மலையாள சினிமாவை உலுக்கும் நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை - தமிழ் திரையுலகினர் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை சில நாட்களுக்கு முன் வெளியானது
மலையாள சினிமாவை உலுக்கும் நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை - தமிழ் திரையுலகினர் கூறுவது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள், பதவி விலகல்கள், காவல்துறை புகார்கள், பரபரப்பு பெட்டிகள், தொடர் விவாதங்கள், என ஒரே ஒரு அறிக்கை மலையாள சினிமாத் துறையை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது.

நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை சில நாட்களுக்கு முன் வெளியானது. இதில் மலையாள திரைத்துறையில் பாலியல் சுரண்டல்கள் நிகழ்வதாக கூறுகிறது.

எனவே திரைத்துறை மட்டுமல்ல பணியிடங்களில் பெண்கள் எதிர்நோக்கும் பாலியல் தொல்லைகள் குறித்த வலுவான விவாதங்கள் எழுந்துள்ளன. ஹேமா கமிட்டி அறிக்கை என்ன சொல்கிறது? இதுகுறித்து தமிழ் திரையுலகினர் சொன்னது என்ன? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.

2017ஆம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர் காரில் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, திரையுலகில் பணிச்சூழல்கள் குறித்து ஆய்வு செய்யக் கோரி முதலமைச்சர் பினராயி விஜயனிடம் மலையாள சினிமாவில் பணிபுரியும் பெண்களுக்கான அமைப்பான ‘Women in cinema collective (WCC)’ அமைப்பினர் மனு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, அதே ஆண்டில் நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியில் மூத்த நடிகை டி.சாரதா, ஓய்வுபெற்ற கேரள முதன்மைச் செயலாளர் கே.பி. வல்சலாகுமாரி ஆகியோர் இடம்பெற்றனர்.

இந்த கமிட்டி கேரள திரைத்துறையில் பணிச்சூழல் எப்படி உள்ளது என்பதை அறிய பல்வேறு நபர்களிடம் பேசியது.

நடிகர்கள் மட்டுமல்ல, ஒளிப்பதிவாளர்கள், ஒப்பனை கலைஞர்கள், ஆடை வடிமைப்பாளர்கள் என இந்த கமிட்டி திரைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் நபர்களிடம் உரையாடியது. வீடியோ, ஆடியோ, வாட்சப் மெசேஜ்கள் என பல்வேறு வடிவங்களில் ஆதாரங்களை கமிட்டி சேகரித்தது.

இந்த கமிட்டி தனது அறிக்கையை 2019ஆம் சமர்ப்பித்தது. ஆனால் கடந்த வாரம்தான் இது பொதுவெளிக்கு வந்துள்ளது.

இந்த அறிக்கை 290 பக்கங்களைக் கொண்டது. இருப்பினும், தங்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய அல்லது சுரண்டலில் ஈடுபட்ட ஆண்களின் பெயர்களை பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியுள்ளதால், அதுதொடர்பான 63 பக்கங்கள், வெளியிடப்பட்ட அறிக்கையில் இடம்பெறவில்லை.

ஆனால் இந்த பக்கங்களை நீக்க சொன்னது யார் என்பது குறித்த தெளிவான தகவல் ஏதும் வெளியில் வரவில்லை.

மலையாள திரைத்துறையில் ‘Adjustments’ அல்லது ‘Compromise’ போன்ற வார்த்தைகள் பெண்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதாகவும் இதன்பொருள் அவர்கள் எப்போது வேண்டுமாலும் பாலியல் உறவுக்கு தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

மலையாள திரையுலகில் வலுவான கூட்டம் ஒன்று “மாஃபியா” போலச் செயல்பட்டு வருவதாகவும், முக்கியமான இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் மீது அக்குழு தடை விதிக்கும் என்றும் அந்த ஆணையத்திடம் “முக்கிய நடிகர்” ஒருவர் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

திரைத்துறை, ஆண் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், மற்றம் இயக்குநர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்கள் அதீத புகழையும் பணத்தையும் பெற்றவர்கள். குற்றத்தில் ஈடுபட்டுவர்களில் அவர்களும் உள்ளனர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திரைத்திறையில் உள்ள ஆண்கள் எந்த தயக்கமும் இன்றி பாலியல் உறவுக்கு அழைப்பர். இவ்வாறு அழைப்பதை அவர்கள் ஏதோ தங்கள் பிறப்பு உரிமை போல உணர்கிறார்கள். இம்மாதிரியான சமயங்களில் பெண்கள் மறுப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு அவ்வாறு மறுத்தால் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹேமா கமிட்டியிடம் பேசிய பெண்கள் பலர் படப்பிடிப்பு தளங்களில் துணி மாற்றும் அறையோ அல்லது கழிவறையோ கூட இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதை தீவிரமான மனித உரிமை மீறல் என ஹேமா கமிட்டி சுட்டிக்காட்டுகிறது.

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு மலையாள நடிகர் சங்கத்தின் தலைவரான மோகன்லால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அவருடன் பலரும் ராஜினாமா செய்தனர்.

அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது போன்று அனைத்தையும் தங்களின் கட்டுக்குள் வைத்திருக்கும் அதிகாரக் குழு எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.

ஹேமா கமிட்டியில் அறிக்கைக்கு மொத்த திரைத்துறையும் பதில் கூற வேண்டும். ஆனால் அம்மாவை (கேரள நடிகர் சங்கம்) மட்டுமே அனைத்திற்கும் குற்றஞ்சாட்டுகின்றனர். இதற்கு பதில் சொல்லவேண்டியது அம்மா இல்லை என்று அவர் தெரிவித்தார்.

மம்முட்டி தனது முகநூல் வாயிலாக ஹேமா கமிட்டி குறித்து கருத்து தெரிவித்திருந்தார். மோகன்லாலை போலவே அவரும் மலையாள திரைத்துறையில் அதிகாரக் குழு ஒன்றும் இல்லை என்று தெரிவித்தார்.

ஹேமா கமிட்டியின் அறிக்கையை வரவேற்ற அவர், அதில் குறிப்பிட்டிருக்கும் பரிந்துரைகளை உடனே அமல்படுத்த ஆதரவு வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

முழு விவரம் காணொளியில்.

மலையாள சினிமாத் துறையை புரட்டிப் போட்ட நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை, முழு பின்னணி என்ன?

பட மூலாதாரம், Facebook/Mohanlal

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)