு தற்காலிக உறுப்பு ஆகும். கருவில் வளரும் குழந்தையின் உயிர்வாழ்வை அது உறுதிப்படுத்துகிறது.
தொப்புள் கொடி மூலம் குழந்தையுடன் இணைந்திருக்கும் நஞ்சுக்கொடி, குழந்தைக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துகளை வழங்குவதோடு, கழிவுப் பொருட்களையும் வெளியேற்றுகிறது.
சுகப்பிரசவத்தில், குழந்தை பிறந்த சில நிமிடங்களுக்குப் பிறகு நஞ்சுக்கொடி பிறப்புறுப்பு வழியாக வெளியேறுகிறது. சிசேரியன் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறக்கும்போது, மருத்துவர்கள் அதை அகற்றுகின்றனர்.
ஆனால் புரதம், இரும்புச்சத்து மற்றும் கொழுப்பு நிறைந்த நஞ்சுக்கொடி, பெரியவர்களுக்கும் ஊட்டச்சத்து அளிக்கக்கூடியது என்று சிலர் நம்புகின்றனர். நஞ்சுக்கொடி சாறுகள் பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு கலாசாரங்களில் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது உலகளவில் 700 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிக மதிப்புள்ள சட்டபூர்வ நஞ்சுக்கொடி வணிகம், 2034-ஆம் ஆண்டுக்குள் 1.4 பில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டும் என அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட சந்தை ஆராய்ச்சி நிறுவனமான போலாரிஸ் கணித்துள்ளது.
பன்றி, ஆடு, குதிரை மற்றும் மனித நஞ்சுக்கொடி சாறுகளுக்கான தேவை அதிகரித்து வருவதே இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்று போலாரிஸ் கூறுகிறது.
"நஞ்சுக்கொடி கர்ப்ப காலத்தில் மட்டும் முக்கியப் பங்கு வகிக்கவில்லை. இது மருத்துவம் மற்றும் அறிவியலிலும் ஒரு முக்கியப் பொருளாக மாறியுள்ளது" என்று போலாரிஸ் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் நிதின் தம்பே கூறுகிறார்.
"குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்குவதிலிருந்து, புதிய மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் அழகுசாதனத் துறையின் புதுமை கண்டுபிடிப்புப்புகளுக்கு ஊக்கமளிப்பது வரை, நஞ்சுக்கொடியின் பயன்பாட்டு வாய்ப்புகள் தொடர்ந்து விரிவடைந்து வருகின்றன," என்றும் அவர் தெரிவித்தார்.
வாழ்க்கையின் தொடக்க நிலையிலேயே உயிரைத் தாங்கிப் பாதுகாப்பதே நஞ்சுக்கொடியின் முதன்மைப் பணி. ஆனால் முரண்பாடாக, அதிலிருந்து பெறப்படும் பல பொருட்கள் முதுமையுடன் தொடர்புடைய பிரச்னைகளுக்கான சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில்:
- சுருக்கங்கள்
- முடி உதிர்தல்
- மாதவிடாய் நிறுத்தம்
- மலட்டுத்தன்மை
- மூட்டுத் தேய்மானம் ஆகியவை அடங்கும்.
ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் போன்று பெண் இனப்பெருக்க ஹார்மோன்களை அதிக அளவில் கொண்டுள்ள நஞ்சுக்கொடி, பல மருந்துகளை தயாரிப்பதிலும் பயன்படுத்தப்படுகிறது, மேலும் சிலர் இதனைப் பிரசவத்திற்குப் பிந்தைய மன அழுத்தத்தைக் குணப்படுத்தப் பயன்படுத்துகின்றனர்.
பக்கவாதம், நாள்பட்ட சோர்வு, பார்கின்சன்ஸ் , மல்டிபிள் ஸ்களீரோசிஸ் , தசை சிதைவு நோய் , கல்லீரல் நோய்கள், குரோன்ஸ் நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட வழக்கமான சிகிச்சைகள் குறைந்த பலன் அளிக்கும் சில நோய்களுக்கும் நஞ்சுக்கொடி சார்ந்த சிகிச்சைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
"இரும்புச் சத்தின் அளவை அதிகரிக்கவும், பிரசவத்திற்குப் பிந்தைய ரத்த சோகைக்கு சிகிச்சை அளிக்கவும் வடிவமைக்கப்படும் மருந்துகளில் இது உதவியாக இருக்கும் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன" என்று தாரிக் கூறுகிறார்.
திசுக்களின் மீளுருவாக்கத்திற்குப் பயன்படக்கூடும் என்று சிலர் கூறும் மாத்திரைகள் மற்றும் ஊசிகளாகவும் இது தயாரிக்கப்படுகிறது.
"குறிப்பாக நஞ்சுக்கொடியின் உள் அடுக்கு, வளர்ச்சி காரணிகளை கொண்டதாக அறியப்படுகிறது. ஆழமான காயங்கள், கடுமையான தீக்காயங்கள், புண்கள் மற்றும் கண் காயங்கள் போன்றவற்றுக்கான சிகிச்சையிலும் இது பயன்படுத்தப்படுகிறது," என்று தாரிக் கூறுகிறார்.
இருப்பினும், உலகெங்கிலும் உள்ள விதிமுறைகளைப் போலவே, இந்த நடைமுறைகளின் பின்னணியில் உள்ள அறிவியல் சான்றுகளும் மாறுபடுகின்றன.
ஜப்பான் பயோ புராடக்ட்ஸ் நிறுவனம் 100% தூளாக்கப்பட்ட நஞ்சுக்கொடி காப்ஸ்யூல்களை உணவுப் பொருட்களாக ஆசியா முழுவதும் ஏற்றுமதி செய்கிறது, உள்ளூர் சந்தையைப் பொறுத்து இவற்றில் சில மனிதர்களிடமிருந்தும், சில பன்றி அல்லது குதிரையின் நஞ்சுக்கொடியிலிருந்தும் பெறப்படுகின்றன.
"ஆசியர்கள் நஞ்சுக்கொடி சார்ந்த தயாரிப்புகளை ஏற்றுக்கொள்வதில் அதிக வெளிப்படையான மனோபாவத்தைக் கொண்டுள்ளனர், ஏனெனில் அவர்களில் சிலருக்கு குறிப்பாக சீனர்களுக்கு உண்மையில் நஞ்சுக்கொடியை உட்கொள்ளும் வரலாறு உள்ளது" என்று அந்த நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய மேலாளர் வின்ஸ்டன் ஓய், நியூட்ராஇன்கிரிடியண்ட்ஸ் செய்தி இணையதளத்திடம் தெரிவித்தார்.
"இணையத்தில் கூடுதல் தகவல்கள் கிடைப்பதால், மக்கள் நஞ்சுக்கொடி தயாரிப்புகளைப் பற்றி அதிகம் அறிந்துகொள்கின்றனர் மற்றும் இதற்கான தேவையும் அதிகரித்து வருகிறது" என அவர் விவரித்தார்.
சீனாவின் சட்டவிரோத வர்த்தகம்
சீனாவில், வணிக ரீதியான விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தபோதிலும், புதிய மனித நஞ்சுக்கொடி கள்ளச் சந்தைகளிலும், பல்வேறு ஆன்லைன் தளங்களில் வெவ்வேறு பெயர்களில் மறைமுகமாகவும் தொடர்ந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
ஓர் ஆன்லைன் வர்த்தகர் குளோபல் டைம்ஸ் நாளிதழிடம், தான் ஒரு மனித நஞ்சுக்கொடியை 50 டாலர்களுக்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்வதாகத் தெரிவித்தார்.
"நீங்கள் அதிகமாக வாங்கினால் விலையை [40 டாலராக] குறைக்கலாம்" என்று அரசு கட்டுப்பாட்டில் உள்ள அந்தச் செய்தித்தாளிடம் கூறிய அவர், "நாங்கள் மூலப்பொருளை ஒரு கிலோவிற்கு [30 டாலர்] என்ற விலையில் வாங்குகிறோம்"என்றார்.
இவ்விவகாரத்தில் பிடிபடுபவர்களுக்கு வழக்கமாக அவர்களின் சட்டவிரோத லாபத்தை விட ஐந்து மடங்குக்கும் குறைவான தொகையே அபராதமாக விதிக்கப்படுவதாகச் சட்ட நிபுணர் ஜாங் போ அந்தச் செய்தித்தாளிடம் தெரிவித்தார்.
உதாரணமாக, "இந்த அபராதத் தொகை சட்டவிரோத லாபத்தின் 50 மடங்காக உயர்த்தப்பட்டால், அவர்கள் தாங்கள் செய்யும் குற்றத்திற்கான விலையைக் குறித்து இருமுறை யோசிப்பார்கள்" என்றும் அவர் கூறினார்.
மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் பாரம்பரிய சீன மருத்துவ மருந்தாளரான யாவ், குளோபல் டைம்ஸிடம், "பண்டைய டிசிஎம் (பாரம்பரிய சீன மருத்துவம்) முறையில், மனித நஞ்சுக்கொடி முக்கியமாக நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க அல்லது ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சிக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்பட்டது" என்றார்.
ஆனால், ஷாங்காய் மக்கள் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் ஹுவாங் செங்ஷெங் குளோபல் டைம்ஸிடம், எச்ஐவி, ஹெபடைடிஸ் பி மற்றும் சிபிலிஸ் போன்ற வைரஸ்களைக் கொண்டிருக்கக்கூடிய "சுகாதாரமற்ற நஞ்சுக்கொடிகளை உட்கொள்வதன் மூலம் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.
இருப்பினும், "பல புதிய தாய்கள் தங்கள் நஞ்சுக்கொடியை அழிப்பதற்குப் பதிலாக, அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று உட்கொள்ளவே விரும்புகிறார்கள்" என்று மருத்துவர் ஹுவாங் குறிப்பிட்டார்.
ஒரு புதிய தாய் அந்த நாளிதழிடம், தனது தாயும் மாமியாரும் தனது நஞ்சுக்கொடியைச் சாப்பிடலாமா என்று கேட்டதாகத் தெரிவித்தார்.
"அவர்கள் அதைச் சாப்பிடுவதை நான் விரும்பவில்லை" என்று அவர் குளோபல் டைம்ஸ் நாளிதழிடம் கூறிய அவர், "அது மிகவும் அருவருப்பானது"என்றார்.
ஷாங்காயைச் சேர்ந்த மற்றொரு பெண் இதுகுறித்து, தனது நஞ்சுக்கொடியைத் தூளாக்கி காப்ஸ்யூல்களாக மாற்றுவதற்காக மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஒரு கடைக்கு சுமார் 7 டாலர்கள் செலுத்தியதாக அந்த நாளிதழிடம் தெரிவித்தார்.
"இது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் என் மாமனாருக்காகச் செய்யப்பட்டது" என்றும் அவர் கூறினார்.
கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் இதே சேவையை வீட்டு வாசலுக்கே சென்று வழங்கும் மற்றொரு பெண், ஆன்லைன் விளம்பரக் கட்டுப்பாடுகளால் தனது தொழில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், "ஆனால் இதற்கான உண்மையான தேவை இன்னும் வலுவாகவே உள்ளது" என்றும் அந்த நாளிதழிடம் தெரிவித்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு