‘ஹாரி பாட்டர்’ இனி டிவி தொடரில் - ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கவியரசு வி
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
நீங்கள் தற்போது 20 வயதை கடந்தவராக இருந்து, உங்கள் சிறு வயதில் நீங்கள் துடைப்பத்தின் மீது அமர்ந்து பறக்க முயற்சித்த நினைவோ, ஒரு குச்சியைக் கொண்டு மந்திர மாயாஜாலம் செய்ய முயற்சித்த நினைவோ இருந்தால் இந்த செய்தி நிச்சயம் உங்களுக்கானது.
2000-களில் வெளிவந்து உலகளவில் புகழ் பெற்ற ‘ஹாரி பாட்டர்’, தற்போது தொலைக்காட்சி தொடராக உருவாக உள்ளதாக மேக்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
எச் பி ஓ மேக்ஸ் தொலைக்காட்சி (HBO Max) சமீபத்தில் டிஸ்கவரி+ (Discovery+) தொலைகாட்சியுடன் தன்னை இணைத்துக்கொண்டு ‘மேக்ஸ்’ (Max) என்று தன் பெயரை மாற்றிக்கொண்டது.
இந்த இணைப்பு அறிவிக்கப்பட்ட போது, வரும் காலங்களில் மேக்ஸ் பல புதிய தொடர்களை தொடங்கப்போவதாக தெரிவித்திருந்தது.
அதில் ஒரு பகுதியாக, ஜெ.கே. ரவுளிங்கால் எழுதப்பட்டு, உலகளவில் புகழ் பெற்ற ‘ஹாரி பாட்டர்’ நாவலை தொலைக்காட்சி தொடராக உருவாக்கப்போவதாக தற்போது மேக்ஸ் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
ரவுளிங் எழுதிய 7 ஹாரி பாட்டர் நாவல்களை, வார்னர் ப்ராஸ் நிறுவனம் 8 பாகங்களைக் கொண்ட திரைப்படத்தொடராக வெளியிட்டது.
இத்திரைப்பட தொடர் உலகெங்கிலும் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், ஒரு தலைமுறையுடைய சிறந்த குழந்தைபருவ நினைவாகவே இன்றும் உள்ளது.
தற்போது அந்த நாவல்கள் 10 ஆண்டுகளுக்கான தொலைக்காட்சி தொடராய் உருவாக உள்ளது. இத்தொடர் முழுக்க முழுக்க ரவுளிங்கின் நாவலை நியாயப்படுத்துவதாக இருக்கும் என்று மேக்ஸ் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த அறிவிப்பு குறித்தும், இத்தொடர் மீதான எதிர்பார்ப்பு குறித்தும் பிபிசி தமிழிடம் ரசிகர்கள் பகிர்ந்து கொண்டனர்.
“ நான் ஹாரி பாட்டர் நாவலையும் படித்துள்ளேன்; படங்களையும் பார்த்துள்ளேன். படங்களை விட நாவல் சிறப்பாக இருக்கும். படத்தின் நீளம் கருதி பல பகுதிகளை நீக்கியிருப்பார்கள்.
தொடரில் அந்த சிரமம் இருக்காது என்று நம்புகிறேன். ஆனால் என்னதான் புதிய தொடர், புதிய தொழிற்நுட்பம் என்று சொன்னாலும், ஹாரி பாட்டர் திரைப்படங்கள் எங்கள் தலைமுறையினர் மனதில் உருவாக்கிய தாக்கத்தை ஈடு செய்ய முடியாது.
என் குழந்தை இப்போதுதான் படங்களை எல்லாம் பார்க்க தொடங்குகிறாள். அவர்களைப் போன்ற அடுத்த தலைமுறையினருக்கு வேண்டுமானால் உருவாகும் ஹாரி பாட்டர் தொடர் நிறைவைத் தரலாம்,” என்று சென்னையைச் சேர்ந்த சுகண்யா தொடரின் மீதான எதிர்பார்ப்பு பற்றி கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
"ஹாரி பாட்டர் படம் இன்று பார்த்தாலும் சலிக்காது. அதில் நாங்கள் பார்த்த கதாபாத்திரங்கள் தான் எங்கள் மனதில் நின்றவை. திரைப்படங்களில் கண்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ப, வரவிருக்கும் தொடரிலும் நடிகர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்த நிறங்கள், உடைகள் இன்றும் ஒரு காட்சியாக என் மனதில் நிற்கின்றன. தொடரில் என்ன மாற்றங்கள் செய்தாலும் அந்த நிறங்களும் உடைகளும் அப்படியே இருந்தால் சிறப்பு” என்று ஹாரி பாட்டர் திரைப்பட ரசிகரான ராம் பாலாஜி கருதுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
90-களின் இறுதியில் வெளிவர தொடங்கிய ஹாரி பாட்டர் நாவலுக்கு அன்றிலிருந்தே ஏராளமானோர் ரசிகர்களாக இருந்து வந்துள்ளனர். ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் ஹாரி பாட்டர் திரைப்படத்தினால் தான் அந்த நாவல் பிரபலமானது. அத்திரைப்படத் தொடர் உலக ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கம் அத்தனை பெரியது. அதை நியாயப்படுத்தும் வகையில் உருவாக இருக்கும் தொடர் அமையவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
இந்த தலைமுறையை கவரும் வகையிலும், அதே சமயம் நாவலை நியாயப்படுத்தும் வகையிலும் டிவி தொடர் இருக்கும் என்று வார்னர் ப்ராஸ் நிறுவனம் கூறியுள்ளது.
அதை உறுதிபடுத்துவதற்காக நாவலாசிரியர் ரவுளிங்கும் தொடரின் உருவாக்கத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாவலுக்கு ஒரு பருவம் என்ற வீதம், ஏழு நாவல்களுக்கு 7 பருவங்கள் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், அவை 10 ஆண்டுகள் ஒளிபரப்பாகும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எச் பி ஓ தொலைக்காட்சி பெரியவர்கள் அதிகம் பார்க்கும் நிகழ்ச்சிகளையும், டிஸ்கவரி+ தொலைக்காட்சி குழந்தைகள் உட்பட அனைவரும் பார்க்கும் நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வந்த நிலையில், தற்போது இரு நிறுவனங்களும் ஒன்றிணைந்துள்ளதால் இனி மேக்ஸ் தொலைக்காட்சியில் அனைவரையும் கவரக்கூடிய நிகழ்ச்சிகள் அதிகளவில் தயாரிக்கப்படலாம்.
அவ்வகையில் ஹாரி பாட்டர் தொடர் அனைத்து வகை ரசிகர்களையும் கவரக்கூடியது. கடந்த தலைமுறை ரசிகர்களின் எதிர்பார்ப்பையும், இந்த தலைமுறை ரசிகர்களின் ரசனையையும் இது நிறைவு செய்யுமா என்பது அடுத்த 10 ஆண்டுகளில் தெரியும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




























