காணொளி: மேகேதாட்டு எங்கு உள்ளது? இரு நதிகள் இணையும் 'சங்கமாவின்' அழகிய காட்சி

காணொளிக் குறிப்பு, மேகேதாட்டு எங்கு உள்ளது? களத்திலிருந்து நேரடி தகவல்
காணொளி: மேகேதாட்டு எங்கு உள்ளது? இரு நதிகள் இணையும் 'சங்கமாவின்' அழகிய காட்சி
பிரசுரிக்கப்பட்டது

கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் இருந்து சுமார் 90 கிமீ தொலைவில் தமிழ்நாடு - கர்நாடகா எல்லையை ஒட்டி காவிரி வன விலங்கு சரணாலயத்தில் அடர்ந்த வனப்பகுதியில் மேகேதாட்டு அமைந்துள்ளது.

கர்நாடகாவில் நீண்ட தூரம் மலைப்பாங்கான இடங்களைக் கடந்து வரும் காவிரியில் சங்கமா என்கிற இடத்தில் அர்காவதி நதி இணைகிறது.

பிபிசி தமிழ் சங்கமாவிற்குச் சென்றபோது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணைகளில் நீர் இருப்பு அதிகரித்ததால் தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. இதனால் காவிரியில் நீர் ஆர்ப்பரித்துச் சென்றதைப் பார்க்க முடிந்தது. அர்காவதி நதியில் நீரின் வேகம் குறைவாகவே இருந்தது.

சங்கமா வரை வாகனத்தில் செல்ல முடியும். சங்கமாவிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவில் மேகேதாட்டு காட்சி முனை அமைந்திருக்கிறது. வனத்துறையின் பேருந்து அல்லது ஜீப் மூலம் மட்டுமே அங்கு செல்ல முடியும்.

சங்கமாவுக்கும் மேகேதாட்டுவுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில் தான் புதிய அணையைக் கட்டுவதற்கான இடத்தை கர்நாடகா அரசு முன்மொழிந்துள்ளது.

சங்கமாவைக் கடந்து பரந்து விரிந்து பாயும் காவிரி நதி மேகேதாட்டு பள்ளத்தாக்கில் சுருங்கி ஆழமான நதியாக சிறிது தூரம் பயணிக்கிறது. இந்த இடத்தை மேகேதாட்டு நீர்வீழ்ச்சி என்றும் உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர்.

இங்கு யானைகள் மற்றும் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக வனத்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேகேதாட்டுவில் இருந்து தமிழ்நாடு - கர்நாடகா எல்லையை ஒட்டியே பயணிக்கும் காவிரி நதி பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டுக்குள் நுழைந்து மேட்டூர் அணையை வந்தடைகிறது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு