You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவில் பனிப்புயல்: 7 மாகாணங்களில் அவசர நிலை, 2,300 விமானங்கள் ரத்து - என்ன நடக்கிறது?
கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவின் பிடியில் அமெரிக்கா உள்ள நிலையில், பனிப்புயல் காரணமாக குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கென்டக்கி, விர்ஜீனியா, கான்சஸ், உள்ளிட்ட 7 மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
2,300 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, கிட்டத்தட்ட 9,000 விமானங்கள் தாமதமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
Poweroutage.us இன் படி, பனிப்புயலின் பிடியில் உள்ள மாகாணங்களில் திங்கட்கிழமை இரவு 2,00,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு மின்சார துண்டிப்பு ஏற்பட்டது.
மோசமான வானிலை பல பகுதிகளில் சாலை போக்குவரத்தை சவாலானதாக மாற்றி உள்ளது. எனவே சாலையில் உள்ள பனிகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மிசோரியில், ஞாயிற்றுக்கிழமை குறைந்தது 365 பேர் விபத்துக்குள்ளானதாக மாநில நெடுஞ்சாலை ரோந்து பிரிவு கூறி உள்ளது. இதில் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் மற்றும் குறைந்தது ஒருவர் உயிரிழந்தார்.
மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் ஒன்றான கான்சஸில் புயலின் போது கார் விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. 32 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கான்சஸ் கடும் பனியைக் கண்டுள்ளதாக வானிலை செயலியான MyRadar-ன் மூத்த வானிலை ஆய்வாளர் மேத்யூ கேப்பச்சி பிபிசியிடம் தெரிவித்தார்.
டெக்சாஸின் ஹூஸ்டனில், திங்கள்கிழமை காலை பேருந்து நிறுத்தத்தின் முன் கடும் குளிரால் ஒருவர் இறந்து கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விர்ஜீனியாவில் திங்கள் காலை வரை 300 கார் விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இதனால் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்குமாறு உள்ளூர்வாசிகளை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மோசமான வானிலை காரணமாக அமெரிக்கா முழுவதும் பல பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
செவ்வாயன்று அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகளில் பனி மற்றும் பனிப்பொழிவு தொடரும் என்று தேசிய வானிலை சேவை கணித்துள்ளது. எனினும், இந்த வார பிற்பகுதியில் மெதுவாக குறையத் தொடங்கும் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் கூறுகின்றனர்.
வாஷிங்டன் டிசியில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றிக்கான சான்றிதழை அளிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை திட்டமிட்டபடி நடைபெறுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த நிகழ்வு நடந்து முடிந்தது.
அதே நேரம் வாஷிங்டன் நினைவுச்சின்னத்தின் முன் நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் ஒரு பூங்காவில் கூடி பனிப்பந்து சண்டையில் ஈடுபட்டனர். இது கடந்த 15 ஆண்டுகளாக பின்பற்றப்படும் பாரம்பரியமாக உள்ளது.
ஆர்க்டிக் பகுதியைச் சுற்றி வரும் குளிர்ந்த காற்றின் ஒரு பகுதியான துருவச் சுழல் காரணமாக இந்த தீவிர வானிலை ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)