வால்பாறையில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - பதைபதைக்க வைக்கும் காணொளி

வால்பாறையில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - பதைபதைக்க வைக்கும் காணொளி
பிரசுரிக்கப்பட்டது

வால்பாறையில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறையில் இருந்து பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதில் வால்பாறை பேருந்து நிலையத்தில் இருந்து வெல்லமலை எஸ்டேட் பகுதிக்கு பேருந்தை செல்வகுமார் என்பவர் கடந்த 16-ஆம் தேதி மாலை இயக்கினார்.

அப்போது வெல்லமலை எஸ்டேட் பகுதிக்கு சென்று விட்டு பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து மீண்டும் வால்பாறை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதே போல், வால்பாறையில் இருந்து கோவைக்கு சென்ற பேருந்தை ராமகிருஷ்ணன் என்பவர் இயக்கி வந்தார்.

இந்நிலையில் வெல்லமலை பகுதியில் இருந்து வந்த அரசு பேருந்தில் பிரேக் செயலிழந்த நிலையில் சாலையில் நின்றிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியவாறு, எதிரே வந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்தில் பயணித்த 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பேருந்து சாலையில் நின்ற வாகனங்கள் மீது மோதி எதிரே வந்த அரசு பேருந்து மீதும் நேருக்கு நேர் மோதிய சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பேருந்துக்குள் நேருக்கு நேர் மோதும் இந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

வால்பாறையில் இருந்து பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வரும் பழைய மற்றும் புதிய அரசு பேருந்துகளில் அதிக அளவில் பழுதடைந்து காணப்பட்டு மழைக்காலங்களில் பேருந்துக்குள் மழை நீர் வடிவதாகவும், பிரேக்குகள் செயலிழந்து அடிக்கடி இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாகவும் வால்பாறை பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி மேலும் இது போன்ற விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் சரியான பராமரிப்பு உள்ளதா என்று பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)