You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'இந்தியா மீதான டிரம்பின் 50% வரிக்கு இதுதான் காரணம்' - ரஷ்ய ஊடகங்கள் விவாதம்
ரஷ்யாவுடனான எரிசக்தி மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மைக்காக இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக இரட்டிப்பாக்கியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டைப் பற்றி ரஷ்யா ஊடகங்களில் என்ன சொல்லப்படுகிறது? இந்த காணொளியில் பார்க்கலாம்.
5 மாதத்தில் மாறிய நிலைமை
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டு ஜனவரியில் இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற போது, ரஷ்யா குறித்த அவரது நிலைப்பாட்டைக் கண்டு மக்கள் ஆச்சரியப்பட்டனர்.
யுக்ரேன் -ரஷ்யா போரில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை ஆதரித்தது.
பிப்ரவரியில், யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்திக்க வெள்ளை மாளிகைக்கு வந்தபோது, மிகவும் மோசமாக நடத்தப்பட்டார்.
அப்போது, இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நட்பில் டிரம்புக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது என்று தோன்றியது.
ஆனால் கடந்த ஐந்து மாதங்களில் நிலைமை வேகமாக மாறிவிட்டது. டிரம்ப் இந்தியா மீது அழுத்தம் கொடுத்து, ரஷ்யாவுடன் உள்ள உறவில் இருந்து விலக்க முடியுமா என்பது குறித்த விவாதம் ரஷ்ய ஊடகங்களிலும் தீவிரமாக நடந்து வருகிறது.
அமெரிக்கா அழுத்தத்தால் இந்தியா - ரஷ்யா உறவில் விரிசல் ஏற்படுமா?
ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் (TASS) ஆகஸ்ட் 9-ஆம் தேதி அரசியல் ஆய்வாளர்களிடம் இந்தக் கேள்வியை எழுப்பியது.
டிரம்புடைய அழுத்தத்தின் கீழ் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை காட்டும் வழியை இந்தியா பின்பற்ற முடியாது என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான ஆண்ட்ரூ சுஷென்ட்சோவ் (Andrey Sushentsov) கூறினார்.
அமெரிக்காவின் இந்த கொள்கை இந்தியாவைப் பொறுத்தவரை தோல்வியடைந்துவிட்டது என்றும், அத்தகைய சூழ்நிலையில், அமெரிக்காவின் இந்த அழுத்தம் நீண்ட காலம் நீடிக்காது என்றும் அவர் கூறினார்.
"முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தியா மீதான வரியை இரட்டிப்பாக்கும் டிரம்பின் முடிவு, அவரது சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மாஸ்கோவில் அதிபர் புதினை சந்திப்பதற்கு முன்பே எடுக்கப்பட்டது. இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதால் அமெரிக்கா வரியை இரட்டிப்பாக்கியது என்பது உண்மையான காரணம் அல்ல. இந்தியா மீது அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதற்கான காரணம் வேறு " என்று டாஸ் (TASS) ஊடகத்திடம் ஆண்ட்ரூ சுஷென்கோவ் (Andrey Sushentsov) கூறினார்.
மேலும், "மக்கள் தொகை அடிப்படையில் இந்தியா உலகின் மிகப்பெரிய நாடு. இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது" எனக் கூறிய அவர், "சீனாவுடன் மோதல் ஏற்பட்டால் அமெரிக்கா இந்தியாவை ஒரு உத்தி சார்ந்த பங்காளியாகப் பார்க்கிறது" என்றார்.
"இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியா தனது தலைமையை ஏற்றுக்கொண்டு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை வலியுறுத்துவதை கைவிட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் அமெரிக்காவின் ஆசை இந்த உத்தியால் நிறைவேறாது. எனவே, இந்தியாவின் மீதான அமெரிக்க அழுத்தம் நீண்ட காலம் நீடிக்காது" என்றும் ஆண்ட்ரூ சுஷென்கோவ் (Andrey Sushentsov) கூறினார்.
ரஷ்யா சென்ற அஜித் தோவல்
ஆகஸ்ட் 6 ஆம் தேதி, டிரம்ப் இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரியை அறிவித்தார், ஆகஸ்ட் 7 ஆம் தேதி, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா சென்றார்.
ரஷ்ய அதிபர் புதினையும் அவர் சந்தித்து பேசினார். இந்த பயணத்தின் போது, இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருவார் என்று தோவல் கூறியிருந்தார்.
ரஷ்யா டுடே வெளியிட்ட செய்தியில், "ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துமாறு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்ட போது, அஜித் தோவல் ரஷ்யாவிற்குப் பயணம் செய்தார். இந்தியா-ரஷ்யா இரு நாடுகளும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது பற்றி பேசி வருகின்றன. இதில், விமான பாகங்கள் மற்றும் ரயில் உற்பத்தியில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து பேசப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுருந்தது.
அதேசமயம், ரஷ்யாவிடமிருந்து கூடுதல் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவது குறித்து தோவல் பேசியுள்ளதாக, இந்திய ஊடகங்களில் கூறப்படுகிறது. தற்போது இந்தியாவிடம் மூன்று எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் உள்ளன. இந்தியா அவற்றை ஆபரேஷன் சிந்தூரின் போது பயன்படுத்தியது.
ரஷ்ய ஊடகக் குழுவான ரோசியா செகோட்னியாவின் (Rossiya Segodnya) இயக்குநர் ஜெனரல் டிமிட்ரி கிசெலெவ் (Dmitry Kiselyov) கடந்த வாரம் வியாழக்கிழமை ஸ்புட்னிக் நியூஸிடம் (Sputnik News) கூறுகையில், "இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நட்பு இரு நாடுகளுக்கும் மிகவும் முக்கியமானது. அமெரிக்காவின் இறுதி எச்சரிக்கையின் போதும், இந்தியாவின் நிலைப்பாடு தர்க்க ரீதியானதாகவும் சமநிலையானதாகவும் இருந்தது. ரஷ்யாவுடனான உறவுகளைப் பொறுத்தவரை இந்தியா யாருடைய அழுத்தத்திற்கும் ஆளாகாது. இந்தியா மற்றும் ரஷ்யாவின் பொது மக்களும் ஒருவரையொருவர் நம்புகிறார்கள்"என்று தெரிவித்தார்.
இந்தியாவிற்கு தண்டனையா?
2008 முதல் 2012 வரை யுக்ரேனுக்கான பிரிட்டனின் தூதராக இருந்த லீ டர்னர் (Leigh Turner) ஆகஸ்ட் 11-ஆம் தேதி மாஸ்கோ டைம்ஸில் புதினுக்கும் டிரம்புக்கும் இடையில் நடக்கவிருக்கும் சந்திப்பு குறித்த பகுப்பாய்வு ஒன்றை எழுதினார்.
அதில், "முன்னர் அமெரிக்கா இந்தியாவிற்கு எதிராக 100 சதவீத வரியை விதிக்கும் என்று கூறப்பட்டது, ஆனால் இப்போது 50 சதவீத வரியை அறிவித்தது. இந்தியாவைத் தவிர, வேறு எந்த நாடும் ரஷ்ய எண்ணெயை வாங்கியதற்காக குறி வைக்கப்படவில்லை" என்று டர்னர் மாஸ்கோ டைம்ஸில் எழுதியிருந்தார்.
யுக்ரேனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்காக இந்தியாவை தண்டிப்பது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் ஒரு தலைகீழ் மாற்றம் என்று டர்னர் கருதுகிறார், ஏனெனில் முன்னதாக டிரம்ப் யுக்ரேன் அதிபரை ஒரு சர்வாதிகாரி என்று அழைத்திருந்தார்.
இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு டிரம்ப் ரஷ்யாவின் பக்கம் சாய்ந்தார்.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத் (Pete Hegseth)கூட, யுக்ரேன் 2014-க்கு முன்பு வைத்திருந்த எல்லைகளை மீண்டும் பெற முடியாது என்றும், நேட்டோவில் சேர முடியாது என்றும் கூறியிருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு