சீனாவில் கொரோனா தாக்கம் உச்சம் - ஒரே மாதத்தில் 60,000 பேர் உயிரிழப்பு

பிரசுரிக்கப்பட்டது

சீனாவில் கடந்த ஒரே மாதத்தில் 60,000 பேர் கொரோனா தொடர்புடைய பாதிப்புகளால் உயிரிழந்துள்ளனர். சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி(Zero Covid Policy) கைவிடப்பட்ட பிறகு வெளியிடப்பட்டுள்ள மிகப்பெரிய உயிரிழப்பு விவரம் இது. மருத்துவமனைகளும் தகன மேடைகளும் நிரம்பி வழிந்த காட்சிகள் அப்பட்டமாக வெளியான போதிலும்கூட, கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளைக் குறைத்தே காட்டியதாக சீனா மீது குற்றம் சாட்டப்பட்டது. தற்போது சீன அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்படி, அங்கு டிசம்பர் 8 முதல் ஜனவரி 12 வரை கொரோனா தொடர்பான பாதிப்புகளால் 59,938 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் 80 வயதைக் கடந்தவர்கள்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட சுவாசப் பிரச்னையால் 5,503 பேரும், ஏற்கெனவே இருந்த உடல்நலப் பிரச்னைகளுடன் கொரோனா பாதிப்பும் சேர்ந்து கொண்டதால் 54,435 பேரும் பலியாகியுள்ளனர். மருத்துவமனைகளில் பதிவான உயிரிழப்புகளை மட்டுமே இந்தத் தரவுகள் காட்டுவதால், உண்மையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. கொரோனா உயிரிழப்புகளைப் பதிவு செய்யும் நடைமுறையை சீனா கடந்த மாதம் மாற்றியது. அதன்படி, கொரோனா வைரஸ் பாதிப்பால் வரும் சுவாசப் பிரச்னைகள் காரணமாக உயிரிழந்தவர்கள் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்ததாக கணக்கில் கொள்ளப்படுவர். "கொரோனா உயிரிழப்பை கணக்கிடுவதில் சீனா கடைபிடிக்கும் நடைமுறை மிகவும் குறுகலானது," என்று உலக சுகாதார அமைப்பு விமர்சித்துள்ளது. ஆனால் சீனாவோ, தனது புள்ளிவிவரங்கள் மிகவும் துல்லியமானவை என்றே எப்போதும் வாதிடுகிறது.

ஜனவரி மாத தொடக்கத்தில் தீவிர கோவிட் பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை உச்சத்தில் இருந்ததாக சீன அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், தற்போதும் அந்த எண்ணிக்கை மிக அதிகமாகவே இருக்கிறது. கிராமப்புறங்களில் தொடர்ந்து கண்காணித்து, கொரோனா பாதிப்பை விரைந்து கண்டுபிடித்து, மோசமான பாதிப்புக்கு எளிதில் இலக்காகக் கூடிய நபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிகிச்சை அளிப்பதைத் தொடர்வோம் என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: