அமெரிக்கா - ரஷ்யா இரண்டில் யாருடைய நெருக்கம் இந்தியாவுக்கு அதிக பயன் தரும்?

காணொளிக் குறிப்பு, ரஷ்யா Vs அமெரிக்கா: எந்த அரசுடனான நெருக்கம் இந்தியாவுக்கு பயனளிக்கும்?
அமெரிக்கா - ரஷ்யா இரண்டில் யாருடைய நெருக்கம் இந்தியாவுக்கு அதிக பயன் தரும்?
பிரசுரிக்கப்பட்டது

பல ஆண்டுகளாக ரஷ்யாவும் அமெரிக்காவும் இந்தியாவின் முக்கிய உத்திசார்ந்த கூட்டாளிகளாக இருந்து வருகின்றன.

அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. மறுபுறம், இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் நீண்டகால நம்பகமான உறவு உள்ளது. பாதுகாப்பு ஒப்பந்தங்கள் முதல் எரிசக்தி விநியோகம் வரை ரஷ்யா இந்தியாவின் முக்கிய கூட்டாளியாக இருந்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே வளர்ந்து வரும் மோதலில் யாருடைய நெருக்கம் இந்தியாவிற்கு அதிக பயனளிக்கும் என்பதுதான் தற்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது கூடுதலாக 25% வரி விதிக்க அறிவித்துள்ளார். இது அமலுக்கு வந்தால், அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதி மீதான வரி 50% ஆக அதிகரிக்கும்.

இந்தியா தனது மொத்த எண்ணெய் தேவையில் 88 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது.

வர்த்தக அமைச்சகத் தரவுகளின்படி, 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் சுமார் 35 சதவீதம் ரஷ்யாவிலிருந்து வந்தது, அதேநேரத்தில் 2018 நிதியாண்டில் இது 1.3 சதவீதமாக மட்டுமே இருந்தது.

ரஷ்யாவிலிருந்து மலிவு விலையில் எண்ணெயை வாங்குவதன் மூலம் இந்தியா ஆண்டுதோறும் 10 பில்லியன் டாலர்களை மிச்சப்படுத்துகிறது என்று குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ்வின் நிறுவனர் அஜய் ஸ்ரீவஸ்தவா நம்புகிறார்.

இது தொடர்பாக பேசிய அவர், "அமெரிக்காவுடன் இந்தியா 41 பில்லியன் டாலர் வர்த்தக உபரி பெற்றுள்ளது. டிரம்பின் 50 சதவீத வரி அமலானால், அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 50 பில்லியன் டாலர் வரை குறையக்கூடும்." என குறிப்பிடுகிறார்.

டிரம்பின் அறிவிப்பால் ஏற்றுமதி குறைவதோடு, வேலைவாய்ப்பு இழப்புகளும் ஏற்படலாம் என குறிப்பிடும் தி இமேஜ் இந்தியா இன்ஸ்டிடியூட்' தலைவர் ராபிந்திரா சச்தேவ், "வரிகள் அதிகரித்தால், குறைவான பொருட்களே அமெரிக்காவிற்குச் செல்லும், இந்தியாவில் வர்த்தகம் பாதிக்கப்படும், வேலையிழப்பும் ஏற்படும்" என்று கூறுகிறார்.

அமெரிக்கா 50 சதவீத வரியைத் தொடரும் பட்சத்தில், இந்தியாவில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் வரை இழப்பு வரலாம் என்று அவர் மதிப்பிடுகிறார்.

இந்த விவகாரத்தில் டிரம்பின் அழுத்தத்திற்கு ஆட்பட்டு ரஷ்யாவுடனான உறவை இந்தியா கெடுத்துக் கொள்ள முடியாது என்று அஜய் ஸ்ரீவஸ்தவா கருதுகிறார்.

"கடந்த கால வரலாறுகளை பார்க்கும்போது நெருக்கடியான காலங்களில், அமெரிக்காவை விட ரஷ்யா இந்தியாவுக்கு உதவியுள்ளது" என்றும் அஜய் கூறுகிறார்.

1971ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரில், அப்போதைய சோவியத் ஒன்றியம் இந்தியாவிற்கு ஆயுதங்கள், ராஜ்ஜீய ஆதரவை வழங்கியதுடன், ஐக்கிய நாடுகள் சபையிலும் உறுதுணையாக நின்றது.

மறுபுறம், அமெரிக்கா பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரித்து, இந்தியப் பெருங்கடலில் இந்தியாவிற்கு எதிராக தனது 7வது கடற்படையை அனுப்பியது.

1998ஆம் ஆண்டு அணு ஆயுத சோதனைக்குப் பிறகும் ரஷ்யா இந்தியாவிற்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்கியது. மேற்கத்திய நாடுகள் இந்தியா மீது பல்வேறு தடைகளை விதித்து வந்த காலம் அது.

"இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நம்பகத்தன்மை பற்றிய கேள்வியும் உள்ளது. இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், அமெரிக்கா அதன் 25 சதவீத கூடுதல் வரியை நீக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை" என அஜய் ஸ்ரீவஸ்தவா குறிப்பிடுகிறார்.

முழு விவரம் காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு