அதீத செல்போன் பயன்பாட்டால் நம் உடலில் வரும் பிரச்னைகளும் எளிய தீர்வும்

பட மூலாதாரம், BBC/ Serenity Strull/ Getty Images
- எழுதியவர், தாமஸ் ஜெர்மைன்
- பதவி,
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
உங்கள் செல்போன், கணினி மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்கள், பலரும் கவனிக்காத வகையில் உங்கள் உடலில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். ஆனால், நல்வாய்ப்பாக சரியான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இந்த விளைவுகளைக் குறைக்க முடியும்.
டிஜிட்டல் திரைகளைப் பார்ப்பதில் அதிக நேரம் செலவிடுவதைப் பற்றி நினைக்கும்போது, மக்கள் பொதுவாக அது ஏற்படுத்தும் உளவியல் தாக்கத்தைப் பற்றியே கவலைப்படுகிறார்கள். ஆனால் ஒரு நாள், செல்போனை பிடித்துப் பயன்படுத்தும்போது அது பெரும்பாலும் தாங்கி நிற்கும் சுண்டு விரலில் ஒரு சிறிய, கடினமான வீக்கம் இருப்பதை நான் கவனித்தேன். இது என்னுள் ஒரு கேள்வியை எழுப்பியது: ஸ்மார்ட்போன் உடலின் பிற பகுதிகளில் வேறு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்?
இதற்கான விடையைக் கண்டறிய, பல நிபுணர்களிடம் பேசினேன். துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் அளித்த பதில்கள் அவ்வளவு நம்பிக்கையூட்டும் வகையில் இருக்கவில்லை.
சமீபத்திய அறிவியல் ஆய்வுகளின்படி, ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்கள் உங்கள் கழுத்தின் நிலையை (posture) படிப்படியாக மாற்றலாம், பார்வைத் திறனைப் பாதிக்கலாம், உடல் இயக்கத் திறனைக் குறைக்கலாம் மற்றும் தசைகளை வலுவிழக்கச் செய்யலாம். டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதில் அதிக நேரம் செலவிடுவது, முன்கூட்டியே தோல் சுருக்கங்கள் தோன்றவும் காரணமாக அமையலாம்.
இந்த உடல் மாற்றங்களில் சில, காலப்போக்கில் மூளையின் செயல்பாடு குறைதல் அல்லது பிற நீண்டகால மருத்துவப் பிரச்னைகள் உள்ளிட்ட தீவிரமான பாதிப்புகளுக்கு வித்திடக்க்கூடும்.
இந்தக் கண்டுபிடிப்புகள் கவலை அளிக்கின்றன, அதிக நேரம் ஸ்க்ரீன்களை பார்ப்பதோடு தொடர்புடைய மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்று, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதுதான்.
அதேவேளையில், ஒரு நல்ல செய்தியும் உள்ளது. தொழில்நுட்பம் உடலை எதிர்மறையாகப் பாதிக்கக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், இந்த அபாயங்களைக் குறைக்க, ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நடைமுறைக்கு ஏற்ற சில நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

பட மூலாதாரம், Getty Images
வடிவம் மாறிய முதுகெலும்புகள்
நீங்கள் இந்தக் கட்டுரையை கைபேசியில் படித்துக் கொண்டிருந்தால், உங்கள் தலை திரையைப் பார்ப்பதற்காகக் கீழே குனிந்த நிலையில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
"ஃபார்வர்ட் ஹெட் போஸ்ச்சர்" (forward head posture) அல்லது தலை முன்னோக்கிச் சாய்ந்திருக்கும் நிலை என்று அழைக்கப்படும் இந்த நிலை, உங்கள் கழுத்தின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில், இது கழுத்தின் மீது 27 கிலோ வரையிலான எடையின் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.
நீண்ட காலத்திற்கு நீடிக்கும் இந்தத் தொடர்ச்சியான அழுத்தம், முதுகெலும்பில் உள்ள வட்டுகளைச் சேதப்படுத்தலாம், மூட்டுகள் மற்றும் தசைகளைத் தேய்மானம் அடைய வைக்கலாம், சுவாசிக்கும்போது நுரையீரல்கள் முழுமையாக விரிவடையும் திறனைக்கூட குறைக்கலாம். டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாட்டால் இந்தப் பிரச்னை மிகவும் பொதுவானதாகிவிட்ட காரணத்தால், இது பெரும்பாலும் "டெக் நெக்" (tech neck) என்று அழைக்கப்படுகிறது.
இந்த நிலை பல ஆண்டுகளாகத் தொடர்ந்தால், அது உங்கள் உடலின் இயற்கையான வடிவத்தையும் தோற்றத்தையும் படிப்படியாக மாற்றக்கூடும். குறிப்பிட்ட சில பயிற்சிகள் இந்த நிலையைச் சரிசெய்ய உதவக்கூடும்; ஆனால், அவற்றை மருத்துவர் அல்லது தகுதியுள்ள சுகாதார நிபுணரின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே செய்ய வேண்டும்.
நீங்கள் உடனடியாகப் பின்பற்றத் தொடங்கக்கூடிய சில எளிய பழக்க வழக்கங்களும் உள்ளன. மிகவும் எளிதான தீர்வுகளில் ஒன்று, கைபேசியைப் பார்ப்பதற்காக கழுத்தைக் கீழே குனிவதற்குப் பதிலாக, அதைச் சற்று உயர்த்திப் பிடிப்பது.
திரையை உங்கள் கண் மட்டத்திலும், முடிந்தவரை உங்கள் முகத்தில் இருந்து ஒரு கை நீளம் இடைவெளியிலும் வைத்துக்கொள்ள வேண்டும். கணினியைப் பயன்படுத்தும்போதும் இதே அறிவுரை பொருந்தும். அதாவது, கணினித் திரையும் உங்கள் கண் மட்டத்தில் அமைந்திருக்க வேண்டும்.
திரையைப் பார்ப்பதில் இருந்து அவ்வப்போது இடைவேளை எடுக்குமாறும் சில நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். கழுத்து, கண்கள் மற்றும் உடலின் மீதான அழுத்தத்தைக் குறைக்க, ஒவ்வொரு 30 நிமிட திரை பயன்பாட்டிற்குப் பிறகும் 20 நிமிட இடைவேளை எடுப்பது ஒரு சிறந்த ஆலோசனை.

பட மூலாதாரம், Getty Images
தோல் எரிச்சல், சுருக்கங்கள் விழுந்த கழுத்து
சமீபகாலமாக மற்றொரு கவலைக்குரிய விஷயம் பரவலாகப் பேசப்படுகிறது. "டெக் நெக்" என்று அழைக்கப்படும், செல்போன்கள் மற்றும் பிற சாதனங்களைப் பார்க்கத் தொடர்ந்து தலையைக் குனிந்து வைத்திருக்கும் பழக்கம், கழுத்தில் சுருக்கங்களை ஏற்படுத்துமா?
பிரிட்டனின் ராயல் காலேஜ் ஆஃப் ஃபிசிஷியன்ஸின் உறுப்பினரும், தோல் மருத்துவ ஆலோசகருமான மருத்துவர் ஜஸ்டின் ஹெக்ஸ்டால் கருத்துப்படி, கோட்பாட்டளவில் இது சாத்தியமே.
"கோட்பாட்டளவில் இது நியாயமானதாகவே தோன்றுகிறது" என்று அவர் கூறுகிறார். அவரது கூற்றுப்படி, தோலின் மீது மீண்டும் மீண்டும் ஏற்படும் அழுத்தம் சுருக்கங்களுக்கு வழிவகுக்கும். எனவே, செல்போனை பயன்படுத்தும்போது அடிக்கடி தலையை முன்னோக்கி வளைப்பதும், கழுத்தை மடித்த நிலையில் வைத்திருப்பதும் காலப்போக்கில் சுருக்கங்கள் உருவாகக் காரணமாக அமையலாம்.
இருப்பினும், இந்தத் தொடர்பை உறுதிப்படுத்தும் வலுவான அறிவியல் சான்றுகள் எதுவும் தற்போது இல்லை என்பதையும் மருத்துவர் ஹெக்ஸ்டால் சுட்டிக்காட்டுகிறார்.
அதனால், "டெக் நெக்" பிரச்னைக்காகவே பிரத்யேகமாகச் சந்தைப்படுத்தப்படும் தோல் பராமரிப்புப் பொருட்களுக்காக பணத்தைச் செலவிட வேண்டாம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
செல்போன்களுக்கும் கழுத்துச் சுருக்கங்களுக்கும் இடையிலான தொடர்பு இன்னும் உறுதியாகாத நிலையில், தொழில்நுட்பம் சார்ந்த பிற தோல் பிரச்னைகள் குறித்தும் மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
குறிப்பாக, நாள் முழுவதும் ஸ்மார்ட்வாட்ச் கழற்றாமல் அணிந்து இருப்பவர்களுக்கு இது பொருந்தும். ஸ்மார்ட்வாட்ச்சின் கீழ் பாகத்தில் ஒட்டியிருக்கும் தோல் பகுதி வெப்பமாகவும், இருட்டாகவும், ஈரப்பதத்துடனும் மாறக்கூடும் என்றும், இது 'ஈஸ்ட்' பூஞ்சை வளர ஏதுவான சூழலை உருவாக்குவதாகவும் அவர் விளக்குகிறார்.
இதன் விளைவாக, சிலருக்குத் தோல் எரிச்சல் அல்லது எக்ஸிமா (eczema) போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்; எக்ஸிமா என்பது தோலில் அரிப்பு, சிவப்பு நிறம் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நிலை. தோல் பாதிக்கப்படும்போது, தொழில்நுட்பப் பொருட்களில் பொதுவாகக் காணப்படும் சில பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அது அதிக உணர்திறன் கொண்டதாக மாறக்கூடும் என்றும் மருத்துவர் ஹெக்ஸ்டால் கூறுகிறார்.
இவற்றில் நிக்கல், ரப்பர், லேடெக்ஸ், அக்ரிலேட்டுகள் எனப்படும் வேதிப்பொருட்களின் குழு ஆகியவை அடங்கும். நல்ல விஷயம் என்னவென்றால், இந்தப் பிரச்னைகளைத் தடுப்பது மிகவும் எளிது.
ஸ்மார்ட்வாட்ச்சை தொடர்ந்து அணியாமல் அவ்வப்போது கழற்றி வைப்பதையும், அதன் அடியிலுள்ள உங்கள் தோல் பகுதியைக் கழுவிச் சுத்தம் செய்வதையும் உறுதி செய்யுமாறு மருத்துவர் ஹெக்ஸ்டால் பரிந்துரைக்கிறார்.
நாள் முழுவதும் ஸ்மார்ட்வாட்ச்சை அணியத் திட்டமிட்டிருந்தால், தோல் எரிச்சலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள உதவும் 'பேரியர் கிரீம்' (barrier cream) வகையைப் பயன்படுத்துமாறும் அவர் ஆலோசனை வழங்குகிறார்.

பட மூலாதாரம், Getty Images
கண் பார்வை மங்குமா?
உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக, 'மையோபியா' எனப்படும் கிட்டப்பார்வை குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
மக்கள் இப்போது தொலைபேசிகள், கணினிகள் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதில் அதிக நேரத்தைச் செலவிடுவதால், இந்த அதிகரிப்புக்குத் தொழில்நுட்பமே முக்கியக் காரணம் என்று பலர் கருதுகின்றனர்.
அமெரிக்காவின் ஓஹையோ மாகாண பல்கலைக்கழகத்தின் கண் மருத்துவப் பேராசிரியரான டொனால்ட் முட்டியின் கருத்துப்படி, தொழில்நுட்பத்திற்கு இதில் ஒரு பங்கு உள்ளது என்றாலும், அது பெரும்பாலானோர் நினைக்கும் விதத்தில் இல்லை.
அதுகுறித்துப் பேசிய முட்டி, "நாங்கள் குழந்தைகளின் கண் வளர்ச்சி குறித்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நீண்டகால ஆய்வை மேற்கொண்டோம். அதில் கிட்டப்பார்வை குறைபாடு தொடங்குவதற்கும் அது தீவிரமடைவதற்கும் காரணமான ஆபத்துக் காரணிகளை ஆராய்ந்தோம்."
அவர்கள் விடை காண விரும்பிய முக்கியக் கேள்விகளில் ஒன்று, வாசித்தல் அல்லது ஸ்மார்ட்போனை பயன்படுத்துதல் போன்ற முகத்திற்கு மிக அருகில் உள்ளவற்றைப் பார்க்க வேண்டிய செயல்பாடுகள் கிட்டப்பார்வை குறைபாட்டிற்குக் காரணமா என்பதுதான்.
அந்த ஆய்வின் முடிவுகள், "அப்படியில்லை" என்ற விடையே கிடைத்ததாக முட்டி கூறினார். அவரது கூற்றுப்படி, மிக அருகில் வைத்துச் செய்யப்படும் வேலைகள் மட்டுமே கிட்டப்பார்வை குறைபாட்டிற்கான முக்கியக் காரணம் என்பதற்கான சான்றுகள் மிகக் குறைவாகவே இந்த ஆய்வில் கிடைத்தன.
இருப்பினும், ஆராய்ச்சியாளர்கள் மற்றொரு முக்கியமான காரணத்தைக் கண்டறிந்தனர். வெளியில் அதிக நேரம் செலவிடுவது குழந்தைகளின் கண் பார்வையைப் பாதுகாக்க உதவுவதாக அவர்கள் கண்டறிந்தனர்.
"வெளியில் உள்ள பிரகாசமான வெளிச்சம், கண்ணின் விழித்திரையில் இருந்து டோபமைன் என்ற வேதிப்பொருள் சுரப்பதைத் தூண்டுவதே இதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது" என்று முட்டி விளக்கினார்.
செல்போன்களும் கணினிகளும் கிட்டப்பார்வை குறைபாட்டை நேரடியாக ஏற்படுத்தாமல் இருக்கலாம் என்றாலும், தொழில்நுட்பம் மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக முட்டி நம்புகிறார்.
மக்கள் இப்போது டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்திக்கொண்டு வீட்டுக்கு உள்ளேயே அதிக நேரத்தைச் செலவிடுவதால், இயற்கையான பகல் வெளிச்சத்தில் வெளியில் செலவிடும் நேரம் குறைந்துவிட்டது.
அவரது கருத்துப்படி, வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், கிட்டப்பார்வை குறைபாடு மிகவும் பரவலானதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். "இதற்கான தீர்வு எளிமையானது என்பதுதான் மகிழ்ச்சியான செய்தி" என்று முட்டி கூறுகிறார். தினமும் வெளியில் அதிக நேரம் செலவிடுமாறு அவர் பரிந்துரைக்கிறார்.
வெளியில் இருப்பது கண்களுக்கு நன்மை பயப்பது மட்டுமின்றி, நன்றாகத் தூங்குவதற்கும் உதவக்கூடும் என்று அவர் கூறுகிறார். அதேநேரம், தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தையும் கண்களையும் பாதுகாக்க, வெயிலில் இருக்கும்போது சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது, சன்கிளாஸ் அணிவது போன்ற முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் அறிவுறுத்துகிறார்.

பட மூலாதாரம், Getty Images
பலவீனமான கைகள்
ஒரு பொருளை எவ்வளவு வலிமையாகப் பிடிக்கவோ, அழுத்தவோ முடிகிறது என்பதைக் குறிக்கும் பிடிமானம் அல்லது கையின் பிடிப்பு வலிமை (grip strength), ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் முக்கிய அறிகுறியாகக் கருதப்படுகிறது.
உண்மையில், ரத்த அழுத்தத்தை விடவும் ஒருவரின் முன்கூட்டியே இறப்பதற்கான அபாயத்தை 'பிடிப்பு வலிமை' சிறப்பாகக் கணிக்கக்கூடும் என்று ஓர் அறிவியல் ஆய்வு கண்டறிந்துள்ளது.
இருப்பினும், பல நாடுகளில், குறிப்பாக இளைஞர்களிடையே, இந்தப் பிடிப்பு வலிமை குறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஜெர்மனியில் உள்ள லௌசிட்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ சமூகவியல் பேராசிரியரான ஜோஹன்னஸ் பெல்லர், இந்தப் போக்கு கவலைக்குரியது என்று கூறுகிறார்.
"தலைமுறை ரீதியாக ஏற்படும் இந்த வீழ்ச்சி என்பது வெறும் கைகளின் பலவீனம் மட்டுமல்ல; இது இளம் தலைமுறையினரின் எதிர்கால ஆரோக்கியம் குறித்த ஆரம்பக்கட்ட எச்சரிக்கை அறிகுறியாகவும் இருக்கலாம்," என்று அவர் கூறுகிறார்.
"கணினி சார்ந்த மற்றும் ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் வேலைகளுக்கு மாறுவது உடல் தகுதி குறைவதற்கு ஒரு முக்கியக் காரணமாக அமைவதாகவும்," இது பிடிப்பு வலிமையை பாதிக்கக்கூடும் என்றும் அவர் கூறுகிறார்.
உங்கள் பிடிப்பு வலிமையைச் சோதிப்பதற்கான எளிய வழி ஒன்றை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஒரு டென்னிஸ் பந்தை உங்களால் முடிந்தவரை வலிமையாக அழுத்தி, சுமார் 15 முதல் 30 விநாடிகள் வரை அப்படியே வைத்திருக்க முடிய வேண்டும். இதைச் செய்வது கடினமாக இருந்தால், கைகள் மற்றும் முன்கைகளை வலுப்படுத்த 'ரிஸ்ட் கர்ல்ஸ்' (wrist curls) போன்ற பயிற்சிகளைச் செய்யலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.
இருப்பினும், இது வெறும் பிடிப்பு வலிமையை மேம்படுத்துவது பற்றியது மட்டுமல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் உண்மையான நோக்கம் உங்கள் ஒட்டுமொத்த உடல் தகுதியை மேம்படுத்துவதே.
எளிதாகக் கூறுவதெனில், ஜிம் செல்வது அல்லது முறையான உடற்பயிற்சி நடைமுறையைப் பின்பற்றுவது போன்ற வழக்கமான உடற்பயிற்சி மற்றும் வலிமைப் பயிற்சிகள், பிடிப்பு வலிமை, பொதுவான ஆரோக்கியம் என இரண்டையும் மேம்படுத்த உதவும்.

பட மூலாதாரம், Getty Images
கைகள், கண்கள் இடையிலான ஒருங்கிணைப்பு
தொழில்நுட்பம் நமது இயக்கத் திறன்களை பாதிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இயக்கத் திறன்கள் என்பவை மூளையும் உடலும் இணைந்து துல்லியமான அசைவுகளைச் செய்ய உதவும் திறன்களாகும்.
ஜெர்மனியில் உள்ள ரெஜென்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி உளவியல் மற்றும் கல்வித் துறைப் பேராசிரியரான செபாஸ்டியன் சுகேட் கருத்துப்படி, டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவது மவுஸை கிளிக் செய்வது அல்லது தொடுதிரையில் ஸ்வைப் செய்வது போன்ற சில திறன்களை மேம்படுத்தலாம்.
இருப்பினும், "பரந்த அளவிலான இயக்கத் திறன் வளர்ச்சியை, குறிப்பாக நுணுக்கமான இயக்கத் திறன் வளர்ச்சியைப் பார்த்தால், அதற்கான சான்றுகள் எதிர்மறையான தாக்கத்தையே சுட்டிக்காட்டுகின்றன" என்று அவர் கூறுகிறார்.
பெரியவர்களைவிட குழந்தைகளிடம் ஏற்படும் இத்தகைய தாக்கங்கள் குறித்து ஆய்வாளர்கள் தற்போது அதிகத் தகவல்களை அறிந்துள்ளனர்.
குழந்தைகளிடம் அதிகநேரம் திரையைப் பார்ப்பதற்கும், மோசமான இயக்கத் திறன்களுக்கும் இடையே உள்ள தொடர்பை சுகேட் மேற்கொண்ட ஆராய்ச்சியும் கண்டறிந்துள்ளது.
இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று அவர் கூறுகிறார். ஏனெனில், "குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரிடையே நல்ல இயக்கத் திறன்களுக்கும், சிறந்த சிந்தனைத் திறன், கற்றல் மற்றும் கல்விசார் செயல்பாடுகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதை" ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
இத்தகைய கவலைகள் இருந்தபோதிலும், மக்கள் பீதியடைய வேண்டுமென்றோ அல்லது திரைகளைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்றோ சுகேட் கருதவில்லை. அதற்குப் பதிலாக, அன்றாட வாழ்வில் கைகளைப் பயன்படுத்தும் செயல்பாடுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
அவரது கூற்றுப்படி, சமைத்தல், வரைதல், ஓவியம் வரைதல் அல்லது பிற கலை மற்றும் கைவினைப் பணிகள் போன்ற நீண்ட நேரம் கைகளைப் பயன்படுத்த வேண்டிய செயல்பாடுகள் இயக்கத் திறன்களை மேம்படுத்த உதவும்.
தானும் மரவேலை செய்வதில் ஆர்வம் கொண்டவர் என்கிறார் சுகேட். இசைக் கருவி வாசிக்கக் கற்றுக் கொள்வது அல்லது தட்டச்சு செய்வதற்குப் பதிலாகக் கையால் எழுதுவதில் அதிக நேரம் செலவிடுவது போன்றவற்றையும் அவர் பரிந்துரைக்கிறார்.
"இது ஒன்றும் உலகமே முடிந்து விடுவது போன்ற விஷயமல்ல. இவை நுட்பமான தாக்கங்களே."
இருப்பினும், அவர் ஒரு முக்கியமான எச்சரிக்கையையும் விடுக்கிறார். "தனிநபர் அளவில் தாக்கங்கள் மிதமானதாகவோ அல்லது குறைவாகவோ இருந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், தலைமுறைகள் கடந்து, சமூகம் அறிவுத்திறன் குறைவான நிலையை நோக்கிச் செல்வதையும், நிஜ உலகில் சிந்திக்கும் திறனை இழப்பதையும் எதிர்கொள்ளலாம். ஏனெனில், உலகுடனான நமது தொடர்பில் கைகள் மிக முக்கியமான மையப் புள்ளியாகத் திகழ்கின்றன."
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























