You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பில் 8 பேர் பலி - அமித் ஷா கூறியது என்ன?
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே திங்கட்கிழமை மாலை காரில் வெடிப்பு ஏற்பட்டதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாக டெல்லி போலீஸ் செய்தி தொடர்பாளர் சஞ்சய் தியாகி கூறியுள்ளார்.
மாலை 6:55 மணிக்கு இந்த வெடிப்பு தொடர்பாக தங்களுக்கு ஒரு அழைப்பு வந்ததாக தீயணைப்பு சேவை பிபிசியிடம் உறுதிப்படுத்தியது.
செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே ஒரு காரில் வெடிப்பு ஏற்பட்டதாக தகவல் வந்தது என அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.
வெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சுமார் 6 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. அருகே நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதமடைந்தன.
7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டதாக தீயணைப்புத் துறை கூறுகிறது.
டெல்லி காவல் ஆணையர் கூறியது என்ன?
டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்ச்சா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ''செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே மாலை 6.52 மணிக்கு கார் ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் அதில் பயணிகள் இருந்தனர்'' என கூறியுள்ளனர்.
"வெடிப்பு அருகிலுள்ள வாகனங்களையும் சேதப்படுத்தியது. எங்களுக்குத் தகவல் கிடைத்தவுடன், டெல்லி போலீஸ், என்ஐஏ மற்றும் என்எஸ்ஜி குழுக்கள் உள்ளிட்ட அனைத்து புலனாய்வு அமைப்புகளும் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை மதிப்பிட்டு வருகின்றன. வெடிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.
"இந்த சம்பவத்தில்சிலர் இறந்துள்ளனர். இது குறித்து உள்துறை அமைச்சருக்கும் தொடர்ந்து தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. நிலைமை என்னவாக இருந்தாலும், விரைவில் உங்களுக்குத் தெரிவிப்போம்" என்றார் சதீஷ் கோல்ச்சா.
''இந்த வெடிப்பு ஒரு ஹூண்டேய் i20 காரில் ஏற்பட்டதாகும். அதில் மூன்று பேர் பயணித்துக் கொண்டிருந்தனர்'' என டெல்லி போலீஸ் செய்தி தொடர்பாளர் சஞ்சய் தியாகி பிபிசியிடம் கூறினார்.
நேரில் பார்த்தவர் கூறியது என்ன?
வெடிப்பை நேரில் கண்டவர்கள் தங்கள் அதிர்ச்சியை பகிர்து கொண்டுள்ளனர்.
"நாங்கள் தீப்பற்றி எரிவதை பார்த்தோம்... நான் அதை என் மொட்டை மாடியில் இருந்து பார்த்தேன். அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பார்க்க கீழே வந்தேன். வெடிப்பு ஏற்பட்டபோது மிகவும் பலத்த சத்தம் கேட்டது. கட்டடத்தின் ஜன்னல் அதிர்ந்தது'' என அருகில் வசிக்கும் ராஜ்தர் பாண்டே ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
''வெடிப்பு நடந்தபோது நான் கடையில் அமர்ந்திருந்தேன். திடீரென்று பலத்த வெடிப்பு சத்தம் கேட்டது. என் வாழ்க்கையில் இதுவரை இவ்வளவு பெரிய வெடி சத்தத்தை கேட்டதில்லை. நான் மூன்று முறை விழுந்தேன். இதற்குப் பிறகு, அருகில் இருந்த அனைவரும் ஓடத் தொடங்கினர்" என்று செங்கோட்டை பகுதியில் கடை வைத்திருக்கும் ரெஹ்மான் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்
பிரதமர் மோதி கூறியது என்ன?
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த வெடிப்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோதி இரங்கல் தெரிவித்தார்.
அவரது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியான பதிவில், "டெல்லியில் இன்று மாலை நடந்த வெடிப்பில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர்" என்று அவர் கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற அதிகாரிகளுடன் நிலைமையை மதிப்பாய்வு செய்ததாக பிரதமர் மோதி கூறினார்.
அமித் ஷா கூறியது என்ன?
வெடிப்பைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று பார்வையிட்டார். லோக்நாயக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் அவர் நேரில் சந்தித்தார்.
தொடர்ந்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "செங்கோட்டை அருகே உள்ள சுபாஷ் மார்க் போக்குவரத்து சிக்னலில் இன்று மாலை 7 மணியளவில் i20 கார் வெடித்தது. இந்த வெடிப்பில் அருகிலுள்ள சில வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆரம்பகட்ட தகவலின்படி, உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன" என்று அமித் ஷா கூறினார்.
"வெடிப்பு குறித்த தகவல் கிடைத்த பத்து நிமிடங்களுக்குள் டெல்லி குற்றப்பிரிவு மற்றும் டெல்லி சிறப்புப் பிரிவு (காவல்துறை) குழுக்கள் சம்பவ இடத்தை அடைந்தன. NSG மற்றும் NIA குழுக்கள், உள்துறை அமைச்சகத்தின் தடயவியல் குழுவினருடன்(FSL) உடன் இணைந்து, தற்போது முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளன. அருகில் உள்ள அனைத்து CCTV கேமராக்கள் மற்றும் பிற உபகரணங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
"நான் டெல்லி காவல் ஆணையர் மற்றும் சிறப்புப் பிரிவு பொறுப்பாளரிடம் பேசினேன்; அவர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர். அனைத்து சாத்தியக் கூறுகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், மேலும் அனைத்து சாத்தியக்கூறுகளையும் மனதில் கொண்டு முழுமையான விசாரணை நடத்தப்படும்" என்று அவர் கூறினார்.
ராகுல் காந்தி கூறியது என்ன?
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவு ஒன்றில்,"டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கார் வெடிப்புச் செய்தி மிகுந்த வருத்தத்தையும் கவலையையும் அளிக்கிறது. இந்த துயர விபத்தில் பல அப்பாவி உயிர்களை இழந்தது மிகுந்த துயரத்தை அளிக்கிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.
"இந்த துயரமான நேரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த துயருற்ற குடும்பத்தினருடன் நான் நிற்கிறேன், மேலும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய விரும்புகிறேன்" எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
செங்கோட்டை எங்கு உள்ளது?
செங்கோட்டை டெல்லியின் பிரதான பகுதியில் அமைந்துள்ளது.
புகழ்பெற்ற செங்கோட்டை டெல்லியில் அமைந்துள்ள ஒரு முக்கிய வரலாற்று சின்னமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தினமும் ஆயிரக்கணக்கில் இந்த 17ஆம் நூற்றாண்டு நினைவுச் சின்னத்தை பார்வையிட வருகின்றனர்.
இது நாடாளுமன்றத்திலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்திலும் மிகவும் பரபரப்பாக இருக்கும் சாந்தினி சௌக் வணிகப் பகுதியிலிருந்து சில மீட்டர்கள் தூரத்திலும் அமைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி, இந்திய பிரதமர் இக்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு