கனடாவில் படிக்க இந்திய மாணவர்களுக்கு செலவு இனி இரட்டிப்பாகும் - புதிய விதிகள் என்ன?

    • எழுதியவர், சரப்ஜித் சிங் தலிவால்
    • பதவி, பிபிசி நிருபர்
  • பிரசுரிக்கப்பட்டது

படிப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து கனடாவுக்கு வரும் மாணவர்களுக்கு அந்நாடு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள், மாணவர்கள் கனடாவுக்கு செல்வதை அதிக செலவானதாகவும் கடினமாகவும் மாற்றும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

புதிய விதிகளின்படி, கனடா அரசாங்கம் ஜி.ஐ.சி. (GIC - உத்தரவாத முதலீட்டுச் சான்றிதழ்) தொகையை இரட்டிப்பாக்கியுள்ளது. மேலும், பணி அனுமதியிலும் (Work permit) பல மாற்றங்களை செய்துள்ளது.

பிற நாடுகளில் இருந்து கனடாவுக்குச் செல்லும் மாணவர்கள் தங்கள் பொருளாதார தகுதியை நிரூபிக்க குறிப்பிட்ட ஜி.ஐ.சி. தொகையை டெபாசிட் செய்ய வேண்டும்.

இந்த விதிகள் மாணவர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய விதிகள் ஜனவரி 2024 முதல் அமலுக்கு வரும்.

கனடாவுக்கு வரும் மாணவர்களுக்கு கல்வி கற்க சரியான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதில் உறுதியாக இருப்பதாக, கனடாவின் குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் படிக்க செலவு இனி இரட்டிப்பாகும் - புதிய விதிகள் என்ன?

மாணவர் விசாவில் கனடாவுக்கு செல்லும் மாணவர்களுக்கு தங்குமிடத்திற்கான குறைந்தபட்சத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜி.ஐ.சி-யின் பெயரில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை, கனடாவில் வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட மாணவர்களிடம் போதுமான பணம் உள்ளது என்பதை நிரூபிப்பதாகும்.

புதிய விதிகளின்படி, முன்பு 10 ஆயிரம் டாலர்களாக இருந்த ஜி.ஐ.சி. தொகை இப்போது 20,635 டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது, கனடா செல்லும் மாணவருக்கு முன்பு 8 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. ஆனால், புதிய விதிகளின்படி அதற்கு தோராயமாக 17 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் (முன்பிருந்ததைவிட இருமடங்கு) தேவைப்படும்.

கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் மார்க் மில்லர் கருத்துப்படி, புதிய ஜி.ஐ.சி. விதிகள் ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வரும்.

மாணவர்களுக்கு தவணை முறையில் வழங்கப்படும் கல்விக் கட்டணமும் இதில் அடங்கும்.

மார்க் மில்லரின் கூற்றுப்படி, கனடாவில் வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, கனடாவுக்கு வரும் மாணவர்கள் இங்கு தங்குவதில் சிரமம் ஏற்படாத வகையில் ஜி.ஐ.சி. கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

பணி அனுமதி

இதுதவிர, கனடாவில் இருக்கும்போது மாணவர்கள் எவ்வளவு மணி நேரம் வேலை செய்யலாம் என்பது குறித்த விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாணவர் விசாவில் கனடாவுக்கு வரும் மாணவர்கள் வாரத்தில் 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய முன்பு அனுமதிக்கப்பட்டனர். பின்னர், மாணவர்களை முழுநேர வேலை செய்ய கனடா அரசாங்கம் அனுமதித்தது.

இந்த விதி டிசம்பர் 31, 2023 வரை செயல்படுத்தப்பட்டது. இது இப்போது கனடா அரசாங்கத்தால் ஏப்ரல் 30, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது விதி

இந்த விதி பணி அனுமதி (Work permit) பற்றியது. கொரோனா தொற்றுநோய் காலகட்டத்தில் பணியாளர்கள் அதிகம் தேவைப்பட்டதால், பணி அனுமதிகளை தற்காலிகமாக 18 மாதங்களுக்கு நீட்டிப்பதாக கனடா அறிவித்தது.

பொதுவாக, கனடாவில் இரண்டு ஆண்டுகள் படிக்கும் ஒருவர், பட்டப்படிப்புக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் வேலை செய்வதற்கான அனுமதியைப் பெறுவார். மூன்றாண்டு அனுமதி காலாவதியாகும் நபர்கள், இந்த விதியின் மூலம் மேலும் சில காலம் பணி செய்ய முடியும்.

ஆனால், 18 மாதங்களுக்கு பணி அனுமதி வழங்க வேண்டும் என்ற விதியும் ஜனவரி முதல் ரத்து செய்யப்பட்டது.

ஆனால், டிசம்பர் 31, 2023 அன்று பணி அனுமதி காலாவதியாகும் நபர்கள் 18 மாத அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

சண்டிகர் குடிவரவு நிபுணர் ரூபிந்தர் சிங் கூறுகையில், மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் கனடா செல்லும் மாணவர்களிடம் புதிய விதிகளின் தாக்கம் இருக்கும் என தெரிவித்தார்.

இந்த புதிய விதிகளின் காரணமாக கனடா செல்ல விரும்பும் ஒவ்வொரு மாணவரும் தற்போதுள்ளதை விட ஆறு முதல் ஏழு லட்சம் ரூபாய் அதிகமாக வைத்திருக்க வேண்டியிருக்கும் என்கிறார் அவர்.

கனடா ஒரேயடியாக இந்த தொகையை அதிகரிக்காமல் படிப்படியாக உயர்த்தினால், மாணவர்கள் இவ்வளவு பாதிக்கப்பட மாட்டார்கள் என்கிறார் ரூபிந்தர் சிங்.

கனடாவில் ஜி.ஐ.சி. தொகை குறைவு என்பதால், அந்நாட்டுக்கு செல்வதற்குத்தான் மாணவர்கள் முன்னுரிமை அளித்தனர்.

“ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு மாணவர் விசாவில் செல்ல அதிக பணம் தேவைப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த நாடுகள் ஆதார் தகவல்களையும் கேட்கின்றன. அதேசமயம் கனடாவில் அத்தகைய தகவல்களை வழங்க வேண்டிய அவசியம் இல்லை” என்கிறார் ரூபிந்தர்.

இந்திய மாணவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?

கனடாவுக்கு செல்லும் சர்வதேச மாணவர்களில் பெரும்பகுதியினர் இந்தியர்கள்.

2022-ஆம் ஆண்டில், கனடாவுக்கு செல்லும் மாணவர்களில் இந்திய மாணவர்கள் அதிகபட்சமாக 40 சதவிகிதம் ஆவர். அவர்களில் பெரும்பாலானோர் குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

குடிவரவு நிபுணர் ரூபிந்தர் சிங் கருத்துப்படி, ஜி.ஐ.சி-யின் அதிகரிப்பால், கனடா செல்ல விரும்பும் மாணவர்கள் பெரும் தாக்கங்களை சந்திப்பர்.

கனடாவில் சுமார் 14 லட்சம் இந்திய சமூகத்தினர் வாழ்கின்றனர். கனடா அரசாங்கத்தின் 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கனடாவில் குஜராத்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை 1,38,985. இந்த கணக்கெடுப்பில், கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்கள் சேர்க்கப்படவில்லை.

கனடாவின் மக்கள்தொகை வெகுவாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஏழு தசாப்தங்களாக இந்தளவுக்கு மக்கள்தொகை அதிகரிக்கவில்லை. கடந்தாண்டு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட 12 லட்சம் புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வந்தனர்.

நாட்டின் மக்கள்தொகையும் மூன்று சதவீதம் என்கிற அளவில் அசாதாரண அதிகரிப்புடன் நான்கு கோடிக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு கனடாவில் 4.69 லட்சம் பேருக்கு நிரந்தர குடியிருப்பும், 7 லட்சம் பேருக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்களும் அடங்குவர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)