You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'இரண்டாம் தர குடிமக்களாக மாற்றப்படுவோம்' - தொகுதி மறுவரையறை குறித்து ரேவந்த் ரெட்டி சொன்னது என்ன?
நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமையன்று (மார்ச் 22) சென்னையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
மொத்தம் 24 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். ஒவ்வொரு தலைவர்களின் மேஜையின் மீதும் அவர்களின் தாய்மொழி மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த கூட்டத்தில் பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, நாம் ஒரே நாடு என்பதை நாங்கள் மதிக்கிறோம், ஆனால் அரசியல் ரீதியாக தென்மாநிலங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை எதிர்க்கிறோம் என்றார்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வது, மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதி சிறப்பாக செயல்பட்டதற்காக எங்களை தண்டிக்கும் செயல் என்றார். நியாயமற்ற எந்த செயல்பாட்டையும் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.
"எங்களின் முதல் கோரிக்கை என்னவென்றால், நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது. 1976 ல் இந்திரா காந்தியும், 2001ம் ஆண்டில் பிரதமர் வாஜ்பேயி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் செய்ததைப் போன்று , பிரதமர் நரேந்திர மோடியும் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் மறுவரையறை செய்ய வேண்டும்." எனறார்.
மேலும்,"மக்கள் தொகை அடிப்படையிலான மறுவரையை தெற்கு ஏற்காது. இதனை பாஜக செய்யுமானால் தென்னிந்தியா அதன் அரசியல் வலிமையை இழக்கும். வடக்கு எங்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும். இதனை இங்கிருக்கும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்." என்று ரேவந்த் ரெட்டி கூறினார்.
இந்த கூட்டு நடவடிக்கைக் குழுவின் அடுத்த கூட்டத்தை ஐதராபாத்தில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு