மகளின் ஆபாச வீடியோவை வைரலாக்கிய இளைஞரை கண்டிக்கச்சென்ற ஜவான் கொலை - முழு விவரம் என்ன?

    • எழுதியவர், லக்ஷ்மி பட்டேல்
    • பதவி, பிபிசி குஜராத்திக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

"நான் 10ஆம் வகுப்பு படிக்கிறேன். நல்ல ரிசல்ட் வர வேண்டும் என்பதற்காக கடினமாகப் படித்துக் கொண்டிருந்தேன். நர்ஸ் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் இப்போது எனக்கு படிப்பில் ஆர்வம் இல்லை. என்னால் மேற்கொண்டு படிக்க முடியாது என்று தோன்றுகிறது. நண்பர்களை உருவாக்கிக்கொண்டதால் என் அப்பாவை இழக்கவேண்டி வந்தது. என் வாழ்நாள் முழுவதும் அதை மறக்கவே முடியாது."

பாதிக்கப்பட்ட பதின்பருவசிறுமி அழுது கொண்டே பிபிசியிடம் இவ்வாறு கூறினார்.

மைனரான இவருக்கு ஒரு இளைஞருடன் சமூக ஊடகங்கள் மூலம் நட்பு ஏற்பட்டது. அந்த இளைஞர் சிறுமியின் ஆபாச வீடியோவை வைரலாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த இளைஞரிடம் பேசச்சென்ற எல்லை பாதுகாப்புப் படையில் ஜவான் ஆக இருக்கும் தந்தை கொல்லப்பட்டதுடன், தாக்குதலில் படுகாயமடைந்த சிறுமியின் தம்பி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

இது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.

குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் சிறுமிக்கு ஆறாத வடுவை மனதில் ஏற்படுத்தியுள்ளது.

“நான் நட்பைத்தானே தேடினேன். என் தந்தையை இழக்கும் அளவுக்கு நான் செய்த தவறு என்ன, எனக்கு ஏன் இப்படி நேர்ந்தது?” என்று அவர் தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறார்.

நடந்தது என்ன?

ஆமதாபாத் நகரை ஒட்டியுள்ள கேடா மாவட்டத்தின் நதியாத் தாலுகாவில் உள்ள சக்லாசி கிராமத்தில் டிசம்பர் 24 ஆம் தேதி இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

28 ஆண்டுகளாக BSF-ல் பணியாற்றிய மெலாஜி வகேலா, ராஜஸ்தானில் உள்ள பார்மேருக்கு மாற்றப்பட்டபோது, ​​அவர் 15 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு தனது கிராமத்திற்கு வந்திருந்தார். அப்போது ​10ம் வகுப்பு படிக்கும் தனது மகளின் ஆபாச வீடியோ வெளியாகி வைரலானது தெரிய வந்தது.

வீடியோவை வைரலாக்கிய இளைஞரை கண்டிக்க பிஎஸ்எஃப் ஜவான், அவரின் குடும்பத்தினரிடம் சென்றார்.

வைரலாக்கிய இளைஞர் அங்கு இல்லாத நிலையில் அவரது குடும்பத்தினர் எல்லாவற்றையும் கேட்டு விட்டு மெலாஜி வகேலாவைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதில் அவர் இறந்துவிட்டார் மற்றும் அவரது மகன் பலத்த காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இறந்தவரின் மனைவியான 42 வயதான மஞ்சுளாபென் வகேலா, டிசம்பர் 25 அன்று சக்லாசி காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார்.

தனது கணவர் மெலாஜி வகேலா, இரண்டு மகன்கள் நவ்தீப், ஹனுமந்தா மற்றும் அண்ணன் மகன் சிராக் ஆகியோருடன் தானும், நதியாத்தின் வாணிபுரா கிராமத்தில் உள்ள தினேஷ் ஜாதவின் வீட்டிற்கு அவரது மகன் ஷைலேஷ் என்ற சுனிலை கண்டிப்பதற்காக சென்றதாக புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினேஷ் ஜாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மெலாஜியின் குடும்பத்தினரை தாக்கினர். தினேஷ் ஜாதவ், மெலாஜியின் தலையில் கட்டையால் அடித்ததாகவும், பவேஷ் ஜாதவ், நவ்தீப்பை கத்தியால் தாக்கியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தினேஷ் ஜாதவ், வாணிப்பூரைச் சேர்ந்த அரவிந்த் ஜாதவ், தினேஷின் தந்தை சாபாபாய் ஜாதவ், சச்சின் அர்விந்த் பாய் ஜாதவ், உட்பட 7 பேர் மீது ஐபிசி 302, 307, 323, 504, 143, 143, மற்றும்147 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் புகார் பதிவு செய்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளனர்.

பாதிக்கப்பட்டவரின் வீடியோவை வைரலாக்கியதாகக் கூறப்படும் சுனில் ஜாதவ் என்ற ஷைலேஷ் மீதும் தனிப் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவரின் தாய் என்ன சொல்கிறார்?

பிபிசி குஜராத்தியிடம் பேசிய இறந்த மெலாஜி வகேலாவின் மனைவி மஞ்சுளாபென், "என் மகள் 10-ம் வகுப்பு படிக்கிறாள். என் மகன் அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் வேலை செய்கிறான். என் மகளின் வீடியோவை வாணிபூரில் வசிக்கும் ஷைலேஷ் ஜாதவ் என்ற இளைஞர் பரப்பி உள்ளார்.

இந்த வைரலான வீடியோ மகனின் மொபைலுக்கும் அனுப்பப்பட்டது. என் மகன் எங்களிடம் சொன்னான்." என்று கூறினார்.

“நாங்கள் விசாரித்தோம். என் மகளின் வாழ்க்கை பாழாகாமல் இருக்கும்பொருட்டு அவரை கண்டிப்பதற்காக வாணிப்பூரில் உள்ள ஷைலேஷ் ஜாதவின் வீட்டிற்குச் சென்றோம். வீடியோ ஏன் வைரலானது என்பதைக் கண்டறியச் சென்றோம். வீடியோவை நீக்கும்படி அவரிடம் கேட்டுக்கொள்ளச்சென்றோம்.”

தாக்குதல் குறித்துப்பேசிய மஞ்சுளாபென், ​​"நான், எனது இரண்டு மகன்கள், எனது கணவர் மற்றும் எனது மருமகனும் ஷைலேஷ் ஜாதவ் வீட்டிற்கு சென்றிருந்தோம். நாங்கள் சொன்னதைக் கேட்டவுடன் அவர்கள் எங்களைத் தாக்கினார்கள். என் கணவர் கத்தியால் தாக்கப்பட்டார். எங்களை கொல்ல முயற்சி செய்தனர்,” என்றார்.

"நான் எனது குடும்பத்தினரை அழைத்தேன், அவர்கள் 108 ஆம்புலன்சை அழைத்து மருத்துவமனைக்கு எங்களை அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சையின் போது என் கணவர் இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது.என் உலகமே இருண்டுவிட்டது,” என்று அவர் குறிப்பிட்டார்.

"என் கணவர் மெஹ்சானா BSF இல் பணியாற்றினார். அவர் சமீபத்தில் ராஜஸ்தானில் உள்ள பார்மேருக்கு மாற்றப்பட்டார். அதனால் அவர் பதினைந்து நாட்கள் விடுமுறையில் வந்திருந்தார்."என்று மஞ்சுளா பென் தெரிவித்தார்.

"அவர் விடுமுறையில் இருந்த போது நிகழ்ந்த ​​இந்தக்கொடூரமான தாக்குதலில் நாங்கள் அவரை  இழந்துவிட்டோம். என் மகன் பலத்த காயம் அடைந்துள்ளான். எங்கள் குடும்பத்துக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்."என்றார் அவர்.

நட்பு எப்படி ஏற்பட்டது?

"இந்த இளைஞரை சமூக ஊடகங்கள் மூலம் எனக்குத்தெரியும். அவர் என்னுடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டார். அவர் என் இன்ஸ்டாகிராம் கணக்கின் கடவுச்சொல்லை எடுத்துக்கொண்டு என் கணக்கிலிருந்து தானாக மெசேஜ் செய்து அதற்கு பதிலும் அளிப்பார்,” என்று பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்தார்.

"பின்னர், நீ என்னை சந்திக்க வரவில்லை என்றால், நான் உன்னுடைய chat ஐ வைரலாக்கி விடுவேன் என்று அவர் என்னை பிளாக்மெயில் செய்யத் தொடங்கினார், நான் பயந்துபோனேன். அதன் பிறகு நான் அவரைச் சந்திக்கச் சென்றேன். ஒரு மாதத்திற்கு முன்பு அவரை சென்று பார்த்தேன்."

"அந்த நேரத்தில் அவர் என்னுடன் வலுக்கட்டாயமாக புகைப்படம் எடுத்து என் வீடியோவை எடுத்தார். இந்த வீடியோ வைரலானது."

போலீஸ் சொல்வது என்ன?

"ஷைலேஷ் ஜாதவ் வீடியோவை வைரலாக்கினார். மகளின் தாய், தந்தை மற்றும் இரண்டு சகோதரர்கள் குற்றம்சாட்டப்பட்டவரின் வீட்டிற்கு அவரை கண்டிக்கச்சென்றனர்,” என்று நதியாத் காவல்துறை துணை ஆணையர் பாஜ்பாய் தெரிவித்தார்.

"பேசிக்கொண்டிருந்தபோதே, ஷைலேஷின் தந்தை தினேஷ்பாய் சப்பி, அரவிந்த்பாய், பாவேஷ் ஆகியோருடன் சேர்ந்து கத்தி, தடி மற்றும் மண்வெட்டியால் அவர்களை தாக்கினார்கள்.”

இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த சிறுமியின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இளைய சகோதரர் நவ்தீப் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் விசாரணையை சக்லாசி காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் செய்துள்ளார். எஃப்எஸ்எல் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் தடயங்களை சேகரித்த போலீசார் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்தனர்.

"குஜராத் மாநிலத்தில் ஒரு இளைஞர் பிஎஸ்எஃப் ஜவானின் மகளை ஆபாச வீடியோ எடுத்து வைரலாக்கியுள்ளார். பிஎஸ்எஃப் ஜவான் இளைஞரின் வீட்டிற்குச் சென்றபோது ​​​​ஜவான் கொல்லப்பட்டார். இந்தச் செய்தி பற்றி எந்த விவாதமும் இல்லை. பட்டப்பகலில் ஒரு ஜவான் கொல்லப்பட்டது நம் அனைவரின் முகத்திலும் அறைந்தது போல் உள்ளது. குண்டர்கள் எவ்வளவு துணிச்சலாக உள்ளனர்!" என்று இந்த சம்பவம் குறித்து டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிபிசி குஜராத்தியிடம் பேசிய சக்லாசி காவல் நிலையத்தின் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும் விசாரணை அதிகாரியுமான ஜிதேந்திர சிங் சம்பாவத், "குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வீடியோவை வைரலாக்கியவர் வயது வந்த இளைஞர்,” என்று கூறினார். 

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: