யுக்ரேன் போர் நிறுத்த முன்மொழிவு பற்றி கேள்வி எழுப்பும் புதின் - அவரது நோக்கம் என்ன?

யுக்ரேன் போர் நிறுத்த முன்மொழிவு பற்றி கேள்வி எழுப்பும் புதின் - அவரது நோக்கம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

ரஷ்யா போர் நிறுத்தத்துக்கு தயாராக உள்ளது. ஆனால் அதில் நுட்பமான விஷயங்கள் உள்ளன என ரஷ்ய அதிபர் புதின் கூறுகிறார். வியாழக்கிழமை ரஷ்ய அதிபர் மாளிகையில் அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் உடனான பேச்சுவார்த்தைகளுக்கு முன்பு அவர் குறிப்பிட்ட அந்த நுட்பமான விஷயங்கள், 30 நாள் போர்நிறுத்தம் குறித்த எந்தவொரு நம்பிக்கையையும் தகர்த்துவிடும். உண்மையில் புதின் போர் நிறுத்தத்தை விரும்புகிறாரா அல்லது திட்டமிட்டு காய் நகர்த்துகிறாரா?

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு துவங்கியதில் இருந்தும், ஏன் அதற்கு முன்பும் இந்த கோரிக்கைகளை புதின் வைத்திருந்தார். யுக்ரைன் மற்றும் அதன் மேற்கத்திய கூட்டாளிகளுக்கு, அந்த கோரிக்கைகளில் பல விஷயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை அல்லது நிறைவேற்ற முடியாதவை.

போர் நிறுத்தத் திட்டங்களுடன் நாங்கள் உடன்படுகிறோம் என்று புதின் நேர்மறையாகவே பேச தொடங்கினார் புதின். ஆனால், கண்டிப்பாக இந்த போர் நிறுத்தம் நீண்டகால அமைதிக்கு வழிவகுத்தல் மற்றும் பிரச்னைக்கான மூல காரணங்களை அகற்றும் வகையில் இருக்க வேண்டும் என முடித்தார்.

நீண்டகால அமைதிக்கான தேவையை யாரும் மறுக்க மாட்டார்கள். ஆனால் போரின் மூல காரணங்கள் பற்றி புதின் குறிப்பிடும் விஷயங்கள், ரஷ்யாவின் வளையத்தை தாண்டி, தாம் ஒரு இறையாண்மை கொண்ட நாடாக இருக்க வேண்டும் என்ற யுக்ரேனின் விருப்பத்தை அடிப்படையாக கொண்டவை.

யுக்ரைன் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறது ஆனால் புதின் யுக்ரேனை ஒரு நாடாகக் கருதுவதையே தொடர்ந்து மறுக்கிறார்..யுக்ரேனுக்கு நேட்டோ உறுப்பினர் அங்கீகாரம் வழங்குவது குறித்து அதிபர் டிரம்ப் ஏற்கனவே சந்தேகம் எழுப்பியுள்ளார். இந்தச் சூழலில் தான் அவர் குறிப்பிடும் நுட்பமான விஷயங்கள் இருக்கின்றன.

அதாவது, யுக்ரேன் தனது ராணுவத்தை வலுப்படுத்துவதையும், ஆயுதங்களை மீண்டும் நிரப்புவதையும் புதின் தடுக்க விரும்புகிறார். அப்படியானால் மேற்குலக நாடுகளிடமிருந்து எந்த ஆயுத விநியோகமும் இருக்கக்கூடாது. இதை உறுதி செய்யப்போவது யார் என புதின் அறிய விரும்புகிறார்.

இந்தப் போரின் தொடக்கத்திலிருந்தே, புதின் யுக்ரேன் தனது ராணுவ சக்தியை குறைக்கச் சொல்கிறார். ஆனால், இதை யுக்ரேன் மற்றும் அதன் நட்பு நாடுகள் வெறுக்கின்றன.

ரஷ்யா தனது படைகளை மீண்டும் ஆயுதமயப்படுத்துவதையோ அல்லது அணிதிரட்டுவதையோ நிறுத்த ஒப்புக்கொள்ளுமா? அதற்கான வாய்ப்பு நம்பக் கூடியதாக இல்லை. கிரெம்ளினில் செய்தியாளர்களிடம் புதின் பேசியபோது, அது குறித்த எந்த அறிகுறிகளும் இல்லை.

கடந்த ஆகஸ்ட் முதல் யுக்ரேனால் பகுதியளவு ஆக்கிரமிக்கப்பட்ட ரஷ்ய எல்லைப் பகுதியான குர்ஸ்க் சென்று வந்த பிறகு தற்போது புதின் நம்பிக்கையுடன் காணப்படுகிறார். ஏனெனில் அங்கு வெற்றிக்கு மிக அருகில் ரஷ்யா இருப்பதாக தெரிகிறது.

தற்போது தான் வலிமையான நிலையில் இருந்து பேச்சுவார்த்தை நடத்துவதாக உணரும் புதின், அதை இழக்க விரும்பவில்லை.

30 நாட்களுக்கு ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தினால், அதன் அர்த்தம் என்ன? அங்குள்ள அனைவரும் போரிலிருந்து வெளியேறுவார்களா? என புதின் கேள்வி எழுப்புகிறார்.

யுக்ரேன் கைப்பற்றிய மிகப்பெரிய நகரமான சுட்ஜாவை தற்போது முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது. யுக்ரேனிடம் அங்கு எஞ்சியிருப்பது சிறு துண்டு மட்டுமே என புதின் கூறுகிறார். இந்தச் சூழலில் ரஷ்யா ஏன் யுத்தத்தை நிறுத்த வேண்டும்?

வரவிருக்கும் நாட்களில் சுற்றி வளைக்கப்பட்டால், யாரும் வெளியேறவே முடியாது. சரணடைவது அல்லது இறப்பது என இரண்டு வழிகள் மட்டுமே இருக்கும் என புதின் கூறினார்.

தற்போது போர் நடந்து வரும் 1,000 கிமீ முழுவதும் இதே நிலைதான் என்றும் அனைத்து இடங்களிலும் நிலைமை வேகமாக மாறி வருவதாகவும், ரஷ்ய படைகள் அனைத்து பகுதிகளிலும் முன்னேறி வருவதாகவும் புதின் கூறினார்.

ஆனால் நிலவரம் அப்படியல்ல, சமீபத்தில் கிழக்கில் ரஷ்யா சில வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், பெரும்பாலான போர்முனைகளில் இருதரப்பில் யாரும் யாருமே முன்னேற முடியாத சூழலே நிலவுகிறது.

ரஷ்யாவின் கைகள் தற்போது ஓங்கி இருப்பதை 30 நாள் போர்நிறுத்தம் இழக்கச் செய்யும் என்றும் யுக்ரேன் மீண்டும் அணிதிரள அது உதவும் என்றும் புதின் நம்புகிறார். அப்படியான விஷயங்கள் ஏதும் நடக்காது என்பதை உத்தரவாதம் அளிக்கப் போவது யார் என புதின் கேட்கிறார்.

வியாழக்கிழமை மாலை புதின், டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பை சந்தித்து கூடுதல் தகவல்களை வழங்கியதாக புதினின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இறுதியில், புதினுக்கு மிக முக்கிய உரையாடல் அமெரிக்க அதிபர் டிரம்புடன் இருக்கும்.

"விட்காஃப் அனைத்து தகவல்களையும் வழங்கியவுடன் போர் நிறுத்தத்துக்கான நேரம் குறித்து நாங்கள் உடன்படுவோம் என்று புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்.

வியாழக்கிழமை நடந்த சந்திப்பில் புதினின் நோக்கம், போர் நிறுத்தத்திற்கான பாதை கிட்டத்தட்ட சாத்தியமற்ற நிபந்தனைகளால் நிறைந்துள்ளது என்ற செய்தியை உலகுக்கு காட்டுவதாகவே தெரிகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)