You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 'என் பெயரை இழுக்காதீர்கள்' - நடிகை திரிஷா கண்டனம் ஏன்?
தவெக தலைவர் விஜய் குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் முன்வைத்த விமர்சனத்திற்கு அரசியல் வட்டாரத்தில் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, கனிமொழி, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பெண் தலைவர்கள் கட்சி பேதமின்றி அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், திரிஷா சார்பில் வழக்கறிஞர் நித்யாயேஷ் நட்ராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "மாநிலத்தின் அரசியல் தளத்தில் உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒருவரிடமிருந்து இத்தகைய அருவருக்கத்தக்க மற்றும் தேவையற்ற கருத்தை என் வாடிக்கையாளர் (திரிஷா) எதிர்பார்க்கவில்லை.
அவருக்கு எந்தவித அரசியல் கட்சியுடனும் தொடர்பு இல்லை என்றும் அதற்கான உத்தேசமோ இல்லை என்பதை ஏற்கெனவே அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அரசியல் என்று வரும்போது கடந்த காலங்களில் எடுக்கப்பட்டதைப் போலவே நடுநிலையான நிலைப்பாட்டையே அவர் எப்போதும் எடுத்துள்ளார்.
தன்னுடைய திறமை வாயிலாகவே தான் அறியப்பட வேண்டும் என்றும் எந்தவித அரசியல் தொடர்புடனும் அல்ல என்றும் அவர் விரும்புகிறார். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பொது கருத்து அல்லது விவாதத்திற்கான ஒன்றாக மாறிவிடக் கூடாது. பொது கருத்துகளை வெளியிடும்போது உயர் பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்புணர்வை கடைபிடிக்க வேண்டும்.
அவருக்கு தொடர்பில்லாத விஷயங்களில் என் வாடிக்கையாளரின் பெயரை இணைத்துப் பேசப்படக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு