You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரேல் - இரான் இடையே அதிகரிக்கும் மோதல்: மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?
வெள்ளிக்கிழமை இரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், இரான் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இஸ்ரேல் மற்றும் இரான் மாறிமாறி வான் தாக்குதல்களை நடத்தி இருக்கின்றன. இரான் அரசின் ஃபார்ஸ் செய்தி முகமை இந்தத் தாக்குதல் இதோடு நிற்காது எனத் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
கடந்த 13ஆம் தேதி இரானின் அணுசக்தி நிலையங்கள் உட்பட பல இடங்கள் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. இரான் கூற்றுப்படி, இந்தத் தாக்குதலில் 6 மூத்த அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். இவர்களில் இரான் அணுசக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் ஃபெரேடூன் அபாசியும் ஒருவர். மேலும், இரான் புரட்சிகர காவல்படை தலைவர் ஹொசைன் சலாமியும் கொல்லப்பட்டார்.
ஆபரேஷன் ரைசிங் லயன் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் நடந்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி இருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட காணொளியில், இஸ்ரேலின் இருப்புக்கான இரானின் அச்சுறுத்தலை முறியடிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அந்த அச்சுறுத்தலை அகற்ற எத்தனை நாட்கள் எடுக்குமோ அதுவரை இந்த நடவடிக்கை தொடரும் என்றும் நெதன்யாகு கூறினார்.
இந்தத் தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி எச்சரித்திருந்தார். இரான் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இந்தச் சூழலில், இரான் இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. டஜன் கணக்கான இலக்குகள், ராணுவ மையங்கள் மற்றும் விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கூறியது. இரான் இந்த நடவடிக்கையை True Promise 3 என கூறுகிறது.
ஆனால், 100க்கும் குறைவான ஏவுகணைகளையே இரான் ஏவியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.
எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் , பெரும்பாலான ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன அல்லது அவற்றின் இலக்குகளை அடையத் தவறிவிட்டன என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், குறைந்த எண்ணிக்கையிலான கட்டடங்களே தாக்கப்பட்டதாகவும், சில இடைமறிப்பு நடவடிக்கைகளால் சிதைந்த துண்டுகள் காரணமாக தாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இரான் தாக்குதலை அடுத்து, குறைந்தது 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் அவசரசேவை முகமை கூறுகிறது.
பதிலுக்கு இஸ்ரேலும் இரான் மீது தாக்குதலை நடத்தியதாலும் தெஹ்ரானிலும் புதிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டன.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய இரான் பிரதிநிதி அமீர்-சயீத் இராவானி காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் இரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், பொதுமக்கள் உட்கட்டமைப்பு மற்றும் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்ததாக கூறினார். மேலும், 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 320 பேர் காயமடைந்ததாகவும், அதில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்தியதை இரான் தலைநகர் தெஹ்ரானில் பொதுமக்கள் கொண்டாடினர்.
இரான் அரசின் ஃபார்ஸ் செய்தி முகமை இந்தத் தாக்குதல் இதோடு நிற்காது என தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் இரான் மாறிமாறி தாக்கி வரும் நிலையில், நிலைமை மேலும் தீவிரமடைவதை தடுக்கும்படி இரு நாடுகளையும் ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியா குட்டரெஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இரான் தனது அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார். மேலும், இஸ்ரேல் இன்னும் கொடூர தாக்குதல்களை நடத்தும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
தொடர் பதற்றம் நிலவி வரும் சுழலில் இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையம் அடுத்த அறிவிப்பு வரும்வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து விமான சேவைகளும் அங்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு