காணொளி: ஒப்பந்தத்திற்கு பிறகு அமெரிக்கா - இரான் இடையே என்ன நடக்கிறது

காணொளி: ஒப்பந்தத்திற்கு பிறகு அமெரிக்கா - இரான் இடையே என்ன நடக்கிறது
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்கா மற்றும் இரான் இடையே கடந்த சில நாட்களாக நீடித்த பரஸ்பர தாக்குதல்களுக்கு பிறகு, இரு தரப்பும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி பதற்றத்தை தணிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

உண்மையிலேயே இரான், அமெரிக்கா இடையிலான மோதல் முடிவுக்கு வருகிறது? என்ன நடக்கிறது? சமீபத்திய தகவல்கள் இந்த காணொளியில் பார்க்கலாம்.

கடந்த சில நாட்களாக அமெரிக்கா மற்றும் இரான் இடையே நடைபெற்ற பரஸ்பர தாக்குதல்களைத் தொடர்ந்து, இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்தி பதற்றத்தை குறைக்கும் வகையில் பின்வாங்கி அமைதியாக இருக்க ஒப்புக்கொண்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோர்மூஸ் நீரிணை மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் நடந்த பல தாக்குதல்களுக்கு பிறகு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது போல் தெரிகிறது. இரு நாடுகளும் தங்களுக்கிடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக மாறிமாறி குற்றத்சாட்டின.

இனி கப்பல்கள் ஹோர்மூஸ் நீர்வழிப் பாதையில் சுதந்திரமாக செல்ல முடியும் என்றும், போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் புதிய பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியதாக பிபிசி-ன் அமெரிக்க கூட்டாளியான CBS செய்தி குறிப்பிட்டுள்ளது.

ஹோர்மூஸ் நீரிணையில் தாக்குதல்களை நிறுத்த இரான் ஒப்புக்கொண்டதாக வெளியாகும் இந்த தகவல்கள் குறித்து இரான் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஜூன் 17 அன்று அமெரிக்காவும் இரானும் 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதில், அனைத்து முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்துதல் என்ற அம்சமும் இடம்பெற்றிருந்தது.

இருப்பினும், இரண்டு வாரங்களுக்கு முன்பே எட்டப்பட்ட அந்த போர் நிறுத்த ஒப்பந்தம், சமீப நாட்களில் அமெரிக்கா மற்றும் இரான் இடையே மீண்டும் நடைபெற்ற தாக்குதல்களால் கேள்விக்குறியாகியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை அன்று மீண்டும் தாக்குதல்கள் தொடங்கின. ஹோர்மூஸ் நீரிணையில் சரக்கு கப்பல் மீது இரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. அதன்பிறகு மோதல் மீண்டும் தீவிரமடைந்தது.

கடந்த வார இறுதியில், அமெரிக்கா இரானுக்கு எதிராக தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியது. வணிகக் கப்பல் போக்குவரத்துக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு நேரடி பதிலடியாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்தது. இதில் இரானின் பல்வேறு இலக்குகள் குறிவைக்கப்பட்டன.

சனிக்கிழமையன்று, இரான் இதற்கு பதில் தாக்குதல் நடத்தியது. குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஆனால் இந்தத் தாக்குதல்கள் இலக்குகளை அடையவில்லை என்றும், உயிரிழப்போ அல்லது சேதமோ ஏற்படவில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கு முக்கியமான கடல் பாதையான ஹோர்முஸ் நீரிணை பிப்ரவரி இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், இரான் மீது தாக்குதல் நடத்திய பிறகு இந்த வழித்தடம் மூடப்பட்டது.

வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே ஒரு கட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக மத்தியஸ்தத்தில் ஈடுபட்டது, இது நீடித்த அமைதிக்கான பாதையை உருவாக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது.

ஆனால், தெற்கு லெபனானில் இஸ்ரேல் படைகளுக்கும் இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லா அமைப்புக்கும் இடையிலான தொடர்ச்சியான மோதல்களால், அந்தப் போர் நிறுத்த ஒப்பந்தமும் பலவீனமான நிலையில் இருப்பதாக தெரிகிறது.

ஹெஸ்பொல்லா அமைப்பின் தலைவர் அந்த ஒப்பந்தத்தை நிராகரித்து, லெபனான் அரசாங்கம் நாட்டின் இறையாண்மையை பாதிக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அன்று ஒப்பந்தம் கையெழுத்தான இரண்டு நாட்களுக்குப் பிறகு, தெற்கு லெபனானில் ஹெஸ்பொல்லா பயன்படுத்திய 200 மீட்டர் நீளமுள்ள ஒரு சுரங்கப்பாதையை தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. அந்த சுரங்கப்பாதையில் நூற்றுக்கணக்கான ஆயுதங்கள் இருந்ததாகவும் இஸ்ரேல் கூறியது.

இந்த தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரந்த அளவிலான போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து அமலில் இருக்க வேண்டுமெனில், லெபனானில் நடைபெற்று வரும் மோதல்கள் முடிவுக்கு வர வேண்டும் என்று இரான் வலியுறுத்தியுள்ளது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு