மகளிர் உலகக்கோப்பை: அரையிறுதியில் இந்திய அணி - தொடர் தோல்விகளிலிருந்து மீண்டது

    • எழுதியவர், எலிசபெத் போட்சர்பி
    • பதவி, பிபிசி விளையாட்டு செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

நவி மும்பையில் நடந்த மகளிர் உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

தொடர்ச்சியாக மூன்று தோல்விகளைச் சந்தித்த இந்தியா, இந்த போட்டிக்குச் செல்லும் முன் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழக்கக் கூடிய அபாயத்தில் இருந்தது.

நான்கு புள்ளிகளுடன் இந்தியாவுக்குச் சமமாக இருந்த நியூசிலாந்தின் பயணம் மழையால் பாதிக்கப்பட்டது. முதல் மூன்று ஆட்டங்களில் ஒன்றை வென்ற பின்னர், அடுத்த இரண்டு ஆட்டங்கள் மழையால் ரத்து செய்யப்பட்டன.

இந்த ஆட்டத்திலும் மழை சிறிது நேரம் இடையூறாக இருந்தது. இந்தியா ஆடிய இன்னிங்ஸின் இறுதியில் 90 நிமிட தாமதம் ஏற்பட்டதால், ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் மழையால் தடை ஏற்பட்டது, இதனால் நியூசிலாந்தின் இலக்கு 44 ஓவர்களில் 325 ரன்களாக மாற்றப்பட்டது.

ஆனால்,நியூசிலாந்து இலக்கை எட்ட தவறியநிலையில், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் அரையிறுதியில் இணைய தேவையான இரண்டு புள்ளிகளை இந்தியா எளிதாகப் பெற்றது.

பிரதிகா ராவல் (134 பந்துகளில் 122) மற்றும் ஸ்மிருதி மந்தனா (95 பந்துகளில் 109) ஆகியோரின் சதங்கள் இந்தியாவை 340/3 என மிகப்பெரிய ஸ்கோருக்குக் கொண்டு சென்றது. இதற்குப் பதிலாக நியூசிலாந்து 271/8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

நியூசிலாந்தும் இலங்கையும் தங்களின் கடைசி குரூப் போட்டிகளில் வெற்றி பெற்று, இந்தியா வங்கதேசத்திடம் தோற்றால்கூட, ஆறு புள்ளிகளுடன் இந்தியாவுடன் சமமாக மட்டுமே வர முடியும். ஆனால், இந்தியா ஏற்கனவே மூன்று வெற்றிகளைப் பெற்றுள்ளதால், அந்த சாதனையை மற்ற அணிகள் சமப்படுத்த முடியாது.

மந்தனாவும் ராவலும் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு எவ்வித வாய்ப்பும் தராமல், முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்தனர். பின்னர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் வெறும் 55 பந்துகளில் 76 ரன்களை அடித்து, இந்தியாவை இந்த தொடரின் அதிகபட்ச ஸ்கோருக்கு அழைத்துச் சென்றார்.

பதிலுக்கு நியூசிலாந்து அணி தனது திறனைக் காட்ட முனைந்தபோது, அனுபவமிக்க சுசி பேட்ஸ் மற்றும் கேப்டன் சோஃபி டெவைன் இருவரும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்ததால் அணி 59 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

இருப்பினும், மிடில் ஆர்டரில் ப்ரூக் ஹாலிடே மற்றும் இஸி கேஸ் அரைசதங்களை அடித்தனர், குறிப்பாக கேஸ் 39 பந்துகளில் வேகமான அரைசதம் அடித்தார். ஆனால் அவர்களின் முயற்சி போதவில்லை. நியூசிலாந்து கடைசிவரை போராடியபோதும் தோல்வியடைந்தது.

பேட்டிங்கில் விளாசிய இந்தியா

இது இரு அணிகளுக்கும் கட்டாயம் வெல்ல வேண்டிய போட்டியாக இருந்தது. ஆனால், அதிக அழுத்தம் இந்தியா மீது தான் இருந்தது. மகளிர் உலகக் கோப்பையை முதன்முறையாக கைப்பற்றும் கனவுடன், சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துடன் சேர்ந்து பட்டத்தை வெல்லும் கனவுடன் இந்தியா களம் இறங்கியது.

இலங்கை மற்றும் பாகிஸ்தானை எளிதாக வீழ்த்திய இந்தியா தனது ஆட்டத்தைச் சிறப்பாக தொடங்கியது.

ஆனால் அதன் பிறகு தடுமாறி, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடம் தொடர்ந்து மூன்று தோல்விகளைச் சந்தித்தது. அந்த மூன்று ஆட்டங்களிலும் வெற்றி வாய்ப்புகள் இருந்தும், தவறவிட்டது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 252 ரன்களைத் துரத்தும் போது, எதிரியை 81/5 என்ற நிலைக்குத் தள்ளியிருந்த இந்தியா, பின்னர் நாடின் டி கிளார்க்கின் ஆட்டத்தால் வீழ்த்தப்பட்டது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 330 ரன்களைப் பாதுகாக்க முடியாமல், இன்னிங்ஸின் இறுதியில் 36/6 என்ற கணக்கில் சரிந்தது. இங்கிலாந்துக்கு எதிராக கடைசி 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போதிலும்,289 ரன்களை எட்ட தவறி, 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஆனால் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்தியா தங்களது அபாரமான பேட்டிங் மூலம் வெற்றிப் பாதைக்குத் திரும்பியது.

தொடக்க வீராங்கனைகளான மந்தனாவும் ராவலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மந்தனா தொடர்ச்சியான மூன்று போட்டிகளில் 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். ராவல் இப்போது 100 ரன்கள் எடுத்துள்ளார். அதற்கு முன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 50 ரன்கள் எடுத்திருந்தார்.

இரு வீராங்கனைகளும் பவர்பிளேயின் ஆரம்பத்தில் ரோஸ்மேரி மெயர் மற்றும் ஜெஸ் கெர் ஆகியோரின் ஸ்விங்கை பொறுமையாக எதிர்கொண்டு, விளையாடினர்.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் பேட்டிங் வரிசையில் உயர்வு பெற்ற பிறகு அந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு, ரன்கள் குவித்தார்.

மொத்தத்தில், இந்திய வீராங்கனைகள் 42 பவுண்டரிகளை அடித்து, ஒரு ஓவருக்கு ஏழுக்கும் குறைவான ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

ஆனால் அதே தீவிரம் நியூசிலாந்தின் இன்னிங்ஸில் பந்து வீச்சில் காட்டப்படவில்லை.

அவர்கள் பல கேட்சுகளை இழந்தனர், எளிதாக பவுண்டரிகளை விட்டுக்கொடுத்தனர், மேலும் 12 ஓவர்களுக்குள் முதல் நான்கு பேரில் மூன்று பேரை வீழ்த்திய போதிலும் முழு அணியையும் வீழ்த்தும் ஆற்றல் வெளிப்படவில்லை.

கேஸ் கடைசியில் அதிரடியாக விளையாடினார். ஆனால் அதுவும் கடைசி நேரத்தில் நிகழ்ந்ததால், இந்தியாவுக்கு வெற்றி எளிதானது.

'நாங்கள் அதிக வாய்ப்புகள் பெற விரும்பினோம்'

"நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம். இந்த தொடரே எங்களுக்கு கடினமாகவும் விரக்திகரமாகவும் இருந்தது. மேலும் அதிக வாய்ப்புகளை எதிர்பார்த்தோம்" என நியூசிலாந்து கேப்டன் சோஃபி டெவின் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "இன்றைய ஆட்டத்திற்காக இந்தியாவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். எங்கள் வீராங்கனைகள் கடைசி வரை போராடிய விதம் எனக்கு பெருமையாக இருந்தது. முழு 50 ஓவர்களும் இருந்திருந்தால் இன்னும் நிறைய ஸ்கோர் செய்ய வாய்ப்பு இருந்திருக்கலாம். ஆனால் இப்போது மிகவும் மனம் உடைந்துள்ளோம்"என்றார்.

மேலும், "நாங்கள் 1.4 பில்லியன் மக்களைக் கொண்ட நாடுகளுக்கு எதிராக விளையாடுகிறோம். எங்களோடு வெறும் 5 மில்லியன் மக்கள் மட்டுமே உள்ளனர். அதையும் நினைவில் வைத்திருக்க வேண்டும்"என்றும் குறிப்பிட்டார்.

இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் பேசுகையில், "இது எளிதான ஆட்டமல்ல. இன்று நாங்கள் போராடிய விதத்திற்காக முழு அணிக்கும் பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஆட்டம் எவ்வளவு முக்கியமென நாங்கள் நன்றாகவே அறிந்திருந்தோம்"என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "எங்களது தொடக்கம் நன்றாக அமைந்தது. இப்போது அந்த வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டிய நேரம். பிரதிகா மற்றும் ஸ்மிருதிக்கு தனிப்பட்ட பாராட்டுக்களை கூறி கொள்கிறேன். அவர்கள் அணிக்காக பெரியளவில் பங்களித்தனர். கடந்த மூன்று தோல்விகளுக்குப் பிறகு அணி மீண்டும் எழுந்தது. ஒருவருக்கொருவர் உற்சாகமூட்டினோம்" என்றார்.

" நீங்கள் சொந்த மைதானத்தில் விளையாடும் போது எதிர்பார்ப்புகள் எப்போதும் அதிகமாக இருக்கும். இது நமது வீடு, ரசிகர்கள் நமக்காக ஆரவாரம் செய்கிறார்கள் . அதை கொண்டாட வேண்டிய நேரம் இது என்பதை நாங்கள் எப்போதுமே நினைவில் கொள்கிறோம்"என்று குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு