டெல்லியின் நச்சுக்காற்றால் கருப்பாகும் செங்கோட்டை; தீர்வு என்ன?

    • எழுதியவர், செரிலன் மோலன்
    • பதவி, பிபிசி நியூஸ், மும்பை
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுபாடு காரணமாக, நகரத்தின் புகழ்பெற்ற முகலாய கால நினைவுச்சின்னங்களில் ஒன்றான செங்கோட்டையின் சுவர்களில் "கருப்புப் படிமங்கள்" உருவாகியுள்ளதாக ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது.

மாசுபாட்டிற்கும், சிவப்பு மணற்கற்களால் ஆன கோட்டையின் சுவர்களுக்கும் இடையிலான வேதியியல் தொடர்புகளால் உருவான இந்த கருப்புப் படிமங்கள், 0.05 மிமீ முதல் 0.5 மிமீ வரை தடிமனாக இருப்பதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கோட்டையின் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளைச் சேதப்படுத்தக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நினைவுச்சின்னத்தின் மீது காற்று மாசுபாட்டின் விளைவுகளை விரிவாக ஆராய்ந்த முதல் ஆய்வு இதுவாகும்.

உலகின் மிக அதிகமாக மாசுபட்ட நகரங்களில் ஒன்றான டெல்லி, மோசமடைந்து வரும் காற்றுத் தரத்திற்காக அடிக்கடி, அதிலும் குறிப்பாகக் குளிர்கால மாதங்களில் செய்திகளில் இடம்பிடிக்கிறது.

தலைநகரிலும், வேறு சில மாநிலங்களிலும் உள்ள பாரம்பரியக் கட்டடங்களின் மீது மாசுபாட்டின் தீங்கு விளைவிக்கும் தாக்கம் குறித்து அடிக்கடி எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

2018-ல், வெள்ளை பளிங்குக் கல்லால் கட்டப்பட்ட புகழ்பெற்ற 17ஆம் நூற்றாண்டின் கல்லறை மாடமான தாஜ்மஹால், காற்று மற்றும் நீர் மாசுபாட்டினால் மஞ்சள் மற்றும் பச்சைக் கலந்த பழுப்பு நிறமாக மாறிவிட்டதாக உச்ச நீதிமன்றம் கூறியது. அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உத்தரப் பிரதேச மாநில அரசை அது வலியுறுத்தியது.

செங்கோட்டை குறித்த இந்த ஆய்வு, இந்தியாவிலும் இத்தாலியிலும் உள்ள ஆய்வாளர்களால் 2021 மற்றும் 2023-க்கு இடையில் நடத்தப்பட்டது. இது ஜூன் மாதம், ஹெரிடேஜ் என்ற சக ஆய்வாளர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட, திறந்த அணுகல் கொண்ட அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது.

முகலாய பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்ட செங்கோட்டை, டெல்லியின் மிக முக்கியமான பாரம்பரிய நினைவுச்சின்னங்களில் ஒன்றாகவும், பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் உள்ளது.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் அறிவிக்கப்பட்டதற்கு ஒரு நாள் கழித்து, ஆகஸ்ட் 16, 1947 அன்று இந்த கோட்டையிலிருந்து தேசியக் கொடியை ஏற்றினார். அப்போதிருந்து, பிரதமர்கள் சுதந்திர தினத்தன்று கோட்டை கொத்தளத்திலிருந்து உரையாற்றி வருகின்றனர்.

ஆய்வாளர்கள் 2021 மற்றும் 2023-க்கு இடையில் டெல்லியின் காற்றுத் தரவு விவரங்களை ஆய்வு செய்தனர். பின்னர், கோட்டையின் பல்வேறு சுவர்களில் காணப்பட்ட கருப்புப் படிமங்களை எடுத்து, அதன் கலவையை ஆய்வு செய்தனர்.

காற்றில் உள்ள நுண்துகள்கள் மற்றும் பிற மாசுபாடுகள் கோட்டையின் சுவர்களில் கருப்புப் படிமங்கள் உருவாகக் காரணமாக இருந்ததாகவும், மேலும், குவிமாடங்கள், வளைவுகள் மற்றும் நுணுக்கமான கல் சிற்பங்கள் போன்ற பிற கட்டடக் கூறுகளையும் சேதப்படுத்தியதையும் அவர்கள் கண்டறிந்தனர்.

சுவர்களில் குமிழ்கள் மற்றும் உதிர்தலுக்கான ஆதாரங்களையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

"பிஎம்2.5 மற்றும் பிஎம்10 [நுண்துகள்களின் வகைகள்] ஆகியவை திறந்த வெளியில் உள்ள மேற்பரப்புகளைக் கறைபடுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பதாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு, நுண்துகள்கள் காலப்போக்கில் படிந்து குவிந்து, இந்த மேற்பரப்புகளில் தெரியும் நிறமாற்றம் மற்றும் கறுப்பாதலுக்கு வழிவகுக்கும்" என்று ஆய்வு குறிப்பிடுகிறது.

கோட்டையைப் பாதுகாக்க, சரியான நேரத்தில் பாதுகாப்பு உத்திகளை அமல்படுத்த வேண்டும் என்று ஆய்வு பரிந்துரைக்கிறது.

"ஒரு கருப்புப் படிமம் உருவாவது ஒரு படிப்படியான நிகழ்வு. இது பொதுவாக ஒரு மெல்லிய கருப்புப் படலமாக அல்லது படிமமாக தொடங்குகிறது. இது, ஆரம்ப கட்டங்களிலாவது அகற்றப்படலாம்" என்று ஆய்வு குறிப்பிடுகிறது.

மேலும், கருப்புப் படிமங்கள் உருவாவதைத் தாமதப்படுத்த அல்லது தடுக்க, அதிக பாதிப்புக்குள்ளான பகுதிகளில் கற்களை பாதுகாக்கும் பொருட்கள் அல்லது மூடும் பொருட்களைப் பயன்படுத்தலாம் என்றும் அது கூறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு