விராட் கோலியின் பேட்டிங் பெங்களூர் வெற்றிக்கு உண்மையிலேயே உதவியதா?

ஆர்சிபி

பட மூலாதாரம், @RCBTweets

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

டூப்பிளசிஸ், விராட் கோலியின் பேட்டிங், முகமது சிராஜ்ஜின் துல்லியமான பந்துவீச்சால், மொஹாலியில் இன்று நடந்த ஐ.பி.எல். டி20 தொடரின் 27-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கரன் பீ்ல்டிங்கைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. 175 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 18.2 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 24 ரன்களில் தோல்வி அடைந்தது.

2 ஆண்டுகளுக்குப்பின் கேப்டன் பொறுப்பு

ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பை கடந்த 2021ம் ஆண்டு துறந்தபின், 2 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின், இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணிக்கு கேப்டனாக விராட் கோலி செயல்பட்டார்.

தனக்கேஉரிய பாணியில் கோலியின் கேப்டன்ஷிப், பந்துவீச்சாளர்களை திறன்மிக்க வகையில் பயன்படுத்தியது, எந்த நேரத்தில் எந்த பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற நேர்த்தி ஆகியவை ஆர்சிபி அணி வெற்றிக்கு உதவியது.

ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸுக்கு தொடையில் தசைப்பிடிப்பு இருந்ததால், அவர் “இம்பாக்ட் ப்ளேயராக” மட்டுமே களமிறங்கி பேட்டிங் மட்டும் செய்தார். இதனால், கேப்டன் பொறுப்பை முழுமையாக விராட் கோலி கவனித்து வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

புள்ளிப்பட்டியல்

இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுவரை 5 போட்டிகளில் 3 வெற்றிகள், 2 தோல்விகளுடன் ஆர்பிசி அணி உள்ளது. நிகர ரன் ரேட் அடிப்படையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

6 புள்ளிகளுடன் 5 அணிகள் உள்ளன, நிகர ரன் ரேட் அடிப்படையில்தான் இந்த அணிகளுக்கான தரவரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அடுத்துவரும் ஆட்டங்கள் ஒவ்வொரு அணிக்கும் முக்கியமானதாக அமையும்.

சிராஜ் ஆட்டநாயகன்

ஆர்சிபி

பட மூலாதாரம், ANI

ஆர்பிசி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏனென்றால் ஆர்சிபி அணி சேர்த்த 174 ரன்கள் மொஹாலி ஆடுகளத்தில் எளிதாக சேஸிங் செய்துவிடமுடியும். ஆனால் அந்த ஸ்கோரை டிபெண்ட் செய்வதற்கு காரணமாக அமைந்தவர் சிராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

4 ஓவர்கள் வீசிய முகமது சிராஜ் 13 டாட் பந்துகளுடன், 21 ரன்கள் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.முகமது சிராஜ் வீழ்த்திய(அதர்வா, லிவிங்ஸ்டோன், பிரார், எல்லீஸ்) 4 விக்கெட்டுகளுமே ஆட்டத்துக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய விக்கெட்டுகளாகும்.

ஆர்சிபி வெற்றிக்கு குறிப்பிட வேண்டிய மற்றொரு பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கா. 4 ஓவர்கள் வீசிய ஹசரங்கா7 டாட் பந்துகளை வீசி 39 ரன்கள் கொடுத்து 2 (ஷாருக்கான், ஷார்ட்) முக்கிய விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

பவர்ப்ளேயில் ஆர்சிபி ஆதிக்கம்

ஆர்சிபி

பட மூலாதாரம், ANI

ஆர்சிபி அணி தனது பேட்டிங் பவர்ப்ளே, பந்துவீச்சு பவர்ப்ளேயில் ஆதிக்கம் செலுத்தியதே வெற்றிக்கு முக்கியக் காரணமாகும். பேட்டிங்கின்போது ஆர்சிபி அணி, பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் சேர்த்தது. அதேபோல பந்துவீச்சில், பவர்ப்ளேயில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் அணியை நெருக்கடியில் தள்ளியது.

ஆர்பிசி அணியின் ஸ்கோர் உயர்வுக்கு அணியில் உள்ள டூப்பிளசிஸ்(84), விராட் கோலி(59) ஆகிய இரு பேட்ஸ்மேன்கள் மட்டுமே பெரும்பான்மை பங்கு வகித்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிதாக ரன்களைக் குவிக்கவில்லை.

கோலி, டூப்பிளசிஸ் நங்கூரம்

ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை 16 ஓவர்கள்வரை விராட் கோலியும், டூப்பிளசிஸும் களத்தில் நங்கூரம் பாய்ச்சி 137 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால், அடுத்த 4 ஓவர்களில் அந்த அணி 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

ஆர்சிபி அணி பவர்ப்ளேயில் டூப்பிளசிஸ், கோலியின் அதிரடி ஆட்டத்தால், 59 ரன்கள் சேர்த்து 10 ரன் ரேட்டில் ராக்கெட் வேகத்தில் சென்றது. 11 ஓவர்களில் 100 ரன்களையும் எட்டியது.

மந்தமான பேட்டிங்

ஆர்சிபி

பட மூலாதாரம், ANI

இதனால் எப்படியும் 200 ரன்களை எட்டிவிடும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், பவர்ப்ளே முடிந்தபின் கோலி, டூப்பிளசிஸ் இருவருக்கும் என்ன ஆச்சு எனத் தெரியவில்லை. ராகுல் சாஹர், பிரார் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், பவுண்டரி அடிக்கமுடியாமல் திணறியதால், ரன்ரேட் சரியத் தொடங்கியது.

களத்தில் செட்டிலான இரு அனுபவமிக்க பேட்ஸ்மேன்கள் இருந்தும், ஸ்கோரை 200 ரன்களுக்கு உயர்த்த முடியவில்லை. கோலி, டூப்பிளசிஸ் இருவரும் வலுவான தொடக்கத்தை அளித்தபோதிலும், பவர்ப்ளேக்கு பின் ஏற்பட்ட மந்தமான பேட்டிங், ஸ்கோர் குறைவுக்கு காரணமாகும்.

பவர்ப்ளேயில் கோலி 19 பந்துகளில் 29 ரன்கள் என வேகமாக ஆடிய நிலையில், அடுத்த 28 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே அவரால் சேர்க்க முடிந்தது.

ஒருவேளை இப்படி இருந்திருந்தால்…

ஒருவேளை பஞ்சாப் கிங்ஸ் அணிக்குப் பதிலாக வேறு வலுவான அணி பேட் செய்திருந்தாலோ அல்லது பஞ்சாப் கிங்ஸ் அணியிலேயே யாரேனும் இரு பேட்ஸ்மேன்கள் வலுவாக களத்தில் நின்றிருந்தாலோ ஆர்சிபி அணியால் இந்த ஸ்கோரை டிபெண்ட் செய்திருப்பது கடினம்தான்.

ஏனென்றால், மொஹாலி ஆடுகளத்தில் சராசரியாக முதலில் பேட் செய்யும் அணி 190 ரன்கள் வரை அடிக்க முடியும். ஆனால், ஆர்சிபி அணி அந்த சராசரி ஸ்கோரைக் கூட எட்டவில்லை என்பதுதான் நிதர்சனம்.

தினேஷ் கார்த்திக்கிற்கு என்னாச்சு?

ஆர்சிபி

பட மூலாதாரம், BCCI

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல்(0), தினேஷ் கார்த்திக்(7) ஏமாற்றம் அளித்தனர்.

கடந்த சீசனில் ஆர்பிசி அணியில் இடம் பெற்ற தினேஷ் கார்த்திக் 300க்கும் மேற்பட்ட ரன்கள் சேர்த்து தனது இருப்பை நிலைநிறுத்தினார். ஆனால், இந்த சீசனில் இதுவரை 5 ஆட்டங்களில் ஆடிய தினேஷ் கார்த்திக் ஒரு போட்டியில்கூட சொல்லிக் கொள்ளும் வகையில் பேட்டிங் செய்யவில்லை என்பது ஏன் எனத் தெரியவில்லை.

அற்புதமான பீல்டிங்

ஆர்பிசி அணியின் பீல்டிங் குறித்து முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.இந்த ஆட்டத்தில் ஆர்சிபி வீரர்களின் பீல்டிங் மிகுந்த கட்டுக்கோப்பாக அமைந்ததால் பெரிதாக ரன்களை கோட்டைவிடவில்லை. பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் சாம் கரன், ஹர்பிரீத்சிங் இருவரையும் ரன் அவுட் ஆக்கிய சிராஜ், ஹசரங்கா இருவரின் பீல்டிங் அற்புதமாக அமைந்தது.

கேட்சை விட்ட கோலி

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஆர்சிபி வீரர்கள் ஒருபுறம் அருமையாக பீல்டிங் செய்துவர கேப்டன் பொறுப்பேற்ற விராட் கோலி, கடைசி நேரத்தில் பவுண்டரி லைனில் கேட்சை கோட்டைவிட்டதையும் குறிப்பிட வேண்டும். நல்லவேளை ஆர்சிபி வென்றுவிட்டது, ஒருவேளை தோல்வி அடைந்திருந்தால், கோலியின் பெயர் உருண்டிருக்கும்.

சிராஜ், ஹசரங்கா

ஆர்சிபி அணியின் பந்துவீச்சில் சிராஜ், ஹசரங்கா பங்களிப்பு முத்தாய்ப்பு. லிவிங்ஸ்டோன், அதர்வா இருவரின் விக்கெட்டையும் சிராஜ் வீழ்த்தி பஞ்சாப் அணிக்கு தொடக்கத்திலேயே நெருக்கடியை ஏற்படுத்தினார். இதன் மூலம் சிராஜ் இந்த ஐபிஎல் சீசனில் பவர்ப்ளேயில் 6-வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார், அது மட்டுமல்லாமல் ஊதா நிறத் தொப்பியையும் பெற்றுவிட்டார்.

சிராஜ் தனது பந்துவீச்சில் காட்டிய வேறுபாடுகள், இன்-ஸ்விங்குகள் பஞ்சாப் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக அமைந்தது. அதிலும் கடைசி நேரத்தில் டெய்லென்டர் பேட்ஸ்மேன்களுக்கு ஸ்டெம்புக்கு நேராக வீசி அவர்களை வெளியேற்றியது சிராஜ்ஜின் அனுபவத்துக்கு கிடைத்த பரிசாகும். அது மட்டுமல்லாமல் பீல்டிங்கிலும் சிராஜ் ஒரு ரன் அவுட் செய்து ஆட்டநாயகனாக ஜொலித்தார்.

பஞ்சாப் கிங்ஸ் தவறுகள்

பஞ்சாப் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை அணித் தேர்விலேயே சொதப்பிவிட்டது. அனுபவமிக்க பந்துவீச்சாளர் காகிசோ ரபாடாவை அமரவைத்துவிட்டு, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் நேத்தன் எல்லீஸைத் தேர்ந்தெடுத்தனர்.

விராட் கோலி, டூப்பிளசிஸை ஐபிஎல் தொடரில் 6 முறை ரபாடா ஆட்டமிழக்கச் செய்துள்ளார். பவர்ப்ளேயில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசக்கூடிய ரபாடாவை அமர வைத்தனர்.

2வதாக, கடந்த போட்டியில் மேட்ச்வின்னராக இருந்த சிக்கந்தர் ராசாவையும் அமரவைத்தனர். அருமையான ஃபார்மில் இருக்கும் ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசா இருந்திருந்தால் நடுவரிசை பேட்டிங் ஓரளவு பலப்பட்டிருக்கும். அணியில் லிவிங்ஸ்டன் சேர்த்ததால் பேட்டிங் வலுப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், லிவிங்ஸ்டனும் சொதப்பிவிட்டார்.

3-வதாக குஜராத் அணிக்கு எதிராக பட்டையக் கிளப்பிய ஷாருக்கானும் இந்த ஆட்டத்தில் ஏமாற்றினார். ஹசரங்கா பந்துவீச்சில், தேவையில்லாமல் இறங்கி அடிக்க முற்பட்டு, ஷாருக்கான் ஸ்டெம்பிங் ஆகி ஆட்டமிழந்தார்.

பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்

ஆர்சிபி

பட மூலாதாரம், BCCI

பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்(இம்பாக்ட் ப்ளேயர்) பிரப்சிம்ரன் சிங்(46),விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் ஷர்மா(41) இருவர் மட்டுமே ஓரளவுக்கு கவுரமான ஸ்கோரை எட்டினர். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை என்பது தோல்விக்கான முக்கியக் காரணமாகும்.

ஒரு கட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 37 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் ஜிதேஷ் ஷர்மா நல்ல ஃபார்மில் இருந்தார். இவருக்கு துணையாக யாரேனும் ஒரு பேட்ஸ்மேன் இருந்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும்.

ஆர்சிபி பந்துவீச்சாளர் சிராஜ் வீசிய 18-வது ஓவரில் பிரார், எல்லீஸ் இருவரும் ஆட்டமிழந்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது. ஒட்டுமொத்தத்தில் பஞ்சாப் அணி வீரர்களைத் தேர்வு செய்ததும், பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடாததுமே தோல்விக்கான காரணங்களாகும்.

ரபாடா ஏன் இல்லை?

அதேநேரம், பஞ்சாப் அணியின் பந்துவீச்சையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஒரு கட்டத்தில் 200 ரன்களை ஆர்சிபி அணி எட்டிவிடும் என்று கணிக்கப்பட்டநிலையில் 10 ஓவர்களுக்கு மேல் அந்த அணியின் ரன்ரேட்டுக்கு ப்ரேக் போட்டதும் கவனிக்கத்தக்கது.

இதுபுறம் இருக்க கோலி, டூப்ளிசிஸ் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய முடியாமல் 16 ஓவர்கள்வரை பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் திணறியது, அனுபவமின்மையை வெளிப்படுத்துகிறது. ரபாடா போன்ற அனுபவமிக்க பந்துவீச்சாளர்கள் களத்தில் இருந்திருந்தால், நிலைமை வேறுமாதிரியாக திரும்பி இருக்கும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: